இட்டலிக்கு அமெரிக்காவும் ஈரானும் வைத்த குறி!
தமிழ்நாட்டில்
இப்போது ஓர் இட்டலி சாப்பிடுவது என்பது, பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்குச் சமமான
ஒரு காரியமாகிவிட்டது.
ஈரான்
– அமெரிக்கா யுத்தம் முடிவுக்கு வருகிறதோ இல்லையோ, தமிழகத்தில் ஒரு தட்டில் இருக்கும்
இரண்டு இட்டலிகளுக்கு இடையிலான சாம்பாருக்கான பட்ஜெட் போர் முடிவுக்கு வரப் போவதில்லை.
வணிகப்
பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ஒரே அடியாக 993 ரூபாய் உயர்ந்து, இப்போது 3,071
ரூபாய்க்கு வந்து நிற்கிறது.
சிலிண்டரின்
எடை 19 கிலோதான், ஆனால் அதன் விலை இப்போது ஒரு சாமானியனின் மாதச் சம்பளத்தின் எடையைத்
தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
எண்ணெய்
நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை விலையை உயர்த்தின. ஹோட்டல் உரிமையாளர்கள் சனிக்கிழமை விலையை
உயர்த்தினார்கள். மக்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டினி கிடக்க முடிவெடுத்தார்கள். இதுதான்
தற்போதைய டிஜிட்டல் வேகத்திலான சப்ளை செயின்!
இப்போது
ஹோட்டல் உணவுகளின் விலை உயர்வுப் பட்டியலைப் பார்த்தால், அது உணவக மெனு கார்டு போலத்
தெரியவில்லை, ஏதோ ஒரு அபராதப் பட்டியல் போலத் தெரிகிறது.
ரோட்டுக்கடை
இட்டலி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்குத் தாவிவிட்டது. ஒரு இட்டலிக்கு 5 ரூபாய் உயர்வு
என்பது அற்பமாகத் தோன்றலாம். ஆனால், பத்து இட்லி சாப்பிடும் ஒரு மல்யுத்த வீரருக்கு
இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவு.
சிக்கன்
பிரியாணி 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கு அப்கிரேட் ஆகிவிட்டது. பிரியாணியில் இருக்கும்
சிக்கன் துண்டுகள் குறைகிறதோ இல்லையோ, நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்துண்டுகள் காணாமல்
போவது உறுதி.
வாழ்க்கையே
ஒரு டீயும் பஜ்ஜியும்தான் என்று நினைத்திருந்த பேச்சிலர்களுக்கு இப்போது டீ 15 ரூபாய்.
பஜ்ஜிக்குள் இருக்கும் உருளைக்கிழங்குக்குக் கூட அவ்வளவு மதிப்பு கிடையாது, அதைச் சுட
வைக்கும் அந்த காஸ்க்குத்தான் இவ்வளவு மதிப்பு!
வெளியூரில்
தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கும், வெளியூர்களில் வேலை பார்க்கும் ஐடி ஊழியர்களுக்கும்
பெய்டு கெஸ்ட் என்பது பெயின்புல் கெஸ்ட் ஆக மாறிவிட்டது.
சாப்பாட்டுச்
செலவு அதிகரித்ததால் விடுதி வாடகை 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை ஏறிவிட்டது.
30,000
ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியர், தன் சம்பளத்தில் எஞ்சியிருப்பதை மைக்ரோஸ்கோப் வைத்துத்
தான் தேட வேண்டியிருக்கிறது.
ஹோட்டல்
சங்கங்கள் ஜி.எஸ்.டியைக் குறைக்க சொல்கிறது, கரண்ட் பில்லைக் குறைக்க சொல்கிறது. நடக்கிற
காரியங்களா இவை?
அப்புறம்
18 சதவீத வரியில் மின்சார அடுப்பு வாங்கி, சமைக்கலாம் என்று பார்த்தால், பீக் ஹவர்
சார்ஜ் என்று மின்சார வாரியம் ஷாக் கொடுக்கிறது. ஒரு பக்கம் சிலிண்டர் சுடுகிறது, மறுபக்கம்
கரண்ட் பில் எரிக்கிறது.
உலக
அரசியல் காரணமாக எரிவாயு விலை உயர்கிறதாம். தேர்தலுக்கு முன்பு வரை உயரவில்லை என்பதால்
அப்போது உலக அரசியல் நடக்கவில்லை என்று அர்த்தமல்ல.
விசயம்
இதுதான், எங்கோ இரண்டு நாடுகள் சண்டை போட்டுக் கொண்டால், தமிழகத்தில் இருக்கும் ஓர்
ஆட்டோ டிரைவர் தன் மத்தியானச் சாப்பாட்டில் ஓர் அப்பளத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது.
வளர்ச்சி
என்பது எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தோம். ஆனால் இப்போது விலை உயர்வு மட்டுமே
எல்லோருக்குமான பொதுவான வளர்ச்சியாக இருக்கிறது.
இனிமேல்
குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போவதற்குப் பதில், ஒரு பர்சனல் லோன் எடுத்துக்கொண்டு
போவது புத்திசாலித்தனம்!
*****

No comments:
Post a Comment