14 Aug 2026

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 5

எமன் வந்தக் கதையை யாருமே கேட்கவில்லை!

மருத்துவமனை தாழ்வாரத்தில் மாலையின் நிழல்கள் நீளத் தொடங்கியிருந்தன. ப்ளோரசன்ட் வெளிச்சத்தில் ஆபரேஷன் தியேட்டர் போர்டு சிவப்பு நிறத்தில் பளபளத்துக்கொண்டிருந்தது.

அவன் சுவரில் சாய்ந்து மூச்சு வாங்க நின்றான். நியூரோ சர்ஜரி பிரிவில், மூளையின் நுண்ணிய நரம்புகளை கத்தியால் தொடும்போது கை ஒரு மில்லிமீட்டர் கூட நடுங்காத ஆசாமி அவன். எத்தனையோ எமர்ஜென்சிகள். ஒன்றில் கூட பதற்றப்பட்டு பார்த்ததில்லை. ஆனால், இப்போது அவனது பல்ஸ் ரேட் 120ஐ தொட்டிருந்தது.

காரணம், புது இளம் மருத்துவரான அவள்.

கையில் கோப்புகளுடன் அவள் கடந்து போகும்போது வீசிய அந்த அரை விநாடிப் பார்வை அவனது மனசுக்குள் குழப்பத்தைக் கிளப்பியிருந்தது. கையில் இருந்த ஸ்டெத்தாஸ்கோப் நழுவப் பார்த்தது.

"என்ன டாக்டர், ஆபரேஷன் தியேட்டர் வாசல்லயே நின்னு லோ போட்டரி ஆயிட்டு இருக்கீங்க?"

சத்தம் கேட்டுத் திரும்பினான் அவன். அங்கே அவனது நண்பன் நின்றிருந்தான்.

"டேய் மூளை அறுவை சிகிச்சை பண்ணும் போது கூட எனக்கு இவ்வளவு குழப்பம் வந்ததில்லைடா. இப்போ அவள் ஒரு பார்வை பார்த்தா பாரு." அவன் தயங்கினான்.

"யாரு, அந்த புது ஜூனியர் டாக்டரா? என்ன ஆச்சு?"

"என்ன பார்வை அது? உயிரை சட்டென்று உறிஞ்சி எடுக்கும் எமன் மாதிரியும் இருக்கு. மை தீட்டிய மனிதப் பெண் கண் மாதிரியும் இருக்கு. காட்டில் வழிதவறி மிரளும் பெண் மான் மாதிரியும் இருக்கு. மூணும் ஒரே பார்வையில் மிக்ஸ் ஆகி வந்தா எந்த மனுஷன் தாங்குவான்?" என்று புலம்பினான் அவன்.

அவனது நண்பன் லேசாகச் சிரித்தான். "டேய், நீ சொல்றது எனக்கு ரொம்பப் பழகின லாஜிக் மாதிரி இருக்கே! கொஞ்சம் பொறு, நாம கீழே மரத்தடிக்குப் போவோம்."

மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தடிக்கு இருவரும் வந்தனர். அப்போது அங்கே இன்னொரு பெண் வந்தாள். அவள் அந்த மருத்துவமனையின் மூத்த ஆலோசகர். அவனது நண்பனின் காதலி.

"என்ன டாக்டர்ஸ், ஏதோ பெரிய அனாலிசிஸ் போயிட்டு இருக்கு போல?" என்றாள் நண்பனின் காதலி.

அவனது நண்பன் அவனைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சொன்னான், "இவன் இப்போதான் ஒரு பொண்ணோட பார்வையை அனலைஸ் பண்ணி குழம்பிப்போய் இருக்கான். ஆனா, இதுக்கு வள்ளுவர் அன்னைக்கே 1085 ஆவது குறள்ல ரிப்போர்ட் எழுதிட்டாருன்னு இவனுக்குத் தெரியல."

"நீயாவது தமிழ் படிக்கறதாவது?" நண்பனின் காதலி நண்பனைப் பார்த்துச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் கொஞ்சம் அசிடிக் ஆசிட், நிறைய சர்க்கரை.

"நிஜமாத்தான்.

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கம்இம் மூன்றும் உடைத்து.                        (குறள், 1085)

இதுதான் அந்தக் குறள்," என்றான் அவனது நண்பன்.

அவன் நண்பனை அசந்து பார்த்தான். "டேய், நான் யோசிச்ச அதே மூணு விசயங்கள்!"

"ஆமாடா," அவனது நண்பன் விளக்கினான். "ஒன்று கூற்றம், அதாவது நம்ம உயிரை வாங்குற எமன். இரண்டாவது பிணை, அதாவது பெண் மான். அந்த மானோட மிரண்ட பார்வை. மூன்றாவது: மடவரல் நோக்கம், அதாவது எதுவுமே தெரியாத மாதிரி ஒரு அப்பாவித்தனமான பார்வை. இந்த மூன்றும் ஒரே நேரத்துல டிஸ்ப்ளே ஆகும்போது, அது யாரா இருந்தாலும் அவன் காலி. ஆமாடா அப்போ நியூரோ சர்ஜனான உன் கை நடுங்கும்; என்னோட இதயம் சுக்கு நூறா வெடிக்கும்!"

நண்பனின் காதலியின் கண்கள் லேசாகச் சுருங்கியது. "அப்போ நானும் இவனைத் தடுமாற வச்ச அந்த ஜூனியர் டாக்டரும் உங்களுக்கு எமனா?"

"விஷயம் அது இல்லை," அவனது நண்பன் சற்றே நீட்டி லெக்சர் அடித்தான். "அந்தப் பார்வையில எமன் இருக்கான். ஏன்னா அது எங்களை மொத்தமா காலி பண்ணுது. மான் இருக்கு. ஏன்னா அதுல ஒரு பயமும் அழகும் கலந்துருக்கு. அப்புறம் அந்த அப்பாவித்தனம். நான் என்ன பண்ணேன்ங்கிற மாதிரி ஒரு லுக். இந்த மூணும் சேரும்போது எந்த லாஜிக்கும் ஒர்க் ஆகாது."

நண்பனின் காதலி நண்பனைச் சற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் இப்போது எமன் இல்லை; மான் மட்டுமே இருந்தது. "இப்போ நான் எப்படிப் பார்க்கறேன்?"

"இப்போவா? வள்ளுவர் தோத்துட்டாருன்னு நினைக்கிறேன்," என்றான் அவனது நண்பன்.

அப்போது அந்த மரத்தடியைக் கடந்து கோப்புகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தாள் அந்த இளம் டாக்டர். அவள் தன்னை அறியாமல் அவர்கள் நின்றிருந்த மரத்தடியை ஒருமுறை திரும்பிப் பார்க்க, மீண்டும் அதே ஹை வோல்டேஜ் ஷாக் அவனுக்குள் பாய்ந்தது.

அவன் தன் நண்பனைப் பார்த்துச் சொன்னான், "இல்லடா வள்ளுவர் தோக்கல, ஆனா நாம ரெண்டு பேரும் மொத்தமா தோத்துட்டோம்!"

அவர்கள் மூவரும் சிரிக்க அந்த மரத்தடி நிழலில் தமிழ் மறையின் அழகு மெல்ல உறைந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment