10 Dec 2020

ஒரு தாயின் மரணம்!

ஒரு தாயின் மரணம்!

செய்யு - 651

            ஒரு சாவுங்றது எப்பிடி நடந்தாலும் அதெ பத்தின உண்மை அரசல் புரசலா வந்து சேராம மட்டும் இருக்காது. சரசு ஆத்தாவோட திடீர் மரணத்தெப் பத்தி வடவாதியில பல பேரு பல வெதமா பேச ஆரம்பிச்சாங்க. சரசு ஆத்தா வடவாதிப் பொண்ணு. அங்கேயிருந்து பாக்குக்கோட்டைக்குக் குடித்தனம் ஆயிப் போன பொண்ணு. தன்னோட மவளான சுந்தரிய வடவாதியில அண்ணன் மவனுக்கே கட்டிக் கொடுத்தது அது. அதாலேயே அதோட சாவப் பத்தின சேதிய வடவாதிச் சனங்க பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க. இன்னும் கிராமத்துல சாவப் பத்தியும், கலியாணத்தப் பத்தியும் பேசிக்கிட்டுத்தாம் இருக்காங்க. அந்தப் பேச்சுல சாவோட பின்னணியும், கலியாணத்தோட பின்னணியும் ரொம்பத் தெளிவா வந்து விழுந்துப்புடும். சட்டுன்னுப் போயிச் சேர்ற அளவுக்கு சரசு ஆத்தாவோட ஒடம்பு அவ்வளவு பலகீனமா இல்லாத போது அந்தச் சாவு பட்டுன்னு நடந்ததால அந்தப் பேச்சு ரொம்ப அதிகமாயி சுப்பு வாத்தியாரு வூடு வரைக்கும் கடந்து வந்துச்சு. அப்படி என்னா பேச்சு அதுன்னா அது இதுதாங்.

            சரசு ஆத்தாவுக்கு நாளாவ நாளாவ செய்யுவக் கொண்டாந்து மவனோட சேத்து வெச்சி வாழ வெச்சிப்புடணுங்ற எண்ணம் அதிகமாவ ஆரம்பிச்சிருக்கு. பிடிக்குதோ, பிடிக்கலையோ கலியாணங் கட்டிட்ட ரண்டு பேரும் சேர்ந்துத்தாம் வாழணுங்ற நெனைப்பு அதெப் போட்டு வாட்டி எடுக்க ஆரம்பிச்சிருக்கு. பாலாமணி பாக்குக்கோட்டைக்கு வர்றப்போ அதெத்தாம் அத்து சொல்ல ஆரம்பிச்சிருக்கு. அந்தப் பேச்ச எடுக்குறாப்புல இருந்தா பாக்குக்கோட்டைக்கு வர்றப் போறதில்லன்னு சொல்ல பாலாமணி சொல்ல ஆரம்பிச்சப்போ சரசு ஆத்தா அந்தப் பேச்சைக் கொறைச்சுப் பாத்திருக்கு. அதால முடியல. பேசக் கூடாதுன்னு நெனைச்சி தன்னை அறியாம அத்து ஒரு மொறை பேசுனப்போ பாலாமணி மறுவாரம் பாக்குக்கோட்டை கிளினிக்குக்கு வந்துப்புட்டு, வூட்டுக்கு வர்றாமலே நேரா சென்னைப் பட்டணம் போயிருக்காம். அந்த விசயம் தெரிஞ்சதும் சரசு ஆத்தா துடிச்சிப் போயி பாலாமணிக்குப் போன அடிச்சா அவ்வேம் எடுக்கவே மாட்டேம்ன்ட்டாம். அதுல கொஞ்சம் மனசு தொவண்டாப்புல ஆனுச்சு சரசு ஆத்தா.

            பத்து நாளைக்கு மேல வுடாம போன் பண்ணதுல ஒரு நாளு போன எடுத்த பாலாமணி வெச்ச மொத கண்டிஷனே, இனுமே செய்யுவப் பத்தின பேச்சயோ, சேந்து வாழணுங்ற பேச்சையோ எடுக்கக் கூடாதுங்றதுதாம். அதே நேரத்துல ஜீவனாம்ச வழக்கு, வன்கொடுமெ வழக்குன்னு சம்மன் போவப் போவ சரசு ஆத்தா ரொம்பவே மனசொடிஞ்சிப் போவ ஆரம்பிச்சிருக்கு. தன்னோட மனசுல நெனைக்குறதெ பேசுறதுக்கான ஆளுங்களே அதுக்குக் கெடைக்கல. ராசாமணி தாத்தாகிட்டெ பேசுனா அது திட்ட ஆரம்பிச்சது. கொழுப்பெடுத்துப் போயி உக்காந்திருக்கிறவளப் பத்தியல்லாம் நம்மகிட்டெ பேசாதேன்னு சொல்லிருக்கு. அதெத் தாண்டி பேசுனப்போ கஞ்சாவ அடிச்சிகிட்டு என்ன பண்றோம், ஏது பண்றோம்ன்னு தெரியாம காட்டான்தனமா சரசு ஆத்தாவ இழுத்துப் போட்டு அடிச்சிருக்கு ராசாமணி தாத்தா. கலியாணம் ஆயி கொழந்த குட்டிங்க பொறந்த காலத்துல வாங்குன அடிகள பேரப்புள்ளைங்க பொறந்து வளர்ற காலத்துலயும் வாங்கி வேண்டிக் கெடக்குறதெ நெனைச்சு இன்னும் ரொம்பவே நொந்துப் போயிருக்கு சரசு ஆத்தா.

            அடுத்தாப்புல வந்த ஒவ்வொரு தீவாளியும், பொங்கலும் தனிமையான பண்டிகையா ஆக ஆரம்பிச்சது சரசு ஆத்தாவுக்கு. பொண்டாட்டி யில்லாம என்னத்தெ பாக்குக்கோட்டைக்கு வர்றதுன்னு பாலாமணி சென்னைப் பட்டணத்துலயே தங்கிட்டாம். இருக்குற ரண்டு பேத்துக்கு என்னத்தெ பண்டிகையக் கொண்டாடுறதுன்னு ராசாமணி தாத்தா அந்தப் பண்டிகையப் பத்தின நெனைப்பு யில்லாம கஞ்சாவப் போட்டுட்டு வகெ தொக தெரியாம போதையில சுருண்டு கெடந்திருக்கு. பண்டிகெ நாளு ஒவ்வொண்ணுலயும் இதென்னடா எழவு வூடு போல கெடக்குதுன்னே நெனைச்சு சரசு ஆத்தா கண்ணுத் தண்ணி வத்துறாப்புல அழுதிருக்கு. செய்யு இருந்த வரைக்கும் பாலாமணிக்கோ, ராசாமணி தாத்தாவுக்கோ. ஏம் சரசு ஆத்தாவுக்கோ அவுங்கவுங்க கோவத்தக் காட்ட செய்யு இருந்தா. அவ்வே வந்தப் பெறவு பாலாமணிக்கும், ராசாமணி தாத்தாவுக்கும் அவுங்க கோவத்தக் காட்ட சரசு ஆத்தாவ வுட்டா வேற எடம் தெரியல. பாவம் சரசு ஆத்தாவுக்கோ தன்னோட கோவத்தக் காட்ட யாருமேயில்ல. ரொம்ப நாளு வூட்டுக்குள்ளாரயே தனிமையில கெடக்க வேண்டிய நிலையில பாலாமணிக்குப் போனு மேல போன போட்டு வூட்டுப்பக்கம் வர்றச் சொல்லி அழுதுகிட்டெ இருந்திருக்கு சரசு ஆத்தா.

            ஒரு கட்டத்துக்கு மேல பாலாமணி சரசு ஆத்தாவோட போனுக்கு ஊருக்கு வர்றதப் பத்தி எதையும் சொல்லாமப் போவ இதுவே கெளம்பி சென்னைப் பட்டணத்துக்குப் போயி பாலாமணிகிட்டெ பேசிருக்கு. கெளம்பிப் போனப்ப பொண்டாட்டி விசயத்தப் பத்தி எதையும் பேசிடக் கூடாது, எப்படியாச்சும் பாக்குக்கோட்டைக்கு வந்துட்டுப் போன்னுங்ற விசயத்தெ சொல்லணுங்ற நெனைப்புலத்தாம் போயிருக்கு. போயிப் பேசிட்டு இருக்கறப்பவே கொஞ்ச நேரத்துல தன்னையும் அறியாம செய்யுவப் பேச்சு வந்துப் போவ பாலாமணி அம்மாக்காரின்னும் பாக்காம செவுட்டு இழுப்பா இழுத்திருக்காம். அப்பத்தாம் சரசு ஆத்தா சொல்லிருக்கு, "நம்மள கொன்னு வேணும்ன்னாலும் போட்டுக்கோ. வாணாம்ன்னு சொல்ல. அன்னா அவளெ இழுத்தாந்து வெச்சுக்கோ. நம்ம வூட்டுக்கு வந்தப் பொண்ணு நம்ம வூட்டுலத்தாம் இருக்கணும். அப்பிடி அவ்வே வர்றாமப் போனா அத்து நம்ம வூட்டுக்கு நல்லதில்ல. நீயி அவளெ ஒரு பொண்டாட்டியக் கூட நெனைச்சிக்கிட வாணாம். வூட்டுல ஒரு நாய வளக்க மாட்டீயா கொஞ்சம் சோத்தப் போட்டு. அப்பிடி நெனைச்சி வெச்சிக்கோ. என்னத்ததாம் இருந்தாலும் அவ்வே பெத்துத் தர்றதுதாம் நம்ம வமிசத்துக்கான கொலவிளக்கு!"ன்னு சரசு ஆத்தா அழுதுகிட்டெ சொன்னப்போ பாலாமணிகிட்டெ இன்னும் அடி பெலமா வுழுந்திருக்கு சரசு ஆத்தாவுக்கு. அடி வாங்கியும் சரசு ஆத்தா அந்தப் பேச்ச நிப்பாட்டுறாப்புல இல்ல. அடி வாங்குறது அம்மாக்காரிங்ற நெனைப்பும் பாலாமணிகிட்டெயும் இல்ல. ஒரு கட்டத்துல எப்பிடி அடிக்கிறேம்ங்ற நெதானம் இல்லாம பாலாமணி அடிச்சதுல செவுத்துலப் போயி மோதி விழுந்ததுதாம் சரசு ஆத்தா. ஒடம்புல அசைவு எதுவும் இல்ல. சவத்தெ போல கெடந்திருக்கு.

            பாலாமணிக்கு அப்பத்தாம் பதற்றமாப் போயிருக்கு. அடிச்சதுல உசுருப் போயிடுச்சோன்னு கையப் பிடிச்சிப் பாத்தா உசுரு ஓடிட்டுத்தாம் இருந்திருக்கு. மயக்கந்தாம்ன்னு புரிஞ்சி மொகத்துல தண்ணிய அடிச்சி எழுப்பவனங்கிட்டெயும் சரசு ஆத்தா தன்னெ கொன்னுப்புட்டாவது பொண்டாட்டிய அழைச்சாந்து வெச்சிக்கோன்னு சொல்லிருக்கு. நெசமாவே அதுக்கு மேல அடிச்சா சாவுற நெலையிலத்தாம் இருந்துச்சு சரசு ஆத்தா. அதனாலயோ என்னவோ பாலாமணி அதுக்கு மேல அடிக்கல. சரசு ஆத்தாவோ பேசுறதெ நிப்பாட்டல. அத்தோட பேச்ச நிப்பாட்டுற மாதிரி அடிக்குற நெலமையிலயும் அது இல்ல. பேச்ச நிப்பாட்டாம அது பாட்டுக்குப் பைத்தியம் பிடிச்சாப்புல பேசுனதையே பேசிட்டெ இருக்குது சரசு ஆத்தா. அதுக்கு மேல சரசு ஆத்தாவே அங்க வெச்சி வேற எதாச்சும் பெரச்சன ஆயிடுமோன்னு நெனைச்சிப் பயந்துப் போயி ஆஸ்பிட்டலுக்கு லீவ அடிச்சிட்டு பாக்குக்கோட்டைக்கு வந்தவம்தாம் பாலாமணி.

            விசயம் தெரிஞ்ச ராசாமணி தாத்தா சும்மா இருக்குற சங்கெ ஊதிக் கெடுக்குறாப்புல பொண்டாட்டிக்காரி ஏம் சென்னைப் பட்டணம் போனா, மவ்வேங்காரனெ எதுக்குப் பாக்குக்கோட்டைக்குக் கொண்டாந்தான்னு அதெப் பொறுக்க முடியாம கஞ்சாவப் போட்டுகிட்டு போதையில அதுவும் தம் பங்குக்கு அடிச்சதுல சரசு ஆத்தாவோட நெலமை ரொம்ப கவலக்கிடாமப் போயிடுச்சு. "ஏம்டா கூறுகெட்ட தகப்பா! நாமளே அடிச்சித்தாம் சென்னைப் பட்டணத்துலேந்து இஞ்ஞ கொண்டாந்தா நீயி வேற ஏம்டா கஞ்சாவ அடிச்சிக்கிட்டு கண்ணு மண்ணு தெரியாம அடிச்சே?"ன்னு பாலாமணி கேட்டதுக்கு ராசாமணி தாத்தா சொல்லிருக்கு, "பெத்த மவனெ அடிக்கிறப்போ, தாலி கட்டுன புருஷங்கார்ரேம் நாம்ம அடிக்கிறதுக்கு உரிமெ யில்லயா?"ன்னு. அவுங்க ரண்டு பேத்துக்கும் இது ஒரு வாய்ச் சண்டெயா ஆரம்பிச்சி ஒருத்தருக்கொருத்தரு அடிச்சிக்க ஆரம்பிச்சதெ பெரக்ஞையே இல்லாமலே ஒண்ணுத்தையும் பண்ண முடியாமப் பாத்துட்டுக் கெடந்திருக்கு சரசு ஆத்தா.

            விடியக் காலம்பர சரசு ஆத்தாவோட ஒடம்பு வெட்டி வெட்டி இழுத்திருக்கு. பாலாமணி ஒடனே அதோட ஒடம்பப் பாத்துட்டு மருந்து மாத்திரைகளக் கொடுத்துப் பாத்திருக்காம். வெட்டி வெட்டி இழுத்துக்கிட்டு இருந்த ஒடம்பு திடீர் திடீர்ன்னு தூக்கிப் போட ஆரம்பிச்சிருக்கு. ஒடனே ராசாமணி தாத்தா சுப்பு வாத்தியாரு குடும்பத்துலேந்து பண்ணுன ஏவல் வேலைத்தான்னு மலையாள மாந்திரீகத்துல அதுக்குத் தெரிஞ்ச மந்திர தந்திர வேலைகள்ல எறங்கியிருக்கு. ஒரு கட்டத்துல சரசு ஆத்தாவோட நாடித் துடிப்பு கொறைய ஆரம்பிக்க பாலாமணி ஆம்புலன்ஸூக்குப் போன பண்ணி பாக்குக்கோட்டையில ஆஸ்பத்திரியில பாத்திருக்காம். அங்க வெச்சிப் பாத்த டாக்கடருமாருக இதுக்கு மேல இஞ்ஞ முடியாதுன்னு சொல்ல, தஞ்சாவூருக்கு ஆம்புலன்ஸ்ல வெச்சிக் கொண்டு போவ வேண்டியதாப் போச்சு.

            தஞ்சாவூரு தாரணி ஆஸ்பிட்டல்ல சரசு ஆத்தா பேச்சு மூச்சு இல்லாம மூணு நாளு வரைக்கும் கெடந்திருக்கு. அதுக்குப் பெறவுதாம் நெனைவு வந்து அத்து முழிச்சிப் பாத்திருக்கு. சரசு ஆத்தாவுக்குத் தன்னோட கடெசிக்காலம் நெருங்குறது போல தோணிருக்கு. அப்பத்தாம் உசுரு போற கட்டம் வந்ததுக்குப் பெறவு இனுமே என்ன நடந்தாலும் பரவாயில்லன்னு மறுக்கா மவனெ மட்டும் பாக்கணும்ன்னு சொல்லி ‍ஐசியுலேந்து மவனெ பக்கத்துல உக்கார வெச்சி முழுங்கி முழுங்கி பொண்டாட்டிய மட்டும் அழைச்சாந்துடுடான்னு சொல்லிருக்கு. பாலாமணியும் சாவுற காலத்துல அம்மாக்காரி நல்ல வெதமா சாவட்டும்ன்னு கண்ணுல தண்ணி சொட்ட சொட்ட அழைச்சிட்டு வர்றதா சரசு ஆத்தா கையில சத்தியம் பண்ணிச் சொல்லிருக்காம். அதெ கேட்டுப்புட்டு திரும்பவும் மயக்கமாயிருக்கு. அன்னிக்கு ராத்திரித்தாம் என்ன செய்யுறது, ஏது செய்யுறதுன்னு புரியாம பாலாமணி திருநீலகண்டன் வக்கீலுக்குப் போனப் பண்ணி எப்பிடியாச்சும் தன்ன செய்யுவோட சேத்து வெச்சிப்புடுங்கன்ன பொலம்பியிருக்காம். அதெ உண்மென்னு நம்பித்தாம் வக்கீலு சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சிருக்காரு.

            மறுநாளு சரசு ஆத்தாவுக்கு ஒடம்பு தேற ஆரம்பிச்சிடுச்சு. டாக்கடருமாருங்களும் சரசு ஆத்தாவப் பாத்துப்புட்டு மனசுல உள்ள ஆசெய மட்டும் நிறைவேத்தி வெச்சிப்புடுங்கன்னும், அதெ நெனைச்சி நெனைச்சித்தாம் பல்ஸ் ரேட்டு பாதிக்கப்படுதுன்னும், மனசு பாதிக்குறாப்புல எதெயும் பண்ணிப்புடாதீங்கன்னும் சொல்லிருக்காங்க. அத்தோட இனுமே பயப்படுறதுக்கு ஒண்ணுமில்லன்னு சொன்னது பாலாமணிக்குத் தோதா போவ ஒரு வாரம் வரைக்கும் தஞ்சாவூரு ஆஸ்பத்திரியில வெச்சிப் பாத்து வுட்டு, அதுக்குப் பெறவு பாக்குக்கோட்டையில விட்டுப்புட்டு சென்னைப் பட்டணம் வந்திருக்காம். அன்னிலேந்து நெதமும் சரசு ஆத்தாவுக்கு பாலாமணிக்குப் போன அடிச்சிப் பேசுறதுதாம் வேல. என்னிக்கு அழைச்சிட்டு வர்றப் போறேன்னு பாலாமணியப் போட்டு அத்து பிடுங்கி எடுக்க ஆரம்பிச்சது. இப்படிப் போன்ல போட்டு சரசு ஆத்தா பண்டுற நச்சரிப்புத் தாங்காம சமயத்துல பாலாமணி எடுக்காம வுட ஆரம்பிச்சாம். போன பாலாமணி எடுக்காட்டி பாக்குக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்குப் போயி சென்னைப் பட்டணம் போறதா நெனைச்சிக்கிட்டுப் புத்திப் பெசவுனாப்புல கண்ணுல பஸ்ல ஏறி அது பாட்டுக்கு டிக்கெட்டெ எடுத்துக்கிட்டு மதுரையோ, திருநெல்வேலியோ போயி எங்காச்சும் எறங்க ஆரம்பிச்சது.

            வூட்டுல சரசு ஆத்தாவ காங்கலையேன்னு போன அடிச்சா அத்துப் போயி எறங்குன எடத்தெப் பத்தியும் புரியாம பக்கத்துல இருக்குறவங்களக் கேட்டு எங்க இருக்குறேங்றதெ சொல்றதெ வெச்சி பாலாமணியோ, ராசாமணி தாத்தாவோ போயி அழைச்சிட்டு வர்றாப்புல ஆனுச்சு. அதாலயே சரசு ஆத்தா போன் பண்றப்பல்லாம் போன எடுத்துப் பேசிப் பேசி டென்ஷன் ஆனாம் பாலாமணி. அவ்வேம் டென்ஷன் ஆவ ஆவ அதெ வுட சரசு ஆத்தா டென்ஷன் ஆவ ஆரம்பிச்சது. வூட்டுல சுத்தமா சமையலே இல்லாம ராசாமணி தாத்தா ஒவ்வொரு வேளைக்கும் ஓட்டல்லேந்து சாப்பாட வாங்கி வர்ற ஆரம்பிச்சது. அந்தச் சாப்பாட்டையும் வூட்டுல மருமவ இல்லாம இப்பிடி ஓட்டல் சாப்பாட்ட சாப்புட நமக்கென்ன தலையெழுத்தான்னு ராசாமணி தாத்தாவோட மொகத்துல தூக்கி எறிஞ்சது சரசு ஆத்தா. நாளுக்கு நாள் சரசு ஆத்தாவோட நடவடிக்கைக மோசமாவ ஆரம்பிச்சப்போ ராசாமணி தாத்தாவால தாங்க முடியல. சில நாளுங்கள்ல கஞ்சாவ அடிச்சிக்கிட்டு செமனேன்னு படுத்துக்கிறது, செல நாளுங்கள்ல அப்பிடிப் படுக்க முடியாம சரசு ஆத்தாவப் போட்டு வெளுத்து எடுக்குறதும் நடந்துச்சு. அடிபடுற ஒவ்வொரு தடவையும் தரையில கையால அடிச்சி மவனையும் பேத்தியாளையும் சேத்து வெச்சிட்டுத்தாம் மறுவேல பாப்பேன்னு சபதம் பண்ணிருக்கு சரசு ஆத்தா. அத்து அப்பிடிப் பண்ணப் பண்ண ராசாமணி தாத்தா வெறி அதிகமாயிப் பொரட்டிப் பொரட்டி எடுத்திருக்கு.

            ஒரு கட்டத்துக்கு மேல ராசாமணி தாத்தாவுக்கு முடியாததெப் போல ஒரு நெனைப்பு வந்தப்போ அத்து பாலாமணிக்குப் போன அடிச்சி, "இப்பிடி ஒரு கிறுக்கிய வெச்சிக்கிறதும் ஒண்ணுத்தாம், சாவடிச்சிப்புடறதும் ஒண்ணுத்தாம். இவளெ வெச்சியும் சமாளிக்க முடியல. வெச்சிக்கிடாமலும் இருக்க முடியல. நம்ம ரோதனைப் போவுது. பேயாம கொன்னுப்போட்டா செருமத்துச் செருமமும் கொறையும். ஒரு ஆளு சாப்பாட்டுத் தண்ணியும் கொறையும். நமக்கும் இந்த வூடு தேவயில்ல. நம்ம ஜோசிய ஆபீஸ்லயே தங்கிக்கிறேம். வாடவையும் யில்லாமப் போவும். நீயும் இனுமே இஞ்ஞப் பாக்குக்கோட்டைன்னு வந்துட்டுக் கெடக்க வேண்டியதில்ல! காசிக்கு ரொம்பவே மிச்சமடா! கொன்னியாம் இந்தக் கிறுக்கியோட பெரச்சனெயும் இல்லயடா!"ன்னிருக்கு.

