சீரழித்த சினிமா – 11
தூள்
தமிழனின் பொதுப்புத்தியைச் சாம்பலாக்கிய ஆக்சன் கொள்ளி!
இரண்டாயிரங்களின்
தொடக்கத்தில் தமிழ்ச் சமூகம் தன் அறிவையும், சட்டத்தின் மீதான குறைந்தபட்ச நம்பிக்கையையும்
மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே கழற்றி எறிந்துவிட்டு, ஆக்ஷன் என்ற ஒற்றைப் போதைக்குள்
தங்களை ஒட்டடை அடித்துக் கொண்டது.
அந்தப்
புனிதமான காரியத்தைக் கங்கணம் கட்டிக் கொண்டு 2003இல் மிக நேர்த்தியாகச் செய்து முடித்த
பெருமை தூள் திரைப்படத்திற்கு உண்டு.
நாயகனின்
அதிரடி வேகமும், சிங்கம் போல நடந்து வரான் என்ற பாடலும் சண்டையும் கலந்த கொத்து பரோட்டா
பின்னணி இசையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையில் சட்டமன்ற உறுப்பினரையும்,
அமைச்சரையும் ஆக்சன் ரூட்டில் எதிர்கொள்வதே ஆகச்சிறந்த சமூகச் சீர்திருத்தம் என்ற ஆபத்தான
பாசிச நச்சை எப்படி இத்திரைப்படம் நளினமாக விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக்
கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயகப் பாடம் என்ன தெரியுமா?
உங்கள்
கிராமத்தில் ஒரு தொழிற்சாலையால் தண்ணீர் மாசுபடுகிறது என்றால், நீங்கள் மாசுக்கட்டுப்பாட்டு
வாரியத்தையோ, நீதிமன்றத்தையோ நாடக் கூடாது. நேராகச் சென்னைக்கு வந்து, அந்த ஏரியா தாதாவையும்,
அவனுக்குப் பின்னால் இருக்கும் அமைச்சரையும் எதிர்த்து குஸ்தி சண்டை போட வேண்டும் என்பதுதான்.
ஒரு
ஜனநாயக நாட்டில் சட்டம் தன் கடமையைச் செய்வதற்கென்று சில வழிமுறைகள் உண்டு. ஆனால்,
தூள் பட நாயகனோஅரசமைப்பு வழிமுறைகள் என்பன ஏழைகளுக்குப் பயன்படாத ஒரு குப்பை; ஆக்சன்தான்
மக்கள் கையில் எடுக்க வேண்டிய உண்மையான நீதிமுறை, என்ற அராஜகச் சிந்தனையைத் தமிழர்களின்
மூளையில் ஆழமாக நட்டார்.
விளைவு?
நிஜ
வாழ்க்கையில் நமக்கொரு சமூகப் பிரச்சினை என்றால், சட்டப்பூர்வமாகப் போராடுவதை விடுத்து,
நம்ம ஆறுமுகம் மாதிரி அதிரடியா இறங்கி நாலு பேரை ஆக்சனில் பொளந்தால்தான் நாடு விளங்கும்
என்று வன்முறையை ஆராதிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற பொதுப்புத்தியை இந்தச் சினிமா உருவாக்கியது.
படத்தில்
நாயகி மற்றும் நாயகனுக்கு இடையேயான காதல் மற்றும் நட்பு சித்தரிக்கப்பட்ட விதம் அலாதியானது.
சென்னைக்கு வந்தக் கிராமத்து நாயகி, ஆரம்பத்தில் நாயகனை வெறுப்பது போலக் காட்டப்பட்டாலும்,
இறுதியில் அவனது முரட்டுத்தனத்தைக் கண்டு உருகிப் போவாள்.
ஒரு
பெண் தன் சுயமரியாதையோடு இருக்கும்போது, அவளது விருப்பங்களை மதிக்காமல், அவளது எல்லைகளுக்குள்
ஓர் ஆண் தன் கிராமத்து ஆணதிகாரப் பிம்பத்தோடு நுழைவதைக் காதல் என்று நியாயப்படுத்தியது
இந்தச் சினிமா. பெண்கள் என்னதான் ஓடினாலும், இறுதியில் ஆண்களின் முரட்டுத்தனத்திற்கு
முன்னால் மண்டியிடுவார்கள், என்ற ஆணாதிக்கப் புத்தியைத் தமிழர்களின் நெஞ்சில் இன்னும்
ஆழமாகப் பதியவைத்தது இந்த சினிமா கரம்மசாலா தூள்.
படம்
முழுவதிலும் நாங்க கிராமத்துக்காரங்க, எங்க மண் கெத்து, நாங்க நேர்மையானவங்க, என்ற
போலிப் பெருமித வழிந்தோடும். அதேநேரம், சென்னை போன்ற பெருநகர மனிதர்கள் அனைவரும் ஏமாற்றுக்காரர்களாகவும்,
ரவுடிகளாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படுவதை இத்திரைப்படமும் குறையின்றிச்
செய்தது.
அறிவியலும்,
தொழில்நுட்பமும், நவீன நாகரிகமும் வளர்ந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், ஒரு சமூகத்தின்
ஒட்டுமொத்த சிந்தனையையும் ஆக்சன் எனும் கரம்மசாலா வட்டத்திற்குள்ளேயே சுருக்கி வைத்தது
இந்தத் திரைப்படம்.
இதைப்
பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த இளைஞர்கள், உலகளாவிய சிந்தனைகளை நோக்கித்
தங்களை வளர்த்துக்கொள்வதை விடுத்து, அடிதடி மற்றும் தூள் பறக்கும் ஆக்சன் வட்டப் பெருமைகளுக்குள்
சுருங்கிப் போனார்கள்.
ஒட்டுமொத்தப்
படமும் விவேகத்தோடும், பகுத்தறிவோடும் அணுக வேண்டிய ஒரு சுற்றுச்சூழல் மற்றும் அரசியல்
பிரச்சினையை, வெறும் அடிதடி, ரத்தக் களறி, சேஸிங், பஞ்ச் வசனங்கள், ஆக்சன் என்ற கமர்சியல்
பார்முலாவுக்குள் அடைத்துத் தமிழர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தது.
தூள்
பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, சீயானுக்கு மாஸ் பிம்பத்தை நிலைநிறுத்தியிருக்கலாம்.
ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
சிங்கம்
போல நடந்து வர்றான் என்ற பாடலின் கோதாவிலும், தான் