எட்டாம் வகுப்பில் ஒரு மிருகக்காட்சி சாலை
பள்ளிக்கூடம்
என்பது சரஸ்வதி தேவியின் ஆலயம் என்று நாமெல்லாம் படித்துப் படித்துப் பழகிய
பழமொழி. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் நடந்திருக்கும் இந்த கொடூரம், அந்த
ஆலயத்தின் கர்ப்பக்கிரகத்திற்குள்ளேயே சாத்தான்கள் நுழைந்துவிட்டனவோ என்ற அச்சத்தை
ஏற்படுத்துகிறது.
எட்டாம்
வகுப்பு படிக்கும் சிறுவன். அவனது பிறப்புறுப்பில் மிளகாய் பொடி தூவுவதும்,
ரப்பர் பேண்டால் அடிப்பதும், வகுப்பறையிலேயே
நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்வதும் என்ன மாதிரியான மனநிலை? அதுவும் ஓராண்டாக இந்த அட்டூழியம் தொடர்ந்து நடந்திருக்கிறது. ஒரு நாள்
அல்ல, இரண்டு நாள் அல்ல, ஓராண்டு காலம் அதாவது 365 நாட்கள்! இந்த ஓராண்டில் அந்தப் பிஞ்சு நெஞ்சம் அடைந்த வேதனையை, அவமானத்தை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.
இதில்
கொடுமை என்னவென்றால், இந்த வன்முறையைச் செய்தது வேறு யாரோ
வெளியாட்கள் அல்ல; அவனோடு ஒரே வகுப்பில் அமர்ந்து பாடம்
படித்த சக ஒன்பது மாணவர்கள்! திரைப்படங்களிலும் இணையதளங்களிலும் பெருகிவரும்
வன்முறைக் கலாச்சாரம் இன்று சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் எத்தகைய விஷத்தைக்
விதைத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.
கைது,
போக்சோ வழக்கு, கூர்நோக்கு இல்லம் இதெல்லாம்
சட்டம் தன் கடமையைச் செய்யும் வழக்கமான பாதைகள். ஆனால், எழும்
உண்மையான கேள்வி வேறு. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் இத்தனை காலம் என்ன
செய்துகொண்டிருந்தார்கள்?
ஒரு
மாணவன் மன உளைச்சலால் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய வேண்டியது யார் பொறுப்பு? கிராப்ட்
வகுப்பில் ஏதோ தெரியவந்ததாம், உடனே பெற்றோருக்குத் தகவல்
சொன்னார்களாம். சரி, அதன்பின் உடனடியாகக் காவல் துறைக்குத்
தகவல் தெரிவிக்காதது ஏன்? தலைமை ஆசிரியை காட்டிய இந்தத்
தாமதமும் அலட்சியமும் குற்றத்திற்குத் துணைபோவதற்குச் சமமில்லையா?
கல்வி
அதிகாரிகளும், "விளக்கம் கேட்டிருக்கிறோம், அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுப்போம்" என்று வழக்கமான பாணியில்
அறிக்கைவிட்டு நகர்கிறார்கள்.
பிள்ளைகளைப்
பள்ளிக்கு அனுப்புவது கல்வி கற்கத்தானே தவிர, சக மாணவர்களிடம்
சித்ரவதைப் பட்டு உடலும் மனமும் சிதைந்து போவதற்கில்லை. இந்தச் சம்பவத்தில்
சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்குச் சீர்திருத்தப் பயிற்சியும், பாதிக்கப்பட்ட
சிறுவனுக்கு முறையான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சையும் உடனடியாக அளிக்கப்பட
வேண்டும். அதைவிட முக்கியமாக, பள்ளி வளாகங்களுக்குள்
நடக்கும் இதுபோன்ற "ராகிங்" மற்றும் பாலியல் கொடுமைகளைக் கண்டறியவும்
தடுக்கவும் பள்ளிகளில் வலுவான கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்கள்
வெறும் பாடங்களை நடத்துவதோடு தங்கள் கடமை முடிந்தது என்று ஒதுங்கிவிடக் கூடாது;
மாணவர்களின் நடத்தையையும், மனநிலையையும்
கூர்ந்து கவனிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. இந்த விளாத்திகுளம் சம்பவம்,
தமிழகக் கல்வித் துறைக்கு விழுந்த பலத்த சாட்டையடி! இனியாவது
தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளப் போகிறார்களா? அல்லது
கும்பகோணம் தீ விபத்து போல ஒரு சம்பவம் நடந்து நாட்டையே உலுக்கும் வரை தூங்கிக்
கொண்டே இருக்கப் போகிறார்களா?
*****

No comments:
Post a Comment