2 Sept 2026

சுடும் நீர்! சுடாத தீ!!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 24

சுடும் நீர்! சுடாத தீ!!

குளிர்பதனம் செய்யப்பட்ட அறையின் காற்றில் லேசான லாவெண்டர் வாசனை. வெளியே வெயில் திருவாரூருக்கேகே உரித்தான கொடூரத்தோடு வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது.

அவன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடியே தேநீரை ஒரு மடக்கு குடித்தான்.

எதிரே அவள்.

அவளுடைய கூந்தல் நுனியில் இன்னும் லேசான ஈரம், கண்ணாடியில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சம், விரல்களில் சுழலும் வைர மோதிரம்.

அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் புதிராகவே இருக்கும்.

"என்ன அப்படிப் பார்க்கறே?" அவள் தன் அலுவலகக் கோப்பைப் பார்த்தபடி, தன் ஐலைனர் தீட்டிய கண்களை உயர்த்திக் கேட்டாள் அவள்.

"இல்ல. வெளிய தீயா எரியுது. ஆனா உன்கிட்ட வந்தா மட்டும் குளிருது. அதெ உன்னை விட்டுத் தள்ளிப் போனா சுடவும் செய்யுதுனு யோசிச்சேன்."

அவள் சிரித்தாள். "பிசிக்ஸ் படிச்சவன்னு காட்டிக்காத. சயின்ஸ்ல இதுக்கு பேரு தெர்மோடைனமிக்ஸ் எக்ஸ்செப்ஷன்."

"இல்ல, இது சயின்ஸ் இல்ல. சங்கம் மருவிய இலக்கியம்."

அவள் புருவத்தை உயர்த்தினாள். "தமிழ் வாத்தியார் மாதிரி பேசாத!"

"நிஜமாத்தான். வள்ளுவர் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே உன்னைப் பத்தி எழுதிட்டுப் போயிட்டார்.

"நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்."                 (குறள், 1104)

என்று ஒரு குறள் உண்டு."

"அப்படின்னா?"

"தூரம் போனா சுடும். பக்கத்துல வந்தா குளிரும். இப்படி ஓர் அதிசயத் தீயை இவ எங்கிருந்து பிடிச்சுட்டு வந்தான்னு தலைவன் புலம்பறான். என்கிட்ட நீயும் அதே தீயாத்தான் இருக்க."

அவள் கொஞ்ச நேரம் பதிலேதும் சொல்லாமல் அவனைப் பார்த்தாள். பிறகு தன் அழகிய டைட்டன் கடிகாரத்தைக் கழற்றி மேசை மேல் வைத்தாள். அலுவலகக் கோப்பை மெல்ல மூடினாள்.

"டேய்! குறும்புக்காரா!" அவளது குரல் சட்டென்று இறங்கி, ஒருவித நெருக்கமான நிசப்தத்தை அந்த அறையில் உருவாக்கியது.

"ம்?"

"அந்தத் தீயை நான் எங்கிருந்து கொண்டு வந்தேன்னு உனக்கு தெரியணுமா?"

"எங்கிருந்து?"

அவள் லேசாக முன் நகர்ந்து, அவன் கைகளைத் தன் இரு கைகளாலும் மூடினாள். அவளது விரல்களின் கதகதப்பு அவனுள் இறங்கியது. அதே நேரம், மனதின் ஏதோ ஒரு மூலையில் ஒரு விவரிக்க முடியாத அமைதியும் குளிர்ச்சியும் பரவியது.

"உன்கிட்ட இருந்துதான். நீ என்கிட்ட காட்டுற அன்போட வெளிப்பாடுதான் அது!" என்றாள் அவள்.

வெளியே திருவாரூருக்கே உரிய வெயில் தன் கொடூரத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்க, அந்த அறையில், வள்ளுவரின் அந்த விசித்திரத் தீ இருவருக்குள்ளும் அமைதியாக எரிந்து கொண்டிருந்தது.

-  சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment