4 Sept 2026

தீண்டலின் சமன்பாடு

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 26

தீண்டலின் சமன்பாடு

மழை பெய்துகொண்டிருந்தது. அவன் செமஸ்டர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

கையில் ஜேம்ஸ் மங்க்ரேஸின் டோபாலஜி புத்தகம்.

அருகே இருந்த தேநீர்க் கோப்பையில் தேநீர் ஆறிப்போயிருந்தது.

"சூடா ஒரு கப் டீ போட்டுத் தரவா?"

குரல் கேட்டுத் திரும்பினான்.

அவள்.

ஈரம் சொட்டும் குடையைச் சுருக்கி ஓரமாய் வைத்துவிட்டு, தன் சுடிதார் ஷாலைத் தட்டிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கணமே, அவனது மனதுள் இருந்த டோபாலஜியின் சிக்கலான தேற்றத்தின் சமன்பாடுகளும், நிரூபணங்களும் காணாமல் போயின.

"தேங்க்ஸ். ஆனா நீ ஏன் இந்த மழையில வந்த?"

"உன்னைப் பாக்கத்தான்."

அவள் சட்டென்று அவனருகே வந்தாள். நாற்காலியில் அமர்ந்திருந்த அவனது தோளைத் தொட்டு, லேசாக உரசியபடி நின்றாள்.

அந்த நொடி,

அவனது உடலுக்குள் ஏதோ ஒரு மின்கசிவு. காலை முதல் ஒரு கணிதத் தேற்றத்தின் நிரூபணம் புரியாமலும், செமஸ்டர் தேர்வை எதிர்கொள்ள வேண்டியிருந்த மன அழுத்தத்தாலும் செத்துப்போயிருந்த அவனது நரம்புகள் ஒவ்வொன்றும் விழித்துக்கொண்டன. செத்துப் போன உயிரணுக்களுக்குள் யாரோ ரீசார்ஜ் செய்தது போன்ற உணர்வு.

அவள் கைவிரல்கள் அவனது தோள்பட்டையில் ஊர்ந்தபோது, அவனுக்குத் தோன்றியது, இவள் தோள்கள் வெறும் சதையாலும் எலும்பாலும் ஆனவை அல்ல. ஏதோ தேவலோகத்து அமிழ்தத்தால் செய்யப்பட்டவை. தொடும்போதெல்லாம் செத்துப்பிழைக்க வைக்கிறது!

அவள் சிரித்தாள். "என்ன யோசனை?"

"ஒன்னுமில்லை. வள்ளுவர் ரெண்டு வரி எழுதிருக்கார் தெரியுமா?

"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள்."                 (குறள், 1106)

அப்படின்னு. அதாவது, ஒவ்வொரு முறை தொடும்போதும் செத்துப்போன உயிர் திரும்பத் தளிர்க்குதாம். அதனால அந்தப் பொண்ணோட தோள் அமிழ்தத்தால செய்யப்பட்டதுங்கறார்."

"என்ன பாஸ்? நீங்க டோபாலஜி படிக்கிறீங்களா? இல்ல, அந்த அதுக்குள்ள மறைச்சு வெச்சு வேற எதாச்சும் படிக்கிறீங்களா? சந்தேகமா இருக்கே?"

"சந்தேகமே வேண்டாம். புக்தான் டோபாலஜி. அது முழுக்க உன் பேஷியாலஜிதான். 2000 வருஷத்துக்கு முன்னாடி வள்ளுவர் எழுதியது. ஆனா இப்போ எனக்கு அது சயின்ஸ் பிக்சன் மாதிரி இல்ல. பியூர் எக்ஸ்பீரியன்ஸ்."

"ஓ! அப்படியா?" என்றபடி அவள் மீண்டும் அவனது தோளை அழுத்தமாகப் பற்றினாள்.

"தொடுதலில் ஒரு மாயமிருக்கிறது. அதுவும் காதலியின் தீண்டல்? சும்மா சொல்லக்கூடாது, அது ஒரு தனி ஹை வோல்டேஜ் எலக்ட்ரிக் ஷாக்."

"கணிதரே! கொஞ்சம் கவிஞரை ஓரங்கட்டி விட்டு கணித்ததைப் பாருங்க. செமஸ்டரில் கவிதை எழுத முடியாது." அவள் புன்னகைத்துவிட்டு அவனது தேநீர் கோப்பையை எடுத்தாள்.

"கணிதம் என்பது இயற்கையின் கவிதை; கவிதை என்பது மனித மனத்தின் கணிதம்."

"இருங்க மிஸ்டர் வள்ளுவர் வழி காதலரே! நான் போய் சூடா போட்டுட்டு வர்றேன். உங்கள் உயிர் இன்னும் கொஞ்சம் நல்லா தளிர்க்கட்டும்!"

அவள் சமையலறைக்குச் செல்ல, அவன் புதுத் தெம்போடு டோபாலஜி புத்தகத்தின் தாள்களைத் திருப்பினான். ஆறு மணி நேரமாக திக்கு திசை புரியாத பல தேற்றங்களுக்கான நிரூபணங்கள் இப்போது அவனுக்கு அத்தனை சுலபமாக விளங்க ஆரம்பித்தன.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment