9 Dec 2020

ஆயாள அடிச்சிக் கொன்னவன்!

ஆயாள அடிச்சிக் கொன்னவன்!

செய்யு - 650

            சுப்பு வாத்தியார் போன எடுக்கக் கூடாதுன்னு சொன்ன காரணத்தால பாக்குக்கோட்டையிலேந்து யாரும் போன் பண்ணா இப்போ திட்டையில யாரும் போன எடுக்கிறதில்ல. அவரு இதெல்லாம் சொல்றதுக்கு ரொம்ப காலத்துக்கு மின்னாடியே பாக்குக்கோட்டை சனங்க போன் பண்ணா எடுக்குறதெ அறவே விட்டிருந்தாம் விகடு. செய்யுதாம் அண்மெ காலம் வரை அந்தப் பழக்கத்த விடாம இருந்தா. செய்யுவுக்கு யாரு போன் பண்ணாலும் எடுத்து பதிலச் சொல்லணுங்ற மனோபாவம். போன் பண்ணா எடுத்து அதுக்குப் பதிலச் சொல்லாம இருக்குறது ஞாயமில்லன்னு நெனைச்சா. அவளோட கொணப்பாடுக்காகவே அவளோட சிம் கார்ட்ட மாத்திக் கொடுக்க வேண்டியதா இருந்துச்சு. 

            இதுல நடந்த ஒரு முக்கியமான விசயம் பாக்குக்கோட்டை சரசு ஆத்தா இறந்தப்போ அந்தத் தகவல் தெரியாம போனதுதாம். அன்னிக்கு விகடுவுக்கு பாக்குக்கோட்டையிலேந்து ஆளாளுக்குப் போன அடிச்சிட்டுக் கெடந்திருக்கானுவோ. பாக்குக்கோட்டையிலேந்து போன் வந்தாலோ, புது எண்ணுலேந்து போன் வந்தாலோ எடுக்குறதில்லங்ற முடிவுல விகடு இருந்ததால அவன் போன எடுக்கவே இல்ல. அவ்வேம் எடுக்கலன்னதும் தொடர்ச்சியா புதுப்புது நம்பர்லேந்து போன் பாட்டுக்கு வந்துக்கிட்டெ இருந்துச்சு. அதெ சமாளிக்க முடியாம அன்னிக்குப் போன அணைச்சிப் போட்டுட்டாம். போனும் சத்தம் போட முடியாம அடங்கிக் கெடந்துச்சு.

            மறுநாளுதாம் சரசு ஆத்தா எறந்துப் போன வெவரம் சிப்பூர் பெரியம்மா போன் பண்ணுனப்போ தெரிய வந்துச்சு. அத்துப் போனப் போட்டு நேத்தி நடந்த சங்கதிய ஒண்ணு வுடாம சினிமா காட்டுறாப்புல சொன்னுச்சு.

            வாழ்க்கப்பட்டு பெரிம்மா, சிப்பூர் பெரியம்மா, சிப்பூர் சித்தி, தேன்காடு சித்தி, பாகூர் சித்தி எல்லாரும் போன்ல வந்த எழவு சேதியக் கேட்டுச் சரசு ஆத்தா செத்ததுக்காக பாக்குக்கோட்டை போயிருந்திருக்குங்க. அதுகளப் பாத்ததும் சித்துவீரன் ஆவேசப்பட்டு கத்திருக்காம். "எஞ்ஞ யத்தெ செத்துப் போனது பத்தாதுன்னு எஞ்ஞளயும் சாவடிக்க வந்திருக்கீங்களாடி? ஒஞ்ஞளயல்லாம் யாருடி வர்றச் சொன்னதுடி? ஒழுங்கு மருவாதியா ஓடிப் போயிடுங்கடி! கிட்டெ நெருங்கி வந்தீயே, யத்தைக்குப் பாடையக் கட்டித் தூக்குறதுக்கு மின்னாடி ஒஞ்ஞளுக்குப் பாடையக் கட்டித் தூக்குறாப்பு ஆயிடும்! கண்டாரஓலிகளா ஏம்டி வந்தீயே?"ன்னு சகட்டு மேனிக்கு சவுண்டு விட்டிருக்காம் சித்துவீரன். சித்துவீரன் இப்படிப் பேசுறதெ சுத்தி நின்ன ஒருத்தெம் கூட தப்புன்னும் சொல்லல. கண்டிக்கவும் இல்ல.

            சாவுக்கு வந்துப்புட்டு என்னத்தெ மொகத்தப் பாக்காம போறதுன்னு நெனைச்சிக்கிட்டு எல்லாம் சேர்ந்து திட்டுனாலும் திட்டிட்டுப் போறாம்ன்னு நெனைச்சிக்கிட்டு கடெசீயா ஒரு மொறை சரசு ஆத்தாவோட மொகத்தப் பாத்துப்புடலாம்ன்னு நெருங்கிப் போயிருக்குங்க. அதுங்களோட நெனைப்பு கொரைக்குற நாயீ என்னிக்குக் கடிச்சிருக்கு, கடிக்கிறது நயீ என்னிக்குக் கொரைச்சிருக்குங்றது. சமயத்துல கொரைச்சிக்கிட்டுப் பாயுற நாயீ கடிச்சிம் போட்டுடும். கடிக்க வர்ற நாயீ கொரைக்காமலும் வந்து தொடைக்கறிய வடகறியா போட்டு முழுங்கிடும். அந்த நெலமையில சித்துவீரன் இருந்ததுப் புரியாம அதுங்க போனதுல மொதல்ல போயிட்டு இருந்த வாழ்க்கப்பட்டு பெரியம்மாவப் பிடிச்சிக் கீழே தள்ளிருக்காம் சித்துவீரன். ஒடனெ நெதானிச்சிக்கிட்டுச் சிப்பூரு பெரிம்மாவும், பாகூரு சித்தியும் கீழே வுழுவப் போன வாழ்க்கப்பட்டு பெரிம்மாவ தாங்கிப் பிடிச்சிருக்குங்க.

            ஒரு பொம்பளைய ஆம்பளை தள்ளுறான்னு ஒரு சொந்தக்கார பயெ வந்து கேக்கல. ஆன்னா, "அவந்தாம் கோவத்துல இருக்காம்ன்னு தெரியுதுல. பெறவு ஏம் இந்தச் சிறுக்கியோ ஏடிச்சுட்டு பாக்க வர்றாளுவோ?"ன்னிருக்கு லாலு மாமா. சிப்பூரு சித்தப்பாவுக்கு இதெப் பாக்க பொறுக்க முடியாம அத்து ஓடிப் போயி சித்துவீரனப் பிடிச்சித் தள்ள ரண்டு பேத்துக்கும் தள்ளுமுள்ளா ஆயிருக்கு. ஒடனே சிப்பூரு பெரிப்பாவும், "பொம்பளயப் புடிச்சி என்னத்தடா தள்ளி வுடுறது? ஆம்பளையா இருந்தா நம்மளப் பிடிச்சித் தள்ளி வுடுடா!"ன்னு கூட அதுவும் போயும் தள்ளுனதுல மல்லாக்க வுழுந்து மடிச்சிக் கட்டியிருந்த கைலி இடுப்புக்கு மேலப் போயி ஜட்டி தெரிய வுழுந்திருக்காம் சித்துவீரன். வாழ்க்கப்பட்டு பெரிம்மா கீழே வுழுந்ததெ வேடிக்கப் பாத்து நொட்டாரம் பேசிட்டு நின்ன லாலு மாமாவுக்கும், முருகு மாமாவுக்கும்  சித்துவீரன் கீழே வுழுந்ததுப் பொறுக்கல. சண்டியரு கணக்கா வேட்டிய மடிச்சிக் கட்டிக்கிட்டு அடிக்கப் பாயுறாப்புல ஓடியாந்திருக்குங்க. அதுக்குள்ள சிப்பூரு பெரிப்பாவும், சித்தப்பாவும், "வாஞ்ஞடா! வாஞ்ஞ! நீஞ்ஞளா நாஞ்ஞளா?"ன்னு வெச்சிப் பாத்துப்போம்ன்னு வேட்டிய வரிஞ்சிக் கட்டிக்கிட்டுக் கோதாவுல எறங்கியிருக்குங்க.

            இப்போத்தாம் சாவுக்கு வந்திருந்த சுத்தி நின்ன சனங்க நெலமெ விபரீதமா ஆவுறதப் பாத்துப்புட்டு ஓடியாந்து மல்லுக்கு நின்ன ஆளுங்கள பிடிச்சிக்கிட்டு சண்டெய அமத்தப் பாத்திருக்காங்க. சிப்பூரு பெரிப்பாவையும், சித்தப்பாவையும் பாத்து, "தயவுபண்ணி சாவு வூட்டுல சண்டெ வைக்காம கெளம்புங்க!"ன்னு சொல்லிருக்காங்க சமாதானம் பண்ணிக் கௌப்பி வுடுறாப்புல.

            "நாஞ்ஞ வர்றதுல பிடித்தமில்லன்னா பெறவு ஏம்ங்க இவனுங்க சாவுச் சேதியப் போன்ன போட்டுச் சொல்லுறானுவோ? சாவுன்னு தெரிஞ்சா வந்துப் பாக்கத்தாம் செய்வாங்க. அப்பிடி வர்றது எதிரின்னு தெரிஞ்சாலும் மொகத்தப் பாத்துட்டுப் போவத்தாம் சொல்லுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேம். இஞ்ஞ என்னான்னா சண்டெ வைக்காம கெளம்புங்றீயளே? யாருங்கய்யா மொதல்ல சண்டெ வெச்சது? பொண்ட ஓடியாந்து தள்ளுறானே பொட்டப் பயலாட்டம். பின்னாடித்தானே நாஞ்ஞ வர்றேம். எஞ்ஞள வந்து தள்ள வேண்டியத்தானே?"ன்னிருக்கு சிப்பூரு பெரிப்பா மனசுல இருந்த அத்தனெ வேகத்தையும் கொட்டுறாப்புல.

            "ஒஞ்ஞளுக்குப் போன பண்ணா வரிஞ்சிக் கட்டிக்கிட்டு வந்துப்புடுறதா? அந்தச் சுப்பு வாத்தி வகையிலேந்து ஒரு பயலும் இஞ்ஞ வர்றக் கூடாது. ஒஞ்ஞள மாதிரியே அந்தக் கண்டாரோலி வருவாயில்ல. வந்தா கண்டந்துண்டமா வெட்டிப் போட்டுட்டு அவளுக்குக் கருமாதியெ முடிச்சிட்டு எஞ்ஞ யத்தெ பொணத்தத் தூக்குறேம்!"ன்னாம் கீழே வுழுந்து கெடந்த சித்துவீரன் கைலிய அவுத்து அந்தாண்ட தூர வீசி எறிஞ்சிட்டு ஜட்டியோட நின்னபடிக்கு.

            "நீயி அருவாளத் தூக்குற வரைக்கும் எஞ்ஞ கைக பூப்பறிச்சிட்டு இருக்கும்ன்னு நெனைச்சீயா? என்னவோ வந்ததுலேந்து வெட்டிப்புடுவேம், கொன்னுப்புடுவேம்ங்றீயே? வெக்காலி தெகிரியமான ஒரு அப்பனுக்குப் பொறந்த பயலா இருந்தா அதெ செஞ்சிக் காட்டுடா பாப்பேம்? ஓங்கி ஒரு தட்டு தட்டுன்னா ஏங்கி அழுவுறதுக்கு ஒடம்புல தெம்பு இருக்குமான்னு தெரியல, ஒடம்புல உசுர இருக்குமான்னு தெரியல. போடா கொசுப்பயலே! கொசுவ அடிச்சி அந்தாண்ட தூக்கிப் போடறதுக்கு ஒரு நிமிஷம் கூட ஆவாதுப் பாத்துக்கோ!"ன்னிருக்கு சிப்பூரு சித்தப்பா பேச்சுலயே சித்துவீரனெ தொம்சம் பண்றாப்புல.

            "ஒருத்தரும் பேசாதீயே! சாவு வூட்டுல சண்டெ வைக்காம கெளம்புற சோலியப் பாருங்க! பிடிக்கலங்றப்போ கெளம்பிடுங்க!"ன்னிருக்காக சுத்தி நின்னு ஞாயம் வெச்சவங்க.

            "சாவுக்கு வந்தவங்ககிட்டெ சண்டெ வைக்குற வழக்கத்தெயல்லாம் இந்த அதிசயமான ஊர்லத்தாம் பாக்குறேம். நாஞ்ஞ ன்னய்யா குத்தம் பண்ணோம்? அதெ சொல்லாம ஓடியாந்து பொம்பளையத் தள்ளி வுடுறது, அடிக்கிறதுன்னா ன்னா அர்த்தம்? கிருசெ கெட்டுப் போயிடும்!"ன்னிருக்கு ஒடனே சிப்பூரு பெரிப்பா வுடாம வம்ப வளத்து ஞாயத்தெ கேக்குறாப்புல.

            "ஒஞ்ஞளாத்தாம்டா! எஞ்ஞ யத்தெ செத்ததுக்குக் காரணமே நீஞ்ஞத்தாம்டா. பொண்ணயாடா கொண்டாந்து கட்டி வெச்சீயே? உசுர்ர எடுக்குற மூதேவியக் கொண்டாந்து கட்டி வெச்சீயே! அதுலத்தாம்டா எஞ்ஞ யத்தெ செத்துப் போச்சுது. சாவடிச்சிப்புட்டு யிப்போ செத்துச்சா உசுருப் போவாம பாதியில கெடக்குதான்னு பாக்கத்தான்னே வந்திருக்கீயே?"ன்னிருக்காம் சித்துவீரன் தன்னோட வீராப்பக் காட்டி தன்னோட ஞாயத்தக் காட்டுறாப்புல.

            "எஞ்ஞ வூட்டுப் பொண்ணுத்தாம் கொலக்காரப் பாவியோளா ஒஞ்ஞளோட குடித்தனம் பண்ட முடியாதுன்னு பொட்டிப் படுக்கையக் கட்டிக்கிட்டு வந்து எத்தனெ மாசம் ஆவுது? அதுவரைக்கும் ந்நல்லா கல்லாட்டம் கெடந்துப்புட்டு யிப்போ செத்ததுக்கு யாரடா பொறுப்புங்றீயே? நல்லவேளடா எம்மட வகெயில பொண்ணு அன்னிக்கே வூடு வந்துச் சேந்துச்சு. கொலக்காரிப் பட்டத்தெ கட்டியிருப்பீயே இந்நேரத்துக்கு! நாசமா போறவனுவோளோ நடந்ததெல்லாம் நல்லதாம்டா போயிடுச்சு!"ன்னிருக்கு சிப்பூரு பெரிப்பா சித்துவீரனோட ஞாயத்தெ வெளுத்துக் கட்டி காயப் போடுறாப்புல.

            "அந்த வாத்தியையும், வாத்திப் பொண்ணையும் ச்சும்மா வுட மாட்டேம் பாத்துக்கோ!"ன்னிருக்கு முருகு மாமா தம் பங்குக்கு முறுக்கெ காட்டுறாப்புல.

            "ஒஞ்ஞளால முடிஞ்சதெப் பாத்துக்குங்கடா. எஞ்ஞள ன்னா ச்சும் நெனைச்சுப்புட்டியளா? ஒஞ்ஞளால ஒரு மசுர்ர கூட அந்தாண்ட இந்தாண்ட நவத்த முடியாது பாத்துக்கோ! கையாளாகாத பயலுவோளா!"ன்னிருக்கு சிப்பூரு சித்தப்பா வார்த்தையாலயே தெறிக்கவுட்டு அடிக்குறாப்புல.

