8 Dec 2020

ஒருதலைபட்ச தீர்ப்பு

ஒருதலைபட்ச தீர்ப்பு

செய்யு - 649

            பாலாமணி அவ்வளவு கொழைவ பேசுனதெ நம்பி வக்கீல் திருநீலகண்டன் அவ்வேங்கிட்டேயிருந்து போன் வரும்ன்னு மறுநாளு ரொம்பவேக் காத்துக் கெடந்தாரு. சேர்ந்து வாழணும்ன்னு நெனைக்குற சோடிகள நாம்ம பிரிச்சிடக் கூடாதுன்னு நெனைச்சவரு, போன் வரலன்னதும் அதுக்கு மறுநாளு அவனுக்கு இவரு போன அடிச்சிப் பாத்தாரு. போன் பாட்டுக்கு ரிங் போயிட்டு இருக்கு. பாலாமணி எடுக்குற பாடா காணும். அத்தோட வுடாம ஒரு வாரம் வரைக்கும் அவரு பாட்டுக்கு விடாம பாலாமணிக்கு அடிச்சிப் பாத்துச் சோந்துப் போனரு. எல்லார்கிட்டெயும் ஆடுற ஆட்டத்தெ நம்மகிட்டெயும் ஆடிட்டாம்ங்றது வக்கீலுக்கு அப்பத்தாம் புரிஞ்சது. என்னத்ததாம் ஒரு மனுஷன் எறங்கி வந்து பேசுறப்போ அதெ நம்பாமலா இருக்க முடியும்ன்னு நம்பி இப்போ வெவஸ்தெ கெட்டுப் போயி நிக்குறாப்புல ஆச்சுதேன்னு வக்கீலு நொந்துப் போனாரு. அதுக்குப் பெறவு சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சி, "ஒங்க மாப்புள்ளயப் புரிஞ்சிக்கவே முடியல. அவனெ நம்பி சேத்து வெச்சிடுவோம்ன்னு ஏதோ ஒரு நம்பிக்கையில சொல்லிட்டேம். இனுமே அந்தப் பய வந்து ஏங் கால்ல விழுந்தாலும் சரித்தாம் சேத்து வைக்குறாப்புல இல்ல. ஒங்க பொண்ணுகிட்டெயும் சொல்லி வையுங்க. இனுமே சேந்து வாழணும்ன்னு வந்து ஒங்க பொண்ணு கால்ல கூட விழுவாம். அதெ நம்பி மனசு மாறிட வேணாம்!"ன்னு எச்சரிக்கெ மணிய அடிக்குறாப்புல.

            "அதெத்தானங்கய்யா நாம்ம மின்னாடியே சொன்னேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வக்கீல கொஞ்சம் லேட் பிக்கப்பன்னு சொல்றாப்புல.

            "சொன்னீங்க இல்லன்னு சொல்லல. இது ஒரு பாவத்தொழில். தெரியாம செய்யுறது போவட்டும். தெரிஞ்சிச் செஞ்சிடக் கூடாது பாருங்கோ. பாவத்தெ மேல மேல சேத்துடக் கூடாதுன்னு பாத்தேம். பிரியுற புருஷன் பொண்டாட்டிய சேத்து வைக்குறது போல புண்ணியம் வேறல்ல. ஆயிரம் கலியாணத்தப் பண்ணி வெச்ச புண்ணியம் அது. ஆன்னா ஒங்க மாப்புள்ளையச் சேத்து வெச்சா பாவம் அது. சாதாரண பாவமில்ல. ஆயிரம் கொலையப் பண்ணுன பாவம். சேத்து வெச்சா காலம் முழுவதும் நெனைச்சுப் பாப்பாங்க, வாழ்த்திட்டெ இருப்பாங்கன்னு அதெ நெனைச்சி சொல்லிட்டேம்ங்கய்யா! நல்லவேள இவனெ சேத்து வெச்சிருந்தா காலம் பூரா அதெ நெனைச்சி நெனைச்சி நாம்ம நொந்துப் போயிருக்கணும்! நாம்ம செத்தேப் போயிருக்கணும்ன்னு சொன்னாலும் தப்பே யில்ல. நம்ம அனுபவத்துல எவ்வளவோ கிரிமினல்ஸ்ஸப் பாத்தாச்சு.இவனெ மாதிரி ஒருத்தனப் பாத்ததில்ல. சரியான சைக்கோ கிரிமினல்! அதாங் விசயம். அதெ சொல்றதுக்குத்தாம் அடிச்சேம்! பாத்துக்கலாம் வாங்க. கேஸ்ஸூக அது பாட்டுக்குப் போயிட்டே இருக்கட்டும். ஒவ்வொண்ணும் தலைக்கு மேல தொங்குற கத்திங்கத்தாம். என்னிக்கு வேணாலும் அறுத்து தலையில விழுவலாம். அது எப்போ விழுவப் போவுதுங்றது மட்டும்தாம் தெரியல. என்னிக்காவது அறுந்து விழும். அது நிச்சயம். கவலெப்படாதீங்க!"ன்னு சொல்லி தன்னெ ஞாயம் பண்ணிகிட்டுச் சுப்பு வாத்தியாரையும் ஆறுதல் பண்ணி வுடுறாப்புல பேசிட்டுப் போன வெச்சாரு.

            அதுக்குப் பெறவு ஒரு வாரத்துக்கு ஆர்குடி குற்றவியல் நீதிமன்றதுக்குப் போனா, மறுவாரம் திருவாரூரு பீஸ் கோர்ட்டுக்குப் போறாப்புல இருந்துச்சு செய்யுவுக்கு. ரண்டு எடத்துல இருந்த கோர்ட்டுக்கும் மாறி மாறி போயிகிட்டு இருந்தாங்க செய்யுவும், சுப்பு வாத்தியாரும். திருவாரூரு பீஸ் கோர்ட்டுலேந்து தனியா ஒரு சம்மனப் போட்டும் பாலாமணி வாராத காரணத்தால கேஸ் கட்டு திரும்பவும் முதன்மை குற்றவியல் நீதிமன்றதுக்கே திரும்புனுச்சு. கோர்ட்ட மதிக்காம பாலாமணி தொடர்ந்து வர்றாம இருந்ததுல, என்னடா இவ்வேம் ஒருத்தெம் டாக்கடர்ரா இருந்து இப்படி இருக்காம்ன்னு நீதிபதி அவ்வேம் மேல‍ ரொம்ப அதிருப்தியில இருந்தாரு. வக்கீலு திருநீலகண்டன் வேற ஒவ்வொரு மொறை திருவாரூரு சிஜேயெம் கோர்ட்டுல ஆஜராவுறப்பயும் பாலாமணிக்குப் பிடிவாரண்ட் போட்டு கோர்ட்டுக்கு வரவழைக்கணும்ன்னு சொல்லிட்டு இருந்தாரு. நீதிபதி கொஞ்சம் பொறுத்துப் பாப்பேம்ன்னு சொல்லிட்டு இருந்தாரு.

            ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துக்கும் இதெ போல பாலாமணியோ, பாலாமணி தரப்புலேந்து யாருமோ தொடந்தாப்புல வர்றாம இருந்தாங்க. கேஸ்ஸப் போட்டுட்டுச் சுப்பு வாத்தியாரும், செய்யுவும் அலட்சியமா இருந்துடுவாங்கன்னு நெனைச்சானோ என்னவோ கேஸ்ஸப் பத்தி பாலாமணி கொஞ்சம் கூட கண்டுக்கிடல. ஆன்னா செய்யுவும், சுப்பு வாத்தியாரும் ஒவ்வொரு ஹியரிங்குக்கும் தவறாமப் போயி ஆஜராயிட்டெ இருந்தாங்க. வக்கீலு திருநீலகண்டன் திருவாரூர வுட்டு அந்தாண்ட இந்தாண்ட நகர்வேனானனு அங்கயே நங்கூரம் போட்டாப்புல ஆர்குடி கோர்ட்டுக்கு வாராமலேயே இருந்தாரு. ஒரு கட்டத்துல சுப்பு வாத்தியாருக்கும் செய்யுவுக்கும்  ஒவ்வொரு வாரத்துலயோ அல்லது பாஞ்சு நாளுக்கு ஒரு மொறையோ போயி ஆஜராவுறதும், திரும்பி வர்றதும்ன்னு கொஞ்ச நாளுக்கு ஒண்ணும் புரியல. ஒரு நாளு ஆர்குடி குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவுங்கப் போனப்ப பாலாமணி தரப்புலேந்து யாரும் வர்றாததப் பாத்துட்டு நீதிபதி செய்யுவ சாயுங்காலம் அஞ்சு மணி வரைக்கும் கோர்ட்டுல உக்கார வெச்சிட்டாரு. எதுக்கு உக்கார வெச்சிருக்காங்கன்னு தெரியாமலே சாயுங்காலம் வரைக்கும் உக்காந்திருந்தவளுக்கு அஞ்சு மணிக்கு மேல ஒரு தகவலச் சொன்னாங்க, வழக்கு எக்ஸ்பார்ட்டி ஆயிடுச்சுன்னு. அதுக்கான அர்த்தம் கூட தெரியாம அவ்வே திருநீலக்ணடன் வக்கீலுக்குப் போன அடிச்சா.

            அதெ கேட்டதும் திருநீலகண்டன் வக்கீலுக்குச் சந்தோஷம் தாங்கல. "கேஸ்ஸூ திருவாரூர்ல இல்லாம ஆர்குடியில இருக்குறதால நாம்ம தொடந்தாப்புல பாலோ பண்ண முடியல. எக்ஸ்பார்ட்டியாவுறதுங்றது வழக்கு ஒருதலைபட்சமா தீர்ப்பாவுறது. அவனுக்கு கொஞ்ச காலம் அவகாசம் கொடுப்பாங்க. அதுக்குள்ள அவன் அப்பீல் பண்ணி திரும்ப கேஸ்ஸூக்குள்ள வரணும். அப்படி வராத பட்சத்துல நாம்ம வழக்குப் போட்ட அத்தனையும் உண்மைன்னு தீர்ப்பாயிடும். அவனுகளப் பிடிச்சி உள்ள போட்டுப்புடலாம். பாக்கலாம் அவன் கேஸ்ஸூக்குள்ள வரானான்னா? இல்லையான்னு?"ன்னாரு வக்கீல் போட்ட வழக்குக்கு ஒரு நல்லது நடந்ததா காட்டுறாப்புல.

            அதெ கேட்ட அன்னிக்குச் செய்யு ரொம்ப சந்தோஷமா இருந்தா. அந்தச் சந்தோஷத்துக்கு அளவில்ல. இத்தனெ நாளு கெடந்து அலைஞ்ச அலைச்சலுக்கு ஒரு நல்லது நடந்திட்டதா நெனைச்சா. ரொம்ப நாளைக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு அவ்வே அவ்வளவு சந்தோஷமா இருந்து பாத்தது அன்னிக்குத்தாம். அத்தோட வழக்குல மொத அடி பாலாமணிக்கு விழுந்ததா நெனைச்சா.  பாலாமணியையும், சித்துவீரனையும் கோர்ட்டுல நிறுத்தி தண்டனெ வாங்கிக் கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பேம்ன்னு அன்னிக்கு ரொம்ப உற்சாகமா சொன்னா செய்யு. அதெ வுட எல்லா கேஸ்லயும் எப்பிடியும் ஜெயிச்சிடலாங்ற நம்பிக்கையும் அவளுக்கு வந்திருந்துச்சு.

            வன்கொடுமை வழக்கு எக்ஸ்பார்ட்டி ஆன தகவலெ பாலாமணிக்காக ஆர்குடி கோர்ட்டுக்கு வந்துட்டு இருந்த பழைய பரமசிவம் ஒடனே பாலாமணிகிட்டெ சொன்னதும் பாலாமணி பண்ணுன முக்கியமான வேலயே பழைய பரமசிவத்தோட தொடர்ப வெட்டி விட்டதுதாம். அதுக்கு மேல அத்தோட வுடாம ஒடனே வக்கீல் திருநீலகண்டனுக்குப் போன அடிச்சி, "நம்மள சேத்து வைக்குறதா உறுதிப் பண்ணியே? அதுக்குப் பெறவு நம்மகிட்டெயே அது சம்பந்தமா எதுவும் பேசலையே?"ன்னு ஒண்ணுமே தெரியாதவனப் போல போன அடிச்சிப் பேசியிருக்காம் பாலாமணி.

            வக்கீல் திருநீலகண்டன் கடுப்பாயிருக்காரு. கடுப்புன்னா கடுப்பு அவருக்குத் தாங்க முடியாத கடுப்பு. "போன் அடிக்கிறேன்னு சொல்லிட்டுப் போன அடிக்காம, நாம்ம போன அடிச்சாலும் எடுக்காம இருந்துட்டு இப்போ டி.வி. கேஸ் எக்ஸ்பார்ட்டி ஆனதும் போன அடிச்சா அதெ நாம்ம எப்பிடி எடுத்துக்கிறதுன்னு புரியலையே?"ன்னு பாலாமணிய புடி புடின்னு புடிக்குறாப்புல எதிர்கேள்வி கேட்டிருக்காரு வக்கீலு.

            "தப்பா நெனைச்சிப்புடாதீயே சார்! அந்த நேரத்துல நார்த் இந்தியால ஒரு கான்பரன்ஸ்ல இருந்துட்டேம். அதுல கான்சென்ட்ரேட் பண்ணதுல இதெ வுட்டுப்புட்டேம்!"ன்னு ரொம்ப நல்ல புள்ளையாட்டம் பதிலச் சொல்லிருக்காம் பாலாமணி.

            "ஒங்களுக்குக் குடும்பத்தெ விட, ஒய்ப்ப விட நார்த் இந்தியா கான்பரன்ஸ்த்தாம் முக்கியமாப் போயிடுச்சா? கான்பரன்ஸ் என்னா சார் டே அன்ட் நைட் இருபத்து நாலு மணி நேரமுமா நடந்துச்சு? ராத்திரி நேரத்துல நீங்களும் போன அடிச்சிருக்கலாம். அல்லது நாம்ம அடிச்சப் போனையாவது எடுத்திருக்கலாம். நாம்ம போன அடிச்ச நேரத்துல ஒருவேற கான்பரன்ஸ்ல இருந்தாலும் நீங்க கொஞ்சம் பிரியான நேரமா பாத்து அடிச்சிருக்கலாமே? இதுல ஒண்ணுத்தையும் பண்ணாம இப்போ வந்து போன அடிச்சிக் கேட்டா, ஒங்களால நம்மளோட கட்சிக்காரங்கிட்டெ நாம்ம அசிங்கப்பட்டதுதாம் மிச்சம். இந்த ஒரு சின்ன கமிட்மெண்டையே ஒங்களால காப்பாத்த முடியலன்னா, பேமிலி லைப்ங்றது ரொம்ப பெரிய கமிட்மெண்ட் சார்! அதெ ஒங்கள நம்பி நாம்ம எப்பிடி உத்தரவாதம் கொடுக்குறதுன்னு நீங்கத்தாம் சொல்லணும்!"ன்னுருக்காரு வக்கீல் தன்னோட பாணியில பாலாமணிய.

            "நம்ம நேரம் சரியில்ல சார்! எல்லாம் கிரகச்சாரம் படுத்துறப் பாடு. அதாங் நாம்ம சேர நெனைச்சாலும் சேர முடியாதபடிக்கு சூழ்நெல வருது. இந்த நெலமையில நாம்ம என்னத்தெ பண்ணணும்ன்னே புரியல சார். வூட்டுல வேற கேஸ் எக்ஸ்பார்ட்டி ஆனதுல எல்லாரும் அரெஸ்ட் ஆயிடுவோங்ற பயத்துல இருக்காங்க சார்! நீஞ்ஞத்தாம் பாத்துப் பண்ணி வுடணும்!"ன்னிருக்காம் பாலாமணி எல்லா தப்பையும் கிரகங்க மேல தூக்கிப் போட்டாப்புல.

            "ஒங்களுக்கு ஒரு உதவித்தாம் பண்ண முடியும். மொத்லல ஒரு நெலையா நல்ல வக்கீலப் பாத்து வையுங்க. இனுமே நாம்ம வழக்குச் சம்பந்தமா ஒங்ககிட்டெ பேசுறாப்புல இல்ல. வக்கீல வெச்சா வக்கீல்கிட்டெ பேசுறேம். இப்போதைக்குப் போன வெச்சிடுறேம்!"ன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரண்டுன்னு ஆக்குறாப்புல சொல்லிப் போன வெச்சிட்டாரு வக்கீலு. அவரு போனெ வெச்சதும் அவருக்குத் தொடந்தாப்புல போன அடிச்சிட்டுக் கெடந்திருக்காம் பாலாமணி. ஆன்னா வக்கீலு மின்ன மாதிரி ஏமாற தயாரா இல்லாததால அவ்வேம் அடிச்ச அத்தனெ போனுக்கும் போனெ எடுக்கவே யில்ல. பேசாம இருந்துட்டாரு.

            அதெ தொடந்தாப்புல பாலாமணி அடிக்கடி செய்யுவுக்குப் போன அடிச்சிக்கிட்டுக் கெடந்தாம். வன்கொ‍டுமெ வழக்க வாபஸ் வாங்கணும்ன்னும், வாங்காட்டி தன்னோட வேலப் போயிடும்ன்னு பொலம்பிட்டுக் கெடந்தாம். பணத்தையும், நகையையும் இந்தக் கையில கொடுத்தா, அந்தக் கையால வழக்க வாபஸ் வாங்கறதுக்குக் கையெழுத்தப் போட்டுக் கொடுக்குறதா செய்யுவும் வேல மெனக்கெட்டு அவ்வேம் பண்ணுன போனுக்குப் பதிலச் சொன்னா. அத்தோட ராசாமணி தாத்தாவும் வுடாம செய்யுவுக்குப் போன அடிச்சி அவ்வே மனசெ கரைக்கப் பாத்துச்சு. சரசு ஆத்தாவுக்கு ஒடம்பு முடியாம கெடக்குறதாவும், செய்யு வந்துப் பாத்தாத்தாம் உசுரு பொழைக்க முடியும்ன்னும் எப்பிடியோ செய்யுவ பொறந்த வூட்ட விட்டு வெளியில கெளப்புற வேலையில ராசாமணி தாத்தா எறங்கிப் பாத்துச்சு. புயல்காத்து நாலா தெசையிலயும் சொழண்டு எந்த நேரத்துல எந்தத் தெசையிலேந்து அடிக்குமோன்னு தெரியாததப் போலத்தாம் பாக்குக்கோட்டையானுங்க எந்தத் தெசையிலேந்து வேணும்னாலும் எதெ வேணும்னாலும் செய்யுறவங்களா இருந்தாங்க.

            ஒரு சில நேரங்கள்ல மனசு கொஞ்சம் எளகிப் போயிச் செய்யுவும் சுப்பு வாத்தியார்கிட்டெ சரசு ஆத்தா ஒடம்புக்கு முடியாம கெடக்குற நெலையச் சொல்லி, சாவக் கெடக்குற நெலையில ஒரு தவா பாத்துட்டு வந்துடுவோமான்னு கேட்டப்போ சுப்பு வாத்தியாருக்கு இதயமே நொறுங்கிடுறாப்புல ஆயிடுச்சு. அவரு சொன்னாரு, "பகையாளி வூட்டுக்குப் போனாலும், வக்கீல் நோட்டீஸூ அனுப்புனவேம் வூட்டுக்குப் போவக் கூடாதும்பாவோ. ஒறவெ அத்துக்கிடணும்ன்னு நெனைக்குறவந்தாம் வக்கீல் நோட்டீஸ அனுப்புவாம். நல்ல மனுஷம் அந்த வேலையப் பண்ண மாட்டாம். ஏம் விரோதி கூட அந்த வேலையப் பண்ண மாட்டாம். அத்தோட இனுமே மொகத்துலயே முழிக்க வாணாங்றவந்தாம் பஞ்சாயத்தக் கூட்டுவாம். அந்த ரண்டு வேலையையும் அவனுங்கப் பண்ண பெறவு அவனுங்க மேல எரக்கப்படுறதுக்கு ன்னா இருக்குது? அத்தோட நீயி சாவுற அளவுக்கு முடிவெடுக்கக் காரணமா இருந்தவ்வே ஒம்மட ஆத்தாக்காரியான மாமியாக்காரி. அவளெப் போயி சாவக் கெடக்கான்னுப் போக்கப் போவலாம்ன்னு சஞ்சலப்படுதீயே? பழசெல்லாம் மறந்தாப் போச்சு? நீயி ஒடம்புக்கு எம்மாம் முடியாமக் கெடந்து அந்த நேரத்துல தொரக்குடிக்குப் போறேம்ன்னு ஒன்னயப் பாக்காம ரோட்டோட போனவத்தான்னே அவ்வே. நீயி உசுருக்குப் போராடிட்டுக் கெடந்தப்பல்லாம் எவ்வேம் பாக்குக்கோட்டையிலேந்தோ, வடவாதியிலேந்தோ பாத்தாம்? யிப்போ நீயிப் போயி பாக்கணும்ன்னு நிக்கே? அப்பிடி ஒம்மட மாமியாக்காரிக்கு ஒடம்புக்குக் முடியலன்னா நீயி ஏம் கவலெப்படுறே? சாமானியப்பட்ட பொம்பளையா அவ்வே. உலக மகா ஆயுர்வேத டாக்கடரோட யம்மாக்காரித்தானே? அந்தப் பயெ வைத்தியம் பண்ணிக் காப்பாத்திட மாட்டானா? நீயிப் போயி ஒம்மட மொகத்தக் காட்டித்தாம் கொணப்படுத்தப் போறீயாக்கும்? நீயெல்லாம் எதுக்கு இம்மாம் படிக்கணும்? நடெமொறை தெரியாத, ஒலக நடப்புத் தெரியாத, தன்னெத் தானெ காப்பாத்திக்கத் தெரியாத படிப்புக்கு என்ன புண்ணியம்? ஒனக்கு அன்னிலேந்து இன்னிய வரைக்கும் சொல்லிட்டு இருக்கேம். அவனுகப் போன பண்ணா எடுக்க வாணாம்ன்னு. நீயி கொஞ்ச நாளைக்குக் கேட்டாப்புல இருக்கே. பெறவு அவனுகளுக்கு நாக்கெ பிடுங்குறாப்புல பதிலச் சொல்லப் போறேன்னு போன எடுத்துப் பேச ஆரம்பிச்சிடுறே. அதால இன்னிக்குச் சொல்றதுதாம் இனுமே அந்தப் பயலுக போன அடிச்சா போன எடுக்குறதெ அடியோட வுட்டுப்புடு. தயவுபண்ணி சொல்றெத கேளு. அவனுகளுக்கும் நமக்கும் கோர்ட்டுல கேஸூ நடக்குறதுங்றதெ தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் ஒனக்கு மறக்கக் கூடாது! ஆன்னா நீயோ நல்ல நெனைவுல இருக்குறப்பயே மறந்துப்புடுறியே? அன்னிக்குக் கோர்ட்ல ன்னான்னா அவனுகளப் புடிச்சிச் ஜெயில்ல போடணும்ங்றே. இன்னிக்கு அவனுங்க போனப் பண்ணி அழுவுறானோவோன்னுப் போயிப் பாக்கணும்ங்றே. ஒன்னோட இந்தக் கொணந்தாம் அவனுங்களோட பலம். நம்மளோட பலவீனம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு செமத்தியான காட்டாம.

            "நீஞ்ச சொல்றாப்புலத்தாம்பா ஆவுது. அவ்வளவு பண்ணவோனுவோ மேல எப்பிடித்தாம் சமயத்துல பரிதாவம் மனசுல வந்துச் சேருதோ தெரியலப்பா. நம்மளோட நம்பரு அவனுங்ககிட்டெ இருக்குற வரைக்கும் அவனுகளும் போன அடிச்சிட்டுத்தாம் இருப்பானுவோ. நாமளும் ஒரு நேரம் இல்லன்னா ஒரு நேரம் எரக்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டுப் போன எடுத்துப்புடுவேம்தாம். இந்த நம்பர்ர மாத்தணும்ப்பா! வேற நம்பர்ல வேற சிம்கார்ட்டெ போட்டுக்கிறதுதாம் சரியாம இருக்கும்ப்பா!"ன்னா செய்யு ஒடைஞ்சுப் போனாப்புல.

            "அதுவுஞ் செரித்தாம். யண்ணங்கிட்டெ சொல்லு. அவ்வேம் புதுசா ஒண்ணுத்தெ வாங்கிக் கொடுப்பாம். அந்த நம்பரையாவது கண்ட கண்ட ஆளுவோகிட்டெ கொடுத்து நம்பரு அந்தப் பயலுவோகிட்டெ போயிச் சேந்துடுறாப்புல பண்ணிப்புடாதே. நம்ம வூட்டுல இருக்குறவங்க, காலேஜ்ல இருக்குறவங்க ஒன்னயத் தொடர்பு கொண்டா போதும் பாத்துக்கோ. ஒவ்வொரு தவாவும் நல்லா வர்ற ஒன்னய போனப் போட்டே மனசெ கலைச்சி விட்டுப்புடறானுவோ. இதெல்லாம் நெனைச்சித்தாம் நாம் ஆரம்பத்துலயே போலீஸ் ஸ்டேசனுக்குப் போவல. அஞ்ஞப் போயி பேசுறப்போ அவனுவோ பேசுறப் பேச்சுக்கு மயங்கி அவனுவோ கூட போயிருந்தே அந்தச் சைக்கோ பயலுவோ இந்நேரத்துக்கு ஒடம்புல உசுர இல்லாமப் பண்ணிருப்பானுவோ! மவளே! ஒமக்கு மட்டுமில்ல. வூட்டுல யார்ரா இருந்தாலும் செரித்தாம் அந்தப் பயலுவோ பண்ணான்னு யாரும் போன எடுத்தா பாருங்களேம். ஒரு தடவெ சொன்னா புரியாது ஒஞ்ஞளுக்கு? அதாங் போன்ல பேசுனா செல்போன்ல பதிவு பண்ணி வெச்ச பேர்ரக் காட்டுதுல்லா. அதெப் பாத்தா புத்தி வேல செய்ய வாணாமா இந்த போன எடுக்க வாண்டாம்ன்னு. இதெல்லாம்மா கிளிப்புள்ளைக்குச் சொல்றாப்புல சொல்லிக்கிட்டுக் கெடக்குறது? பொது அறிவா அதுவா வார வாணாமா? செரி அப்பிடி வாரல. பரவாயில்ல. நாம்மத்தாம் கிளிப் புள்ளைக்குச் சொல்றாப்புல கெடந்து கெடந்து அடிச்சிக்கிட்டுச் சொல்றேம்லா. அதயாச்சும் கேக்கலாமில்லா?"ன்னு மனசுப் பொறுக்கமா சத்தத்தெ வெச்சாரு சுப்பு வாத்தியாரு. இதுக்கு மேல சுப்பு வாத்தியார்ர மனசு நொந்து சத்தம் போட வுடக் கூடாதுன்னு அன்னியோட பாக்குக்கோட்டைச் சம்பந்தமா இருந்த அத்தனெ தொடர்புக, பேச்சகளையும் எந்த ரூபத்துலயும் வூட்டுக்கு வர்றமா பாத்துக்கிட்டுங்க சுப்பு வாத்தியாரு குடும்பத்துச் சனங்க ஒவ்வொண்ணும். குறிப்பா செய்யு இனுமே அப்பங்காரரெ இது சம்பந்தமா மன உளைச்சல் பண்ணிடக் கூடாதுன்னு தெடமா நின்னா. 

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...