திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்
சூத்திரம் – 15
ஓரக்கண்ணிற்கான ஆப்டிகல் விதிகள்!
மழைத் தூறல் லேசாக ஹெல்மெட் விஸரில் விழ, கையால்
அதைத் துடைத்தபடி கேடிஎம் 390 டியூக் பைக் எஞ்சினின் கர்ஜனையைக் கூட்டினான் அவன்.
திருவாரூர் வாளவாய்க்கால் சிக்னலில் சிவப்பு
விளக்கு எரிந்தது.
வண்டி நின்றது.
பக்கத்தில் வந்து நின்றது ஒரு சிவப்பு நிற
வெஸ்பா ஸ்கூட்டர்.
ஓட்டுவது அவள்.
அவனுக்கும் அவளுக்கும் இடையே கடந்த மூன்று
வாரங்களாக ஒரு மெளனப் போர் ஓடிக்கொண்டிருந்தது.
திருவாரூர், தெற்கு வீதியில் இருக்கும் ஐலவ்ஐலவ்ஐ
தனியார் வங்கிக் கிளையில் இருவரும் ஒரே டிபார்ட்மென்ட்.
அடுத்த வாரம் அறிவிக்கப்படப்போகும் அசிஸ்டெண்ட்
மேனேஜர் பதவி உயர்வுக்கான போட்டியில் இருவருமே இருந்தார்கள். காதலும் இருந்தது, கூடவே
யார் கெத்து என்ற தடிப்பான ஈகோ எனும் தன்முனைப்புக்கான சுவரும் நடுவே நின்றுகொண்டிருந்தது.
விளைவு…
வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதில் அனுப்புவதில்
தாமதம், வங்கியின் உணவு அறையில் சந்தித்தால் லேசான தலையசைப்பு மட்டுமே என இருவருமே
தங்களை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ளப் போராடினார்கள்.
அவனுக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்,
மனம் விட்டுப் வேண்டும் என்று அத்தனை தவிப்பு. ஆனால், ''நான் ஏன் முதலில் பார்க்க வேண்டும்?
பார்த்தால், நாம் இறங்கி வந்ததா ஆயிடுமே!'' என்ற அக்மார்க் ஆண் திமிர் அவனைத் தடுத்தது.
சிக்னலுக்காகக் காத்து நின்றவன், தலையைச் சற்று
உயர்த்திக் கொண்டு நேராகப் புலிவலத்துக்குச் செல்லும் சாலையைப் பார்த்தான்.
அதே நேரத்தில் ஹேண்டில்பாரை இறுக்கமாகப் பிடித்தபடி,
அவனது பார்வை லேசாக இடது ஓரம் சரிந்தது. அவளை நேரடியாகப் பார்க்காதது போலவும், சிக்னலின்
மீது மட்டுமே முழு கவனமும் இருப்பது போலவும் ஒரு பக்கா சிவாஜி கணேசனும் கமலஹாசனும்
கலந்தது போன்ற ஒரு நடிப்பு.
அவள் அதைக் கவனித்துவிட்டாள். ஹெல்மெட் விசரைக்
லேசாக உயர்த்தி விட்டாள்.
அவளும் அவனை நேருக்கு நேராகப் பார்க்கவில்லை.
வண்டியின் கண்ணாடியைச் சரிசெய்வது போலப் பாசாங்கு செய்தாள்.
அவளுடைய நேர்க்கோடு பார்வை சாலையை நோக்கியிருந்தது.
ஆனால், அந்தச் சாய்ந்த ஓரக்கண் பார்வை அவனின்
பதற்றத்தை, அவன் ஓரக்கண்ணால் தன்னைத் திருட்டுத்தனமாக நோட்டமிடுவதை அக்குவேறு ஆணிவேறாகப்
பிரித்து மேய்ந்தது.
அவள் உதட்டின் ஓரத்தில் ஒரு மெல்லிய புன்னகை
அரும்ப, கடைக்கண்ணால் ஒரு கேலிப் பார்வை பார்த்தாள்.
''டேய் லூசு! காஸ்ட்லி பைக்ல கெத்தா உக்காந்திருந்தாலும்,
என்னை நேராப் பார்க்க தைரியம் இல்லாம, சிக்னலைப் பாக்குற மாதிரி ஓரக்கண்ணால திருட்டுத்தனமா
பாக்குறீயேடா!'' என்ற எள்ளலும், ''உன் ஈகோ எனக்குத் தெரியாதா?'' என்ற கேலியும் கலந்த
சிரிப்புடன் கூடிய ஓரக்கண் பார்வை அது.
அந்த ஒரு நொடிச் சிரிப்பில், அந்தக் கேலிப்
பார்வையில் அவன் கட்டி வைத்திருந்த மொத்த தன்முனைப்புக் கோட்டையும் தவிடுபொடியானது.
தன் திருட்டுத்தனம் மாட்டிக்கொண்டதை நினைத்து
ஹெல்மெட்டுக்குள் அவன் முகம் சிவந்தது.
அவள் இப்போது சத்தமாகவே சிரித்துவிட்டாள்.
தான் தோற்றுவிட்டோம் என்பதை அவனுடைய உள்மனம்
உணர்ந்துகொண்டது.
பச்சை விளக்கு எரிந்தது.
அவள் வெஸ்பா ஸ்கூட்டரை முறுக்கிக் கொண்டு சீறிப்
பாய்ந்தாள்.
அவன் பைக்கை நகர்த்தக் கூட மறந்து, அப்படியே
நின்றான்.
பின்னால் வண்டிகளின் ஹாரன் சத்தம் காதைப் பிளந்தது.
தாங்க முடியாத அந்தச் சத்தத்திற்கு மத்தியில் அவளது ஸ்கூட்டர் புகையைக் கிளப்பிக் கொண்டு
சென்று மறைவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.
பெண்களின் அந்த ஒரு கடைக்கண் பார்வையோடு கூடிய
கேலி சிரிப்புக்கு முன்னால் எந்த ஆண்களின் தன்முனைப்பும் நிற்காது.
ஏனென்றால், அந்த ஓரக்கண் நக்கல் பார்வைக்கான
ஆப்டிக்கல் விதியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் பொட்டில் அடித்தது
போல எழுதி விட்டார்.
''குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.'' (குறள்,
1095)
- சூத்திரங்கள் தொடரும்!
*****

No comments:
Post a Comment