வெள்ளை நிறமும், விவகாரமான மன்னிப்பும்!
பாலிவுட்டில் எப்போதுமே ஒரு மேஜிக் உண்டு.
அங்கே சில நடிகர்கள் நடிப்பதோடு நிறுத்திவிடுவதில்லை; அவ்வப்போது வாயைத் திறந்து வம்பையும்
விலை கொடுத்து வாங்குவார்கள்.
இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்ட் வரவு, சீனியர்
நடிகர் அன்னு கபூர்.
விஷயம் இதுதான். தமன்னா ஸ்திரீ 2 படத்தில்
ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். அந்தப் பாட்டைப் பார்த்த அன்னு கபூருக்குப் பாராட்டு
மழை பொழியத் தோன்றியிருக்கிறது. ஆனால், அவர் பயன்படுத்திய ரெசிபிதான் கொஞ்சம் தப்பாகிவிட்டது.
தமன்னாவைப் பால் போன்ற மேனி கொண்டவர் என்று
இந்தியில் சொன்னாராம். அப்படி அவர் வர்ணிக்க, சோஷியல் மீடியா பொங்கி எழுந்துவிட்டது.
என்ன சார், இது உருவக்கேலி மாதிரி இருக்கே?
என்று நெட்டிசன்கள் கேட்க, அன்னு கபூர் உடனே ஒரு விளக்கத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்.
அந்த விளக்கம், சர்ச்சையைத் தீர்ப்பதற்குப்
பதில், எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல் இருக்கிறது.
நான் தமன்னாவின் ஹார்ட் வொர்க்கைப் பார்த்துதான்
அப்படிச் சொன்னேன், ஒருத்தர் அழகைப் பாராட்டுறது தப்பா? என்று கேட்கிறார் அன்னு கபூர்.
போதாக்குறைக்கு, நான் இதையே ஆங்கிலத்தில் மில்கி
பாடி என்று சொல்லியிருந்தால் யாரும் கண்டுக்க மாட்டார்கள், ஹிந்தியில் சொன்னதுதான்
குத்தமா? என்று ஒரு லாஜிக் வேறு.
ஆங்கிலத்தில் சொன்னால் மட்டும் அது எப்படி
கவிதையாகும் என்பது அவருக்கே வெளிச்சம்.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, தமன்னாவுக்கு வருத்தம்
இருந்தால், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் தயார். எனக்கு 71 வயதாகிறது,
என்று சென்டிமென்ட் கார்டை இறக்கியிருக்கிறார்.
71 வயதாகிறது என்பதற்கும், ஒரு பெண்ணின் உடல்
பாகங்களை வர்ணிப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று யாருக்கும் புரியவில்லை.
மன்னிப்பு கேட்க காலில் விழுவது ஒரு பக்கம்
இருக்கட்டும், முதலில் அந்த வர்ணனை நாகரிகமா என்பதுதான் இங்கே பில்லியன் டாலர் கேள்வி.
மொழியை விடுங்கள், ஹிந்தியோ? இங்கிலீஷோ? ஒரு
பெண்ணின் உடல் நிறத்தையும், அங்கங்களையும் பொதுவெளியில் வைத்து மார்க் போடுவது எந்த
ஊர் நாகரிகம் என்று இணையவாசிகள் மல்லுக்கட்டுகிறார்கள்.
கடின உழைப்பைப் பாராட்ட காலில் விழ வேண்டாம்
சார், கொஞ்சம் கண்ணியமாகப் பேசினாலே போதும் என்பதுதான் அன்னு கபூரை நோக்கிய பொதுவான
கருத்தாக இருக்கிறது.
பாராட்டு என்பது பூங்கொத்து மாதிரி இருக்க
வேண்டும். அது ஏன் சிலருக்கு மட்டும் பூமராங் மாதிரி திரும்பி வந்து மூக்கைத் தாக்குகிறது
என்பதுதான் புரியாத புதிர்!
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றுஆகா தாகி விடும். (குறள்,
128)
என்கிறார் வள்ளுவர்.
உண்மைதானே?!
*****

No comments:
Post a Comment