            "யோவ் நாம்மளே எஞ்ஞ யம்மா செத்த துக்கத்துல இருக்கேம். இதுல வந்து பெரச்சனப் பண்ணீயோன்னா பாத்துக்கோங்க, போலீஸ்ல கம்ப்ளய்ண்ட் பண்ணுறாப்புல ஆயிடும்! ஒழுங்கு மருவாதியா துண்டெ காணும், துணியக் காணும்ன்னு ஓடிப் போயிடுங்க!"ன்னிருக்காம் இவ்ளோ நேரமா எல்லாத்தையும் பாத்துட்டு இருந்த பாலாமணி எழும்பி வந்து.

            "வாடா மாப்புள்ளப் பையா! நம்மட சகல மவளுக்கு சமாதி கட்டணும்ன்னுப் பாத்தீயே! யிப்போ ஒஞ்ஞ யம்மாவுக்கே சமாதிக் கட்டப் போறீயே? தப்பு மேல தப்பு பண்ணா இப்பிடித்தாம் ஆவும். அடுத்தவங்கள பொதகுழியில தள்ள நெனைச்சா நீந்தாம் போயி மொதல்ல அதுல மொத ஆளா வுழுவே. அதாங் யிப்போ வுழுந்திட்டே. என்னவோ போலீஸ்ல போயிக் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோங்றீயே! போயிப் பண்ணு! நாமளும் பண்ணுறேம். நீயும் ஒங்கப்பன்னும் அடிச்சித்தாம் ஒஞ்ஞ ஆயாளக் கொன்னிருக்கீயேன்னு. அப்பிடி ஒண்ணுத்தப் பண்ணுனா இன்னிக்கு ஓயாளாட பொணத்த எடுக்க முடியாது. போஸ்ட் மார்டம்லாம் முடிஞ்சித்தாம் எடுக்க முடியும் பாத்துக்கோ! நாறிப்பூடும் பாத்துக்கோ!"ன்னிருக்கு சிப்பூரு பெரிப்பா செரிக்குச் சமமா பாலாமணிய மெரட்டுறாப்புல.

            பாலாமணி இதெ எதிர்பாக்கல. அந்தப் பேச்சக் கேட்டதும் பாலாமணி மொகத்துல ஈயாடல. மொகம் வெளுத்துப் போச்சுது. கையி காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. ராசாமணி தாத்தா பட்டுன்னு எழும்பி வந்து ஒண்ணுஞ் சொல்லாம பாலாமணியக் கையப் பிடிச்சி அழைச்சிக்கிட்டுப் போனுச்சு. போறப்ப, "ஒண்ணும் வம்பு வழக்குல்லாம் வாணாம். பாக்கணும்ன்னா பாத்துட்டு வெரசா கெளம்புற வழியப் பாக்கணும். நின்னுகிட்டு சண்டெ வெச்சிக்கிட்டு நிக்கக் கூடாது!"ன்னிருக்கு.

            "அத்து என்னய்யா அப்பனும் மவனும் அடிச்சிக் கொன்னதா சொன்னா அதுக்குப் பதிலெ எதுவும் காணும்? கண்டதுக்கும் கழியதுக்கும் சீறிப் பாயுறானுவோ! கோவம் வர்றணும்மா இல்லியா அந்தக் கேள்விக்கு. அதெ கேட்டதும் பயலுக்கு ஒடம்பெல்லாம் நடுங்குது. அப்பங்கார்ரேம் வந்து மவனெ கைத்தாங்கலா கூப்புட்டுப் போறாம். அப்ப நெசமா அப்பிடி ஏதாச்சும் நடந்துச்சான்னு தெரியல. நாஞ்ஞ சின்ன மாமியாளா பாக்காம கெளம்புறாப்புல யில்ல! இந்தப் பயலுங்களயும் வுடறாப்புல ல்லன்னா போலீஸ்ஸ கொண்டாந்து வெச்சி ன்னா ஏது ரகசியம்ன்னு வெசாரணையப் பண்ணிப்புடுவேம்!"ன்னிருக்கு சிப்பூரு சித்தப்பா வுடாம ரவுண்டு கட்டி அடிக்குறாப்புல.

            "ன்னடா நீஞ்ஞப் பாட்டுக்குப் பேசிட்டுப் போறீயே? நம்மட தங்காச்சின்னு எஞ்ஞளுக்கு யில்லாத அக்கற மசுர்ரு ன்னடா ஒஞ்ஞளுக்கு? என்னவோ அடிச்சிச் சாவடிச்சதெ நேர்ல பாத்ததுப் போல பேசுதீகளேடா?"ன்னுச்சு லாலு மாமா கெத்தெ வுட்டுப்புடாம யாருக்கும் சந்தேவம் ஏதும் வந்துப்புடக் கூடாதேன்னு.

            "ஏம்டா யப்ப நெசமாவே அடிச்சித்தாம் கொன்னுருக்கீயளடா? அதுக்குத்தாம் எஞ்ஞளப் பாக்கக் கூடாதுன்னு சொல்லுதீயளடா? சின்ன மாமியாளா அடிச்சிக் கொன்னதோட, எஞ்ஞ வூட்டுப் பொண்டுகள வேற கீழே தள்ளி வுட்டுக் கொல்லப் பாக்குதீயளே? ஒஞ்ஞள ச்சும்மா வுட மாட்டேம்டா!"ன்னு சிப்பூரு சித்தப்பா அரையில கட்டியிருந்த வேட்டிய அவுத்துத் தலையில கட்டிக்கிட்டுக் கோதாவுல எறங்கிடுச்சு. அந்த நேரமாப் பாத்து வடவாதியிலேந்து எழவெ வெசாரிக்குறதுக்காகக் குமரு மாமாவும், வீயெம் மாமாவும் வர்ற ரண்டு பேத்துமா வந்ததுங்க இதெப் பாத்துட்டு ரண்டு பேத்துமா சேந்து சிப்பூரு சித்தப்பாவப் பிடிச்சிக்கிட்டு அந்தாண்ட கொண்டாந்து சாவு வூட்டுல சண்டெ வைக்க வாணாம்ன்னு சமாதானம் பண்ணிருக்குங்க.

            "அத்து ன்னடா நீஞ்ஞ வந்தா மட்டும் ஒண்ணும் சொல்லாம உக்காந்திருக்கானுவோ? நாஞ்ஞ வந்தா மட்டும் எகிறிக்கிட்டு சண்டெ நிக்குறானுவோ? நாஞ்ஞ அப்பிடி ன்னடா குத்தத்தெ பண்ணிப்புட்டேம்? சின்ன மாமியாளா நீஞ்ஞத்தாம் அடிச்சிக் கொன்னீயளான்னு கேட்டா ஒரு பயலும் பதிலச் சொல்ல மாட்டேங்றாம். இந்தச் சாவுல ஏதோ மர்மம் இருக்குடா. இத்து இயற்கையான மரணம் கெடையாதுடா. சந்தேக மரணம். நாம்ம போலீஸ்ல புகார்ர வைக்காம இருக்க மாட்டேம்!"ன்னிருக்கு சிப்பூரு சித்தப்பா மச்சங்காரனுங்க வந்து சமாதானம் பண்ணியும் மசியுறாப்புல இல்லங்றதெ காட்டுறாப்புல.

            "பேயாமக் கெளம்புங்க. சாவு வூட்டுல சத்தம் போட்டுகிட்டு சண்டெ வெச்சிக்கிட்டு ந்நல்லாயில்ல!"ன்னிருக்கு வீயெம் மாமா ரொம்ப நாகரிகமான மனுஷனாட்டம் புத்திச் சொல்லுறாப்புல.

            "எலே ஒம்மட யக்காவப் பிடிச்சிக் கீழே தள்ளி வுட்டுருக்காம்டா அந்தச் சித்துவீரன் பயெ! ஒமக்கு இதெ கேக்க கோவம் வரலியா? ன்னா கேக்கறேம் பதிலச் சொல்லுடா? கண்ணால பாத்த நமக்கு உசுரே போச்சுடா. பக்குன்னு எதயமே துடிக்குறது நின்னுப் போச்சுடா!"ன்னிருக்கு சிப்பூரு பெரிப்பா மனசுல உள்ள ஆத்திரத்தெ அப்பிடியே படம் பிடிச்சுக் காட்டுறாப்புல.

            "அவுனுவோ அப்பிடிப் பண்ணப்பவே கெளம்பிப் போவாம இன்னும் ஏம் நின்னுகிட்டு பெரச்சனைய வளத்திக்கிட்டு இருக்கீயே? அசிங்கமாயில்ல?"ன்னிருக்கு குமரு மாமா யோக்கியாம்சம் இதுதாம்ன்னு வௌக்குறாப்புல.

            "இவனுவோல்லாம் ஒஞ்ஞளுக்குத் தம்பியோ? பாத்துக்கிடுங்க! நீஞ்ஞ கீழே வுழுந்து உசுரு போனாலும் மசுருப் போச்சுன்னு போயிட்டே இருப்பானுவோ. போங்கடா மவுட்டிப் பயலுகளா! ஒஞ்ஞளாலத்தாம் அந்தப் பெயலுவோளுக்கு அந்த கொழுப்பு வெச்சி அலையுது? ஒம்மட யக்காப் பொண்ணுத்தானடா செய்யு. அவ்வே அந்தக் கதியில நிக்குறதெப் பத்தி ஒரு பயெ கேள்வி கேட்டீயளடா? பெறவு எப்பிடிடா அவனுகளுக்குப் பயம் வரும்ன்னு கேக்குறேம்? ஒரு பொண்ணப் போட்டு ன்னா சித்தரவதெ பண்ணிருக்கானுவோ? அந்தக் கதெ தெரியும்தானாடா ஒஞ்ஞளுக்கு? அவனுகளச் சொல்லிக் குத்தமில்ல. நீஞ்ஞ இப்பிடி இருக்குறதாலத்தாம்டா அவனுக அப்பிடி இருக்கானுவோ! நீஞ்ஞத்தாம்டா காரணம் அவனுக அம்மாம் கொழுப்பு வெச்சு அலைய!"ன்னிருக்கு சிப்பூரு சித்தாப்பா மச்சாங்காரனுங்க ரண்டு பேத்தோட யோக்கியாம்சத்தெ கிழிச்சுத் தொங்க வுடறாப்புல.

            "என்னத்தாம் ஆளாளுக்குக் குடிச்சிருக்கீயளா?"ன்னிருக்கு வீயெம் மாமா அத்தானுங்கன்னு பாக்காம கூட்டத்துக்கு மத்தியில வெச்சு அசிங்கம் பண்ணுறாப்புல.

            சிப்பூரு பெரிப்பாவுக்குக் கோவம் வந்துடுச்சு. "அந்தப் பயலுவோ குடிச்சிக்கிட்டுச் சத்தம் வெச்சி யக்காள தள்ளி வுடுறதச் சொன்னா, ஏம்டா படாத எடத்துல பட்டு உசுரு போயிருந்தா ன்னடா பண்ணுவேன்னா அதெ கேக்குறாப்புல யில்ல, எஞ்ஞள குத்தம் சொல்ல நிக்குதே? நீயெல்லாம் எஞ்ஞளுக்கு மச்சாங்காரனா இருக்குற வரைக்கும் எஞ்ஞளுக்கு மானமும் யில்லடா, மருவாதியும் யில்லடா!"ன்னிருக்கு சிப்பூரு பெரிப்பா எரிமலெ அப்பிடியே வெடிச்சுச் செதறுறாப்புல.

            "ஏம்ண்ணே இவனுககிட்டெ பேசிட்டு? ஸ்டேசன்லப் போயி ஒரு கம்ப்ளெய்ண்ட் வெச்சா தானா அடங்குறானுவோ!"ன்னிருக்கு சிப்பூரு சித்தப்பா சிப்பூரு பெரிப்பாகிட்டெ சூட்சமத்துல வெச்சு அடிக்குறாப்புல.

            "இந்தாருங்க யத்தாம்! ஒஞ்ஞ நடமொறைக சரியில்ல. இதுல வெங்கு வூட்டுக்காரரு சுத்தமா சரியில்ல. பொட்டப் புள்ளயெ வூட்டுலக் கொண்டுப் போயி வெச்சிக்கிட்டு அதெல்லாம் ஞாயமா ன்னா கேக்குறேம்? அந்தக் கோவத்துல இவுனுகப் பேசிட்டு இருக்கானுவோ. இதெப் புரிஞ்சிக்கிட்டுப் பேயாம போஞ்ஞ. அப்பிடி கம்ப்ளெய்ண்ட் எதாச்சும் வைக்குறாப்புல இருந்தா, சாவு வூட்டுல வம்பு வெச்சது நீஞ்ஞத்தாம்ன்னு நாமளே சாட்சிச் சொல்லுவேம் பாத்துக்கிடுங்க!"ன்னிருக்கு வீயெம் மாமா அக்காக்காரிக ஒறவெ வுட சின்னம்மாக்காரி ஒறவு முக்கியம்ங்றாப்புல.

            “யப்போ கம்ப்ளெய்ண்ட் வெச்சித்தாம் ஆவணும்! ஒன்னயும் சேத்து அதுல வெச்சித்தாம் செஞ்சியாவணும்!” ன்னு சிப்பூரு சித்தப்பா திமுருனாப்புல கௌம்புறதப் பாத்து ஆளாளுக்குத் தெரண்டு வந்து அதெ பிடிச்சிக்கிட்டு, “எழவு காரியத்தெ எடைஞ்சல் பண்ணாம நடக்க வுடுங்க. புண்ணியமாப் போவும். நீஞ்ஞ வெக்குற பஞ்சாயத்துல நடுவூட்டுல செத்தவ நாறிடக் கூடாது!” ஞாயத்தெ வெச்சு சமாதானத்தெப் பண்டிருக்காங்க.

            செரித்தாம் போன்னு "இவனுககிட்டெ என்னத்தெ பேசிக்கிட்டு! பேயாம வந்துத் தொலைங்க. சாவு வூட்டுக்குப் போயிட்டு வந்ததோட இவனுகளையும் சேத்துத் தலைய முழுவுனாத்தாம் செரிபட்டு வாரும்!"ன்னு சிப்பூரு பெரிம்மா கண்ணீரும் கம்பலையுமா பேசி எல்லாத்தையும் எப்பிடியோ அசமடக்கி கெளப்பிக்கிட்டுப் பஸ்ஸூ ஏறி ஊரு வந்துச் சேந்திருக்குங்க. பஸ்லேந்து வூடு வந்து சேர்ற வரைக்கும் சிப்பூரு சித்தப்பா மனசு பொறுக்காம இதெப் பத்தியே ஆத்திரம் ஆத்திரமா பேசிக்கிட்டெ வந்திருக்கு. இந்த அத்தனெ சேதியையும் சொல்லிட்டு, "நல்லவேள நீஞ்ஞ வர்றாமப் போனது. வந்திருந்தா பெரிய ரகளையாத்தாம் போயிருக்கும். நமக்கென்னவோ அந்தப் பயலுவோ சின்னம்மாள அடிச்சித்தாம் கொன்னிருப்பானுவோளோன்னு தோணுது. மொகத்துல காயம்லாம் இருந்ததா ஒரு பேச்சு. கிட்டெ நெருங்கித்தாம் பாக்க வுட மாட்டேன்னுட்டானுவோ. அதுக்குச் சொந்தக்கார பயலுகளும் ஊருக்கார பயலுகளும் வேற சப்போட்டு. ஆயாள மவனே அடிச்சிக் கொன்னிருக்காம் போலருக்கு. அந்தத் தாடிக்கார பயலும் பொண்டாட்டிய அடிச்சிக் கொன்னிருப்பாம். ரண்டு பயலும் சேந்துட்டு அந்த வேலையத்தாம் பாத்திருக்கானுவோ. நம்மளத்தாம் செத்தவெ மொகத்தெ கூட பாக்க வுடாம பண்ணிப்புட்டானுவோளே?"ன்னுச்சு போன்ல சிப்பூரு பெரிம்மா.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...