திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 13
தலைகுனிதலின் தாவரவியல் தத்துவம்!
மழைக்கால மாலை நேரம்.
திருவாரூர், தியாகராஜர் கல்லூரி
நூலகத்தின் அமைதியான சூழல்.
வெளியே மழைத்துளிகளின் ஓசை. உள்ளே
பழைய புத்தகங்களின் மணமும், மின்விசிறி சுழலும் மெல்லிய இரைச்சலும் மட்டுமே.
மூலை மேஜையில் அவன் அமர்ந்திருந்தான்.
கையில் தருமபுர ஆதினத்தின் ஞானசம்பந்தம் பதிப்பகம் வெளியிட்ட தண்டபாணி தேசிகர் எழுதிய
திருக்குறள் உரைவளம். ஆனால் மனதுக்குள் வேறொரு காதல் புத்தகம் ஓடிக் கொண்டிருந்தது.
கடந்த மூன்று மாதங்களாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பேசிப் பழகியதில்லை. ஒரே
கல்லூரி, ஆனால் வேறு வேறு துறை.
கடிகாரத்தைப் பார்த்தான்.
3:15.
வழக்கமான நேரம்.
நூலகத்தின் மரக்கதவு மெதுவாகத்
திறக்கும் சத்தம் கேட்டது.
வந்தாயிற்று.
அதே வெளிர் மஞ்சள் நிற சுடிதார்.
கையில் சில குறிப்பேடுகள், புத்தகங்கள். நூலகத்திற்குள் நுழைந்தவள், இயல்பாகச் சுற்றும்
முற்றும் பார்த்தாள்.
அவள் கண்கள் அவனைக் கண்டுகொண்டன.
நேரம் அப்படியே உறைந்து போன ஒரு
நொடி அது.
அவள் அவனைப் பார்த்தாள். அந்தப்
பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள். "எனக்குத் தெரியும் நீ இங்கேதான் இருப்பாய் என்று",
"ஏன் நேற்று வரவில்லை?", "இன்றைக்கு ஆய்வகத்தில் செம சோதனை தெரியுமா?"
- வார்த்தைகளே இல்லாமல் செய்திகள் வாட்ஸ்அப் மெசேஜை விட வேகமா அவனுக்குப் பரிமாற்றம்
ஆயின.
அடுத்த நொடி.
சட்டென்று தன் பார்வையை விலக்கிக்
கொண்டாள் அவள். கண்கள் கீழே இறங்கின. கையில் இருந்த புத்தகங்களை இறுகப் பிடித்துக்கொண்டு,
தலையைக் கொஞ்சம் சாய்த்து, தரையைப் பார்ப்பது போல் குனிந்தாள். உதட்டின் ஓரத்தில் ஒரு
குறும்புப் புன்னகை. ஒரு மெல்லிய வெட்கம்.
அவ்வளவுதான்.
திருவள்ளுவர் இதை அப்படியே
2000 வருடத்துக்கு முன்பே ஒரு தாவரவியல் கோட்பாடு போலவே எழுதி வைத்துள்ளார்.
"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்." (குறள், 1093)
விளக்கம் ரொம்ப எளிமையானது. காய்ந்து
போன ஒரு செடியைக் காப்பாற்ற வேரில் தண்ணீர் ஊற்றினால் போதும். பிழைத்துக் கொள்ளும்.
ஆனால், காதல் என்ற விசித்திரமான பயிர் இருக்கிறதே, அதற்கு மண்ணும் தேவையில்லை, மழையும்
தேவையில்லை.
காதலிக்கும் அந்தப் பெண் பார்க்க
வேண்டும். காதலன் பார்ப்பதை உணர்ந்து சட்டென்று தலையைக் குனிய வேண்டும். வெட்கப்பட்டுத்
தலைகுனிகிற ஒரே ஒரு பார்வைதான், காய்ந்து போய்க் கிடக்கும் ஆணின் மனம் என்கிற பயிருக்கு
ஊற்றப்படும் அமுதச் சொட்டு.
அவள் தலையைக் குனிந்த அந்த ஒரு
நொடியில், அவனின் மனதுக்குள் ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. கடந்த ஒரு வாரமாக
செமஸ்டர் தேர்வுக்குத் தயாரிப்பில் இருந்த
சோர்வு, நூலகர் எச்சரித்த பயம், அசைன்மென்ட் எரிச்சல் என எல்லாமே சூரியனைக் கண்ட பனித்துளி
போல மறைந்துவிட்டன.
அவள் ஒரு மேஜை அருகே சென்று உட்கார்ந்தாள்.
ஒரு குறிப்பேட்டைப் பிரித்து வைப்பது போல நடித்தாள். ஆனா அவள் விரல்கள் நடுங்குவது
அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
அவன் மெதுவாக எழுந்தான். தண்டபாணி
தேசிகரின் உரைவளத்தை மூடி மேஜை மேல் வைத்தான்.
அவள் மேஜையை நோக்கி நடந்தான்.
ஒவ்வொரு அடியும் ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்தது. காய்ந்துபோன செடிக்குத் தண்ணீர்
கிடைத்துவிட்டது. இனி அது வளர வேண்டியது மட்டும்தான் பாக்கி.
அவள் மேஜைக்கு அருகே போய் நின்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
இம்முறை பார்வையில் வெட்கம் இல்லை, ஒரு சின்ன எதிர்பார்ப்பு மட்டுமே இருந்தது.
"இங்க உட்காரலாமா?"
என்றான் அவன், குரலைத் தாழ்த்தி.
அவள் தன் புன்னகையை மறைக்க முயன்றபடி,
மெல்லிய குரலில் "ம்ம்… உட்காருங்க" என்றாள்.
தண்ணீர் ஊற்றப்பட்டுவிட்டது.
காதல் வளர ஆரம்பித்துவிட்டது.
-
சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment