குடவோலை முதல் ஓசி குக்கர் வரை – ஒரு பரிணாம வளர்ச்சி!
தேர்தல் நடத்துவதில் உலகிற்கே தமிழர்கள்தான்
முன்னோடி என்பதற்கு ஆயிரம் வருட பழைய குடவோலை முறையைச் சான்றாக வைத்திருக்கிறோம். உத்தரமேரூர்
கல்வெட்டுகள் தமிழர்களை நெஞ்சை நிமிர்த்த வைக்கின்றன.
அன்று ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டுமானால்
வரி கட்டியிருக்க வேண்டும், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும், மிக முக்கியமாக நேர்மையானவராக
இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள். அது சோழர்கள் காலம். இது அமைதிப்படை நாகராஜ
சோழர்களின் காலம்.
இன்று நிபந்தனைகள் எல்லாம் அப்டேட் ஆகிவிட்டன.
இன்று நீங்கள் வரி செலுத்த வேண்டாம், நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டாம், நேர்மையாளராக
இருக்க வேண்டாம். திரையில் நான்கு பேரை உதைத்து பஞ்ச் பேசத் தெரிந்தால் போதும் அல்லது
ஜாதி, மதம், பணம் எனும் புனிதப் பொக்கிஷங்களை கையில் வைத்திருந்தால் போதும். கட்டப்பஞ்சாயத்துப்
பண்ணத் தெரிந்தால் போதும். ஜனநாயகம் உங்களை இருகரம் கூப்பி வரவேற்கும்.
தேர்தல் அறிக்கை என்பது ஒரு காலத்தில் கொள்கை
விளக்கக் குறிப்பாக இருந்தது.
விவசாயிகள் நலன், தொழிலாளர்கள் நலன், சமதர்மம்,
சமத்துவம், பெண்களுக்கு முன்னுரிமை என்று அன்று சீரியஸாக தேர்தல் அறிக்கைகளை எழுதினார்கள்.
நிஜமாகவே அது ஒரு ஜனநாயகக் காலம்.
ஐந்தாண்டுத் திட்டங்கள், ஏழ்மை ஒழிப்பு, பொதுத்துறை
வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, தன்னிறைவு என்று கனவுகள் எல்லாம் தேர்தல் அறிக்கைகளுக்கு
இருந்தன. அந்தக் கனவுகள் இன்றும் கனவுகளாகவே இருப்பது தனிச்சிறப்பு.
ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற தேர்தல்
அறிக்கைத்தான் அதுவரை இருந்த அனைத்து அறிக்கைகளையும் புரட்டிப் போட்ட புரட்சி அறிக்கை.
மக்களின் வயிற்றுக்கும் அரசியலுக்கும் உள்ள நேரடித் தொடர்பை மிகச்சரியாகக் கண்டுபிடித்த
புள்ளி அதுதான்.
அதன்பிறகு வந்த தேர்தல் அறிக்கைகள் எல்லாம்
மெல்ல மெல்ல ஒரு ஷாப்பிங் லிஸ்ட் போல மாறின.
வீட்டுக்கு ஒரு டிவி பார்த்தால் அறிவு வளரும்
என்று நம்பப்பட்டு, இலவச டிவி எனும் வாக்குறுதி தேர்தல் அறிக்கையைப் படமாகவே ஓட விட்டது.
சீரியல் பார்த்து மக்கள் அமைதியாக இருப்பார்கள் என்று நம்பிய தேர்தல் அறிக்கையோ அது
என்னவோ?
படிப்படியாக மடிக்கணினி முதல் மின்விசிறி வரை
ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்குத் தேவையான அத்தனையையும் வாக்குறுதிப் பட்டியலில்
கொண்டு வந்தார்கள் தேர்தல் வாக்குறுதிக்காரர்கள். இப்போது ப்ரிட்ஜ் வரை வந்து வருங்காலத்தில்
ஏசி வரை முன்னேறும் போல வாக்குறுதிகள்.
இலவசப் பேருந்துப் பயணம், இலவச சைக்கிள், இலவச
மின்சாரம் போன்றவை ஒருபுறம் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் செய்தாலும், தேர்தல் அறிக்கை
என்பது இப்போது யார் அதிகப்படியாகக் கொடுப்பார்கள்? என்கிற ஏலப் பட்டியலாகிவிட்டது.
கட்சிகளும் இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசுவதில்
போட்டிப் போட்டுக் கொண்டு பார்முலா ஒன் கார் ரேஸ் பந்தயத்தையே நடத்துகின்றன.
அன்று தமிழகத்தில் கொடுக்கப்படும் இலவசங்களைக்
கேலி செய்த தேசியக் கட்சிகள், இன்று பிற மாநிலங்களில் அதைவிடப் பெரிய கேஷ்பேக் ஆஃபர்களை
அறிவிக்கின்றன.
ஆக இவையெல்லாம் தேவையில்லையா என்பதை விட கேள்வி
இதுதான். கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு, அதற்காக
லட்சங்களை செலவழிக்க வைத்து விட்டு, மாதம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாயைத் கையில்
திணிப்பது எப்படிபட்டக் கணக்கு?
அதுதான் தெரியவில்லை என்கிறீர்களா? அதுதான்
நம் பிரச்சனையே.
பின்தங்கிய மக்களை முன்னேற்றச் சலுகைகள் தேவைதான்,
மறுப்பதற்கில்லை. ஆனால், தரமான இலவசக் கல்வியும், இலவச மருத்துவமும் கொடுக்க வேண்டிய
ஆட்சிகள், அதற்குப் பதில் டிப்ஸ் போன்ற ஒரு தொகையை தந்து விட்டு, மீதி எல்லாவற்றையும்
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கை கழுவுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்.
இப்போது வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்.
என்ன நடந்திருக்கிறது?
பழங்காலத்தில் குடத்தில் ஓட்டுப் போட்டோம்.
இன்று ஓட்டுப் போட குக்கர் வாங்கிக் கொண்டிருக்கிறோம். வளர்ச்சி என்பது இதுதான் போலிருக்கிறது!
*****

No comments:
Post a Comment