5 Sept 2026

முயக்கத்தின் தர்க்கவியல்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 27

முயக்கத்தின் தர்க்கவியல்

அந்த பொன் மாலைப் பொழுதில், அவன் அமிர்தம் வளாகத்தின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான். கையில் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்தின் திருக்குறள் உரை.

அவள் வேக வேகமாக மாடி ஏறி வந்தாள். அவள் கையில் ஒரு பொட்டலம். அதில் நல்ல வாசனை வீசும் சூடான முந்திரி அல்வா.

"என்னது இது, திடீர்னு?" என்றான் அவன், அவளைப் பார்த்த ஆச்சரியத்தில் புருவத்தை உயர்த்தி.

"உனக்குப் பிடிக்கும்னு செஞ்சேன். ஆனா ஒரு கண்டிஷன். இதுல இருக்குற அல்வாவை நாம ரெண்டு பேரும் சேர்ந்துதான் சாப்பிடணும். ஆளுக்கு ஒரு ஸ்பூன்," என்றாள் அவள், அவன் அருகில் அமர்ந்து.

அவன் சிரித்துக் கொண்டே ஒரு ஸ்பூன் எடுத்து அவள் வாயில் வைத்தான். அவள் அடுத்த ஸ்பூனை எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்.

இளஞ்சூடான நெய்யும், கருப்பட்டியும், முந்திரியும் நாவில் கரையும் அந்தத் தருணத்தில், அவன் மனதிற்குள் ஏதோ ஒன்று சட்டென்று பொறி தட்டியது.

தன் சொந்தக் கையால் எடுத்துச் சாப்பிடும் அல்வாவை விட, அவள் தன் கையால் ஊட்டும்போது அதன் சுவை பன்மடங்கு கூடுவதாக அவனுக்குத் தோன்றியது. ஒரே அல்வாதான். ஆனால், தானாக உண்பதற்கும், அன்பான ஒருத்தி ஊட்டிவிடும்போது அதை உண்பதற்கும் நடுவே எவ்வளவோ பெரிய வித்தியாசம்!

அவன் அவளுடைய தோளைப் பற்றி, அவளைத் தன் பக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அணைப்பில் ஒரு விவரிக்க முடியாத இனிமை இருந்தது.

"என்ன திடீர்னு ரொமான்ஸ்?" என்றாள் அவள், லேசான நாணத்துடன்.

"இல்ல இப்போ நாம அல்வா சாப்பிட்டோம்ல? அது வெறும் அல்வா இல்ல. இரண்டாயிரம் வருடத்துக்கு முன்னாடி திருவள்ளுவர் சொன்ன ஒரு குறளோட பிராக்டிகல் டெமோ," என்றான் அவன்.

"அப்படியா! அது என்ன குறள்?"

"தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு.                (குறள், 1107)"

அவள் அவனைப் புதிதாகப் பார்ப்பது போலப் பார்த்தாள். "அப்படின்னா?"

"தன்னோட சொந்த உழைப்புல வந்த பணத்தால கட்டுன வீட்டுல உட்கார்ந்து, மத்தவங்களோட பகிர்ந்து சாப்பிடும்போது ஓர் அலாதி இன்பம் கிடைக்கும் பாரு, அதே மாதிரி ஒரு பேரன்பின் இனிமைதான், அன்பான காதலியோட அணைப்பில் கிடைக்கிற சுகமும்ன்னு வள்ளுவர் சொல்றார். நாம தனியா வாழ்றதை விட, பகிர்ந்து வாழும்போதுதான் வாழ்க்கையோட உண்மையான சுவையே தெரியுது!"

அவள் புன்னகைத்தாள். "அப்படியா சார்? அப்போ இன்னும் ஒரு ஸ்பூன் அல்வா ஊட்டி விடட்டுமா?"

"தாராளமா! வள்ளுவர் வழியில நாம பயணிக்க வேணாமா?" என்றபடி அவன் அவளை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.

மாடியின் மீது மெல்லிய இளந்தென்றால் வீசத் தொடங்க, அந்த வளாகத்தில் அன்பும் அல்வாவும் இணையற்ற சுவையோடு அமிர்தம் போல நிறைந்திருந்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment