25 Apr 2026

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

அநீதிக்கு எதிரான நீதி – காலத்தின் தேவை!

உலகெங்கும் அநீதியின் முழங்கால் ஒரு கழுத்தை நெரிக்கும் போது, நீதியின் குரல் வீதிகளில் கேட்கிறது. ஆனால் இங்கே? இங்கே அநீதி என்பது ஒரு டெய்லி பேசஞ்சர் போல. தினமும் வந்து போகிறது. யாரும் கவனிப்பதில்லை.

கொரோனா காலத்தில் உலகமே வீட்டுக்குள் அடைந்து கிடந்தபோது, சாத்தான்குளம் காவல் நிலையச் சுவர்களுக்குள் ஒரு மௌனக் கொடூரம் அரங்கேறியது. ஜெயராஜும் பென்னிக்ஸும் சித்திரவதை செய்யப்பட்டார்கள். அதிகாரம் தன் பற்களைக் காட்டியது.

வழக்கம் போல, காவல்துறை தன் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டது. அவங்க தரையில் உருண்டாங்க, அதான் காயம் என்றது, மாரடைப்பு வந்துடுச்சு, அதனால்தான் மரணம் வந்துடுச்சு என்றது, ஏறும்போது தவறி விழுந்துட்டாங்க, அதனால்தான் எலும்பு முறிவு என்றது.

இந்தக் கதைகளை எல்லாம் கேட்டால், அந்தப் பகுதியில் புவி ஈர்ப்பு விசை கொஞ்சம் அதிகமாக இருந்ததோ என்று ஒரு சந்தேகம் வரும். இது காவல் மரணமே இல்லை என்று அதிகாரம் தன் முழுத் தொண்டையையும் பயன்படுத்திச் சொன்னது.

இருள் அடர்ந்திருந்த வேளையில், உயர்நீதிமன்றம் தானாகவே உள்ளே நுழைந்தது. அங்கிருந்துதான் சீன் மாறியது. சி.பி.ஐ. விசாரணை, 2000 பக்கக் குற்றப்பத்திரிகை, 100 சாட்சிகள் என மேட்டர் சீரியஸ் ஆனது.

இதில் ஹீரோயினாகத் தெரிந்தது தலைமைக் காவலர் ரேவதி. அதிகாரத்தின் கண்ணுக்கு முன்னால் நின்று, ஆமா, அடிச்சது உண்மைதான் என்று அவர் சொன்ன சாட்சியம், ஒரு திகில் படத்தில் வரும் திருப்புமுனை போன்றது. நீதிபதி முத்துக்குமரனின் தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் வரலாற்றில் ஒரு டைமண்ட் கட்டி. ஒன்பது காவலர்களுக்கு இரட்டை மரண தண்டனை.

பாதிக்கப்பட்டோருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணத்தால் உயிரைத் திரும்பக் கொண்டுவர முடியாதுதான், ஆனால் அதிகாரம் செய்த தப்புக்கு ஒரு அபராதம் வேண்டாமா?

இது வெறும் லத்தி அடி மட்டுமல்ல. மாஜிஸ்திரேட்டின் அலட்சியம். அதாவது, பார்க்காமலேயே ரிமாண்ட் செய்தது. மருத்துவத்துறையின் பொய்ச் சான்றிதழ். சிறைத்துறையின் கள்ள மௌனம். இப்படி எல்லாரும் சேர்ந்து போட்ட ஒரு பிளான்தான் அந்த இரண்டு மரணங்கள். இது அதிகாரத்தின் அரிவாளில் அறுந்த மனிதத்துவத்தின் ரத்தச் சுவடு.

மரண தண்டனை பற்றிய விவாதங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், தென்காசி மணிகண்டன் மீது நடந்த துப்பாக்கிச் சூடு என்ன சொல்கிறது? நாங்க மாற மாட்டோம் என்று காவல்துறை அடம் பிடிப்பது போல இருக்கிறது.

இந்தியாவில் சித்திரவதைக்கு எதிராக இன்னும் ஒரு தனிச் சட்டம் இல்லை என்பது, ஒரு கார் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதற்கு பிரேக் போட மறந்துவிட்ட கதையாக இருக்கிறது.

சித்திரவதைக்கு எதிராகக் கடுமையான சட்டம் வேண்டும், அதைவிடக் கடுமையாக அமலாக்கம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, லத்தியை ஏந்தும் கைகளுக்குப் பின்னால் இருக்கும் மூளைக்குசக் கொஞ்சம் மனிதநேயம் தேவை. அதுவரை, காவல் நிலையங்களின் இருண்ட அறைகள் வெறும் விசாரணை அறைகள் அல்ல, அவை மரணக் கூடங்கள்.

சாத்தான்குளம் தீர்ப்பு ஒரு நம்பிக்கை ஒளி. ஆனால், அந்த ஒளி அணைந்துவிடாமல் இருக்க, சித்திரவதைக்கு எதிரான சட்டம் எனும் பேட்டரி நமக்குத் தேவை. மத்திய அரசு செய்யுமா? அல்லது தமிழக அரசு முந்துமா? பார்ப்போம்.

*****

No comments:

Post a Comment