21 Apr 2026

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

எஜமானர்களின் அடிமைகள் – நிலை மாறுமா?!

நாம் எல்லோரும் ஓர் அழகான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் பெயர் ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்றால், ஆள்பவர்கள் நம் மனதை அறிந்தவர்களாக இருக்க வேண்டும், காதலியைப் போல! போலீஸை வைத்து நம்மை மிரட்டக் கூடாது, நம்மை ஏஜெண்டுகளை வைத்துச் சுரண்டக் கூடாது. இதைக் கேட்கவே எவ்வளவு கியூட் ஆக இருக்கிறது?

ஆனால், நிஜத்தில் நாம் ஒரு வினோதமான அடிமைத்தனத்தில் இருக்கிறோம். வெள்ளையர்கள் வெளியேறிவிட்டார்கள், ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற எஜமானர் மனோபாவம் இன்னும் இங்கேயே தங்கிவிட்டது.

நாம் சுதந்திரம் அடைந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறோம், ஆனால் உளவியல் ரீதியாக இன்னும் அந்த பழைய அடிமைச்சங்கிலியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியல்வாதிகள் தங்களை நம் சேவகர்களாகக் காட்டிக்கொள்வார்கள், ஆனால் பதவியில் அமர்ந்ததும் ஜமீன்தார்கள் போல கட் அவுட் வைப்பார்கள்.

மக்கள் எப்போதுமே உலகெங்கும் அறியாமையில் இருப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. அதனால்தான், அரசாங்கம் என்பது மக்களுக்குப் பக்கத்தில், மிக எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவு ஜீவிகள் சொல்கிறார்கள்.

நிர்வாகம் பெரிதாகப் பெரிதாக, ஜனநாயகம் நம்மிடமிருந்து விலகி எங்கோ சென்னையிலோ அல்லது டெல்லியிலோ அல்லது கோட்டையிலோ ஒளிந்துகொள்ளும். பிறகு அங்கே போகவே நமக்கு அச்சமாக இருக்கும். ஒரு சின்ன மனு கொடுக்கக்கூட நாம் பத்து தடவை குனிய வேண்டியிருக்கும்.

டெல்லி என்பது பலருக்கு வெறும் ஒரு பெயர்தான். அது எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது என்று எளிய மக்களுக்குத் தெரியவே தெரியாது.

அரசாங்கம் தூரத்தில் இருந்தால் அது அதிகாரம் காட்டும். அருகில் இருந்தால் அது அன்பைக் காட்டும். ஆனால், நமக்கு எப்போதுமே தூரத்துப் பச்சைதான் பிடிக்கிறது!

மக்களாட்சியில் நடக்கும் எல்லாத் தப்பிற்கும் காரணம் நாம்தான். ஆம், நம்முடைய சகிப்புத்தன்மைதான் எல்லா அக்கிரமங்களுக்கும் ஆக்ஸிஜன் கொடுக்கிறது.

இப்போது உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். தேர்தலில் நாம் வாக்களிக்கும் கட்சி நமக்குச் செவி சாய்க்குமா? நம்மை மரியாதையுடன் நடத்துமா? அடிப்படை வசதிகளை ஒழுங்காகச் செய்து கொடுக்குமா? பதில் இல்லை என்றால், நாம் இன்னும் மன்னராட்சிக் காலத்திலேயே தூங்கிக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

நிஜமான அதிகாரம் என்பது கோட்டையில் இல்லை, அது உங்கள் தெருமுனையில்  இருக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் என்பது மக்களுக்குக் கூப்பிடும் தூரத்தில் இருக்கும் ஓர் அமைப்பு. அங்கேதான் பெண்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் நிஜமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

ஆக, ஜனநாயகம் என்பது ஏதோ ஒரு பெரிய நிறுவனம் அல்ல, அது நம் கலாசாரமாக மாற வேண்டும். அதன்படி, அரசாங்கத்துக்குக் கொஞ்சம் மனிதாபிமானம் வர வேண்டும். இது கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும் நாம் ஆசைப்படலாம்.

அடித்தட்டு மக்கள் அச்சம் நீங்கி, அதிகாரத்தில் பங்கெடுக்காத வரை, ஜனநாயகம் என்பது சர்வாதிகாரிகள் போட்டுக்கொள்ளும் ஒரு ரேமண்ட் கோட் மட்டுமே. கோட்டுகளே கோட்டைகளை ஆண்டு கொண்டிருந்தால் எப்படி? நம் கோவணங்களுக்கும் அங்கே குரல் இருக்க வேண்டும்.

அந்தக் குரலுக்கு ஓர் ஆதார சுருதிதான் ஓட்டு. அந்த ஓட்டுக்கு நோட்டை வாங்கினால் அந்தக் குரல் கம்மி விடும். நீங்கள் எஜமானர்களின் அடிமைகள்தான் என்பது நிரூபணமாகி விடும்.

நீங்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் குரல்வளையைக் காத்துக் கொள்ளுங்கள் மக்களே!

*****

No comments:

Post a Comment