            அன்னிக்கு விடியக்காலையில பாலாமணி சென்னைப் பட்டணத்துலேந்து வந்து எறங்கியிருக்காம். அவ்வேம் எறங்கி வூட்டுக்கு வந்த ரண்டு மணி நேரத்துக்குள்ள சரசு ஆத்தாவுக்கு மூச்சு அடங்கிடுச்சு. இப்படியா ஒரு தாயோட சபதம் நெறைவேறாம சாவுற நெலை சரசு ஆத்தாவுக்கு வந்துடுச்சு. சாவுக்குன்னு நீலு அத்தெ, சுந்தரி, பிந்து போனப்ப அக்கம் பக்கத்துச் சனங்க இதெ சொல்லித்தாம் அழுதிருக்குங்க. மவளுங்களாவது யாராச்சும் கொண்டுப் போயி வெச்சி ஆயாக்காரியா காப்பாத்திருக்கலாம்ன்னு சொல்ல சொல்ல சுந்தரியாலயும், பிந்துவாலயும் கண்ணுத் தண்ணிய வுடுறதெ தவுர, யண்ணனையோ, அப்பங்காரனையோ காட்டிக் கொடுக்கத் தோணல. அப்பிடிச் செஞ்சும் ஒரு புண்ணியமும் ஆவப் போறதில்லன்னு ரண்டும் நெனைச்சிருந்திருக்கணும். அதுங்க அன்னிக்கு அழுது தங்களோட கடெமெய முடிச்சிட்டுப் போனதுதாம். இந்தக் கதெ ரொம்ப நாளைக்குப் பேச்சா கெடந்துச்சு.

            முருகு மாமா இந்தச் சாவுக்குப் போயிட்டு வந்து இந்தக் கதெய மாத்துறாப்புல சுப்பு வாத்தியாரு காடுவெட்டி சாமியார்கிட்டெ பண்ணுன மந்திரிச்ச வேலத்தாம் சரசு ஆத்தாவோட சாவுக்குக் காரணம்ன்னு வேற வெதமா கதெயெ சொல்லிப் பாத்துச்சு. அத்தோட அதுக்கு ஒடம்பும் வலியெடுக்கிறதாவும் அதுக்கும் காரணம் சுப்பு வாத்தியாரு பண்ணுன வேலத்தான்னும் சொல்லிக்கிட்டுக் கெடந்துச்சு. சுப்பு வாத்தியாரு வூட்டுல பொண்ண கட்டித் தன்னோட தங்காச்சியோட குடும்பமே நாசமா போயிட்டதாவும் பாக்குற ஆளுங்ககிட்டெ பொலம்பிக்கிட்டுக் கெடந்துச்சு முருகு மாமா. அத்தோட சுப்பு வாத்தியாரு பண்ணுற மந்திர வேலையால அடுத்து தங் வகையறாவுல சாவப் போறாங்கன்னு தெரியலன்னும் சொல்லிகிட்டு இருந்துச்சு. சுப்பு வாத்தியாரு பொண்ணால ஒட்டு மொத்த குடும்பமே கெடுறதாவும் அவளப் பாத்தா நாமளே கத்திய எடுத்து குத்திப் புடுவேம்ன்னும் ஆவேசமா பேச ஆரம்பிச்சிட்டுது முருகு மாமா.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...