27 Aug 2026

நகுதலின் அனாடமி

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 18

நகுதலின் அனாடமி

மழை நின்ற மாலை வேளையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர் வீதி வழியே மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. கமலாலயக் குளத்தின் அலைகளில் விடியற்காலை சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நடனமாடிக் கொண்டிருக்க, வசந்த மண்டபத்தின் தூணோரம் அமர்ந்திருந்தான் அவன்.

அவன் லேப்டாப் திரையில் ஏஐ மாடல்களுக்கான கோடிங் ஓடிக் கொண்டிருந்தது. எதிரே பிரகாரத்துக் கல் தரையில் அமர்ந்திருந்தாள் அவள். அவளது கரங்களில் ஒரு பழங்காலப் புத்தகம். வடிவேலு செட்டியார் எழுதிய திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்.

அவன் ஒரு முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளன். லாஜிக், டேட்டா, அல்காரிதம் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது.

அவள் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவள், திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் பிஎச்டி செய்து கொண்டிருப்பவள். உணர்ச்சிகளால் வாழ்பவள். இவனுக்கும் அவளுக்கும் காதல் எப்படி வந்தது என்பது தியாகேச பெருமானுக்கே வெளிச்சம்.

"டேய்!"

"சொல்லு, அந்த அமெரிக்க கிளையண்ட்டுக்கு இன்னும் நியூக்ளியர் மாடல் இமெயில் அனுப்பல."

"இதை கொஞ்சம் கேளேன்," அவளது குரலில் பாரிஜாத மலரின் மென்மையைப் போன்ற ஒரு ரகசியக் கிளுகிளுப்பு.

"காமத்துப்பால்ல ஒரு குறள்.

''அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.''               (குறள், 1098)

படிக்கும்போதே மனசுக்குள்ள ஒரு மாதிரி பண்ணுதுடா."

அவன் லேப்டாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல், "விளக்கம்? பிபிடி போட்டு அனுப்புறீயா?" என்றான்.

அவள் சலித்துக் கொண்டாள். "டேய் லூசு, குறளுக்கு அர்த்தம் தெரியுமா? தளர்ந்த மெல்லிய நடையை உடையவளான தலைவியை நான் பார்த்தப்போ, அவ மனசுல ஏதோ ஒரு பசை அதாவது அன்பு சுரந்து, மெல்லச் சிரிச்சாளாம். அந்தச் சிரிப்புல ஒரு பேரழகு இருந்ததுன்னு தலைவன் சொல்றான். புரியுதா?"

"புரிஞ்சது. யூஸர் எக்ஸ்பீரியன்ஸ் நல்லாருக்கு."

"சீ! உன்கிட்ட போய் சொன்னேன் பாரு. உனக்கெல்லாம் ரொமான்ஸே வராது. எப்பப் பார்த்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் திரையையே பார்த்துட்டு இரு," என்று புத்தகத்தை படாரென மூடிவிட்டு, சந்நிதிப் பிரகாரத்தை நோக்கி விறுவிறுவெனச் சென்றாள்.

"ஏய்!" அவள் திரும்பிப் பார்க்காமல் கோயில் பிரகார இருளுக்குள் மறைந்தாள்.

அவன் பெருமூச்சு விட்டான். அவனுக்குக் காதல் வராமல் இல்லை. ஆனால் அதை வார்த்தைகளில் கொட்டத் தெரியவில்லை. கோடிங் எழுதுவது போலக் காதலை வெளிப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அடுத்த நாள் மாலை நேரப் பிரதோஷம்.

தியாகராஜர் கோயிலின் ராஜகோபுரத்தின் நிழல் கமலாலயக் குளத்து நீரில் நீண்டு கொண்டிருந்தது. குளத்துப் படிகளில் அவள் அமர்ந்திருந்தாள். இன்னமும் நேற்றைய கோபம் குறையவில்லை. அவனிடமிருந்து போன் வரவில்லை, மெசேஜ் வரவில்லை. "ஒரு சாரி கூட கேட்கத் தெரியாத மரக்கட்டை," என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே குளத்து நீரில் சிறு கற்களை வீசினாள்.

அப்போது படித்துறையில் ஒருவனின் நடைச்சத்தம்.

நிமிர்ந்து பார்த்தாள். அவன்.

வழக்கமாக வேகவேகமாக, வேலைப் பளுவின் அழுத்தத்தில் ஓடிவரும் அவனது நடை இன்று வேறு மாதிரி இருந்தது. கமலாலயக் குளத்தின் அகலத்தையும் கோயிலின் அமைதியையும் உள்வாங்கியது போன்ற ஒரு தளர்ந்த, நிதானமான நடை, அசையியல் நடை! அவனது தோற்றம், சட்டை மடிப்பு, கையில் வைத்திருந்த ஒரு சிறிய காகிதம் எல்லாமே வழக்கத்துக்கு மாறாக ஒரு மென்மையைக் கொண்டிருந்தன.

அவள் அவனை அறியாமல் அவனையே உற்றுப் பார்த்தாள்.

அவன் அருகில் வந்து குளத்துப் படியில் அமர்ந்தான். இருவரிடமும் பேச்சில்லை. அவன் அவளது கண்களை நேருக்கு நேராகப் பார்த்தான். அந்தப் பார்வையில் எந்த அவசரமும் இல்லை. ஒருவிதமான ஆழ்ந்த அன்பு, ஏக்கம், ஒரு சிறிய பயம் எல்லாம் கலந்திருந்தது.

'அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்...' அவளது மனதுள் நேற்றைய குறள் சட்டென்று தியாகராஜரின் அஜபா நடனம் போல ஆடியது.

அவள் உதடுகள் தானாகப் பிரிந்தன. மனதின் அடி ஆழத்தில் ஏதோ ஒரு பசை, அன்பின் பிசின் சுரந்து அவளை அறியாமல் பெருகியது. அவளுக்குள் ஒரு வெட்கம் ஊற்றெடுத்தது. தலை குனிந்து, மெல்ல, ரகசியமாகப் புன்னகைத்தாள். 'பசையினள் பைய நகும்' என்று திருவள்ளுவர் சொன்ன அதே புன்னகை.

அந்தச் சிறிய புன்னகையில் ஆயிரம் கவிதைகள் இருந்தன.

அவன் கையில் இருந்த காகிதத்தை அவளிடம் நீட்டினான்.

அது ஒரு பைதான் கோடிங் அச்சுப் பிரதி.

அவள் அந்தக் காகிதத்தைப் பார்த்துவிட்டு, குளத்துப் படிகளே அதிர உரக்கச் சிரித்துவிட்டாள்.

"என்னடா இது?"

"நேத்து நீ சொன்ன குறளை பைதான்ல எழுத ட்ரை பண்ணேன். வொர்க் அவுட் ஆவுமா?" அவன் அப்பாவித்தனமாகக் கேட்டான்.

"லூசு! வள்ளுவன் 2000 வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை, நீ கோட் பண்ணி வச்சிருக்கயா?"

"கோடிங் முக்கியமில்லை. நீ நேத்து சொன்னப்போ எனக்குப் புரியல. ஆனா இப்போ நீ மெல்லச் சிரிச்சப்போ, அந்தப் பாட்டுல இருந்த மொத்த அர்த்தமும் எனக்குப் புரிஞ்சது."

அவள் அவனது கைகளைப் பற்றிக் கொண்டாள். கமலாலயக் குளத்திலிருந்து வீசிய மாலைக் காற்று இருவரையும் தழுவிச் சென்றது. கோயிலின் மணி ஓசையுடன் தொழில்நுட்பமும் தமிழும் அந்தச் சிறிய புன்னகையில் சங்கமித்திருந்தன.

-           சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment