14 Jun 2026

காதல் வறட்சி & சைக்கோ புரட்சி காட்டிய விபரீதப் பாதை!

சீரழித்த சினிமா – 12

காதல் கொண்டேன்

காதல் வறட்சி & சைக்கோ புரட்சி காட்டிய விபரீதப் பாதை!

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டின் ஜூலை மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பகுத்தறிவுக்கும், மனநலம் சார்ந்த புரிதல்களுக்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, திரையரங்கு வாசலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய காதல் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது, பிடிக்கவில்லை என்றால் விலகிப் போக வேண்டும், என்ற நாகரிக விதியை அடியோடு மாற்றி, ஒருவன் சிறுவயதில் சித்திரவதைக்கு ஆளாகியிருந்தால், அவன் கல்லூரியின் டாப் ஸ்டூடென்ட்டாக இருந்தாலும் சரி, தனக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணை மிருகத்தனமாக அடைய நினைப்பதும், அதற்காக அவளது காதலனைக் கொல்லத் துரத்துவதும் புனிதமான காதல் என்ற ஒரு புதுவிதமான மனப்பிறழ்வு வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை 2003 இல் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு உண்டு.

ஒடுக்கப்பட்ட, அதேசமயம் ஆபத்தான சைக்கோ நாயக பிம்பமும், அதனோடு ஒத்தூதிய பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு மனநலக் காப்பக நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த மனிதநேயக் கல்வி என்ன தெரியுமா? ஒரு பெண் உங்களிடம் அன்பாகப் பழகி, உங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து, உங்களை ஒரு நல்ல நண்பனாகப் பார்த்தால் போதும்; நீங்கள் உடனடியாக அவளை உங்கள் சொத்து என்று முடிவு செய்துவிடலாம். அவளுக்கு இன்னொரு காதலன் இருந்தால், அவனைக் கொலை செய்யத் திட்டமிடலாம் என்பதுதான்.

காதலில் நாகரிகம், சம்மதம் போன்ற அற்பமான விஷயங்கள் எல்லாம் கமர்ஷியல் சினிமாவுக்குப் பொருந்தாது. ஒருவன் அனாதை என்ற ஒற்றைக் காரணத்திற்காக, அவன் செய்யும் அத்தனை குற்றங்களையும், கடத்தல்களையும், கொலைமுயற்சிகளையும் காதலின் தீவிரம் என்பதாக இத்திரைப்படத்தால் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் தங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால், அவளைப் பின்தொடர்ந்து சென்று ஆசிட் ஊற்றுவதையும், வன்முறையில் ஈடுபடுவதையும் காதல் கொண்டேன் நாயகன் பாணியில் நியாயப்படுத்தும் ஓர் ஆபத்தான வக்கிரத் தலைமுறையின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதல் கொண்டேன் திரைப்படம் வன்முறையைக் கண்ணீரோடு கலந்த கமர்ஷியல் வியாபாரம். வில்லன் அல்லது எதிரிகளைத் தாக்கும்போது ரத்தம் தெறிக்கத் தெறிக்க வன்முறையைக் கையாள்வது, காதலியைக் காட்டுக்குள் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டுவது போன்ற உறைபனியூட்டும் கொடூரங்களை நாயகன் செய்வான். ஆனால், பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், சின்ன வயசில் அடி வாங்கினவன் என்று பார்ப்பவனுக்கு அவனது குரூரத்தின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இப்படத்தின் இயக்குனர்.

ஒரு சைக்கோவின் கொடூரமான குற்றங்களை அவனது ப்ளாஷ்பேக் சோகத்தைக் காட்டி நியாயப்படுத்தி, பார்ப்பவனுக்கு வன்முறையின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச் சிறந்த வியாபாரத் தந்திரம்.

இதன் விளைவாக, நிஜ வாழ்க்கையில் மனநல மருத்துவரிடம் அனுப்பப்பட வேண்டிய ஒரு குற்றவாளியை, திரையரங்கில் சூப்பர் டூப்பர் ஹீரோ என்று கொண்டாடி விசிலடிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால், தன் காதலிக்குத் தன்னைத் துளியும் பிடிக்கவில்லை, அவளுக்கு அவளது காதலனைத்தான் பிடிக்கும் என்று தெரிந்ததும், நாயகன் தன் மரணத்தைத் தேடிக் கொள்வான். இதை ஏதோ காதலின் உச்சக்கட்டத் தியாகம் என்பது போலச் சினிமா கொண்டாடும்.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது தியாகம் அல்ல; அது ஒரு சுயநலவாதியின் பிடிவாதம். நீ எனக்குக் கிடைக்கவில்லை என்றால், நான் செத்துப் போய் உனக்கு ஆயுசுக்கும் குற்ற உணர்ச்சியைப் பரிசாகத் தந்துவிட்டுப் போவேன், என்ற ஒரு கொடூரமான மனநிலையை இது இளைஞர்களிடம் விதைத்தது.

குடும்ப உறவுகளோ, சுய முன்னேற்றமோ இல்லாமல், காதல் தோல்வி அடைந்தால் செத்துப் போவதுதான் கெத்து, என்ற தற்கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

இத்திரைப்படத்தின் நாயகிக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் பரிதாபகரமானது. ஏதோ இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை சைக்கோக்களையும், அனாதைகளையும் திருத்த வந்த ஒரு மதர் தெரசா பிம்பமாகவே அவர் காட்டப்படுவார். அவளுக்கு என்று தனியாக ஒரு காதல் வாழ்க்கை இருந்தாலும், ஹீரோவின் பைத்தியக்காரத்தனத்திற்குப் பயந்து அவனுக்குப் பணிந்து போவதும், அழுவதுமே அவளது வேலையாக இருக்கும்.

பெண் என்பவள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது; அவளைப் பைத்தியமாகத் துரத்தும் ஒருவனுக்கு அவள் தாய்மை உணர்வோடு இரக்கம் காட்ட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படம் மிக நளினமாக ஏற்றுமதி செய்தது.

காதல் கொண்டேன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அதன் நாயகனை ஒரு நடிப்பு அரக்கன் பிம்பத்தில் ஏற்றி, இயக்குநரை ஜீனியஸ் ஆக்கியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

சொறிபிடித்த நாய் ஒன்று தெருவில் அலைவதற்கும், ஒரு தமிழ் இளைஞன் தாடி வளர்த்துக்கொண்டு சுவரில் தலைகீழாகத் தொங்குவதற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதை இத்திரைப்படம் நிறுவியது. நான் சைக்கோவாக இருக்கிறேன், எனவே நான் காதலிக்கிறேன் என்கிற ஒரு புதிய தத்துவத்தையும் இத்திரைப்படம் உருவாக்கியது.

அதுவரை வகுப்பறையின் கடைசி பெஞ்சில், யாரிடமும் பேசாமல், நகம் கடித்துக்கொண்டு, சாம்பிராணி என்றும் சாம்பார் என்றும் உலகத்தால் மதிக்கப்பட்ட அல்லது மிதிக்கப்பட்ட அப்பாவிகள் யாவரும், திடீரென தங்களைக் காதல் கொண்டேன் நாயகனாகப் பாவிக்கத் தொடங்கினார்கள்.

நான் பேசாமல் அமைதியாக இருக்கிறேன் என்றால், என் பின்னால் ஒரு கொடூரமான கடந்த காலமும், என் பாக்கெட்டில் ஒரு துருப்பிடித்த கத்தியும் இருக்கிறது, என்று அவர்கள் கொடுத்த பில்டப், தமிழ்நாட்டின் சராசரிப் பெண்களை அலற வைத்தது. அமைதியாக இருக்கும் பசங்களைக் கண்டாலே பெண்கள் அஞ்சத் தொடங்கிய வரலாற்றுச் சீரழிவு அங்குதான் ஆரம்பமானது.

அவன் கெட்டவன்தான், ஆனா அவனோட லவ் பியூர் என்கிற ஓர் அபத்தமான தர்க்கத்தை இந்தச் சமூகம் இத்திரைப்படத்திலிருந்துதான் கற்றுக்கொண்டது.

இத்திரைப்படத்தால் ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம் என்று நம்பிய அற்ப ஜீவிகளின் மண்டையில் பலத்த அடி விழுந்தது. அவள் உன்னை நண்பனாகப் பார்த்தால் என்ன? நீ அவளைக் கடத்திச் சென்று ஒரு பாழடைந்த பங்களாவில் வைத்து, அரிசி சாதம் ஊட்டலாம், என்கிற ஒரு மாற்றுச் சிந்தனையை இப்படம் விதைத்தது. இதன் விளைவாக, கல்லூரிகளில் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் என்று சுற்றிய பல இளைஞர்கள், திடீரென சுவரில் முட்டிக்கொண்டு தங்களுக்குள் ஒரு சைக்கோ நாயகனைத் தேட ஆரம்பித்தார்கள்.

காதல் கொண்டேன் மனிதருக்குள் ஏற்கனவே பதுங்கியிருந்த சைக்கோதனத்திற்கு ஒரு அழகிய, ரசிக்கத்தக்க முகமூடியை மாட்டிக் கொடுத்தது. அதன் பிறகுதான், காதலில் தோற்பது என்பது ஒரு ஏமாற்றமல்ல, அது ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் என்ற புரிதல் இங்குள்ள சராசரி இளைஞனுக்கு ஏற்பட்டது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் செய்த ஒரே நல்ல காரியம், இப்பட நாயகனைப் போன்றவர்கள் நிஜ வாழ்க்கையில் சுற்றினால் என்ன நடக்கும் என்பதை, கடைசியில் மலை உச்சியிலிருந்து விழ வைத்துக் கதையை முடித்து வைத்ததுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழ்ச் சமூகம் நாயகனின் வீழ்ச்சியை மறந்துவிட்டு, அவனது விசித்திரப் புன்னகையை மட்டும் தத்தெடுத்துக் கொண்டது.

ஆக மொத்தத்தில், ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களைத் துரத்துவதுதான் உண்மையான வாலிபம் என்றும், மனப்பிறழ்வோடு அலைவதுதான் காதலின் ஆகச்சிறந்த அடையாளம் என்றும், குரூரமான சைக்கோத்தனத்தைக் கொண்டாடுவதே முற்போக்கு என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற சைக்கோ சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment