1 Sept 2026

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 23

தேவலோகத்திற்கான கூகுள் மேப்!

தேசிய நெடுஞ்சாலை 83.

அந்த இரவில், காரின் குளிர்பதனக் காற்றில் இளையராஜாவின் மெல்லிசை ஓடிக் கொண்டிருந்தது.

அவன் டேஷ்போர்டைப் பார்த்தான்.

மணி 11:45.

பக்கத்து இருக்கையில் அவள், அவன் தோள் மீது தலை சாய்த்து அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளது லேசான மூச்சுக்காற்று அவன் கழுத்தில் பட்டுத் தெறித்தது.

திடீரென காரின் மியூசிக் சிஸ்டம் தானாகவே சத்தத்தைக் குறைத்துவிட்டு, குரல் வழி உதவியாளரான 'ஆரா' இயங்கியது.

"உங்களது ஹார்ட் ரேட் நிமிடத்திற்கு 62 ஆகக் குறைந்துள்ளது. மூளையின் ஆல்பா அலைகள் சீராக உள்ளன. நீங்கள் இப்போது உச்சகட்ட மன அமைதியில் இருக்கிறீர்கள். சொர்க்கத்திற்குச் செல்ல இதுவே சிறந்த தருணம்," என்றது ரோபோடிக் குரலில்.

"சொர்க்கமா? என்ன உளறுகிறாய் ஆரா?" என்றான அவன்.

"நான் உளறவில்லை. நீங்கள் கடந்த வாரம் பதிவிறக்கம் செய்த 'தேவலோக விஆர்' ஆப் உங்கள் மொபைலில் காத்திருக்கிறது. அதில் 'வைகுந்தம் v2.0' அப்கிரேட் தயார் ஆபர் பிரைஸில். ஜஸ்ட் டென் லேக். தாமரைக்கண்ணன் உலகத்தின் டிஜிட்டல் அனுபவம். அங்கு துக்கமில்லை, மரணமில்லை, எல்லையற்ற பேரானந்தம் மட்டுமே. ஆப்கிரேட் செய்யுங்கள். நீங்கள் அந்த நித்யத்துவத்தை அடைந்துவிடலாம்."

அவன் கண்ணாடியில் பார்த்தான். அவன் மொபைலில் அந்த ஆப் அப்கிரேட் செய்வதற்கான நோட்டிபிகேஷன் மணியடித்தது.

"அங்கு என்னவெல்லாம் இருக்கும்?" அவன் தொடர்ந்தான். 

"மகாவிஷ்ணுவின் பேரழகு, பாற்கடலின் அலை ஓசை, தேவாமிர்தத்தின் சுவை, எந்தக் கவலையுமற்ற நிரந்தர நிம்மதி. மனித மூளை கற்பனை செய்ய முடியாத உச்சபட்ச மகிழ்ச்சி."

அவன் மெல்லத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவள் இன்னமும் உறக்கத்தில் இருந்தாள். அவள் விரல்கள் அவன் கையை இறுக்கமாகப் பற்றியிருந்தன. கனவில் ஏதோ பயந்தவள் போல, அவனை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகக் கட்டிக்கொண்டு அவன் தோளில் முகம் புதைத்தாள்.

அவளது கூந்தல் வாசனை, லேசான வியர்வை மணம், அந்த மென்மையான ஸ்பரிசம் என எந்த வெர்ச்சுவர் ரியாலிட்டி ஆப்பாலும் பிரதியெடுக்க முடியாத ஒரு நிஜத்தின் அசைவு அவனை வசீகரித்தது.

அவன் புன்னகைத்தான். மொபைலில்  இருந்த அந்த ஆப்பை உடனே அன்இன்ஸ்டால் செய்தான்.

"என்ன செய்கிறாய்? தாமரைக்கண்ணனின் உலகு உனக்கு வேண்டாம் என்பதா? அதைவிடச் சிறந்தது இந்த பூமியில் வேறு என்ன இருக்கிறது?" ஆரா ஆச்சரியத்துடன் கேட்டது.

"இருக்கிறது ஆரா," அவன் காரை மெல்ல ஸ்டார்ட் செய்தான். "2000 வருடத்துக்கு முன்னாடியே திருவள்ளுவர் அதை சொல்லி விட்டார்.

"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு?"                   (குறள், 1103)

தான் நேசிக்கும் பெண்ணின் மெல்லிய தோளில் தலைவைத்துத் தூங்கும் அந்த நிஜமான இன்பத்தை விட, அந்தத் தாமரைக்கண்ணனின் வைகுந்த உலகம் அவ்வளவு இனிமையானதா என்ன? கண்டிப்பா இருக்காது!"

ஆரா மௌனித்தது.

அவன் மனம் இறக்கைக் கட்டிக் கொண்டது.

கார் நெடுஞ்சாலையில் வேகமான பறக்க, அவள் அவன் தோளில் இன்னும் கொஞ்சம் ஆழமாக முகம் புதைத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு இப்போது அந்த வைகுந்தம் காரின் உள்ளேயே இருப்பது போலிருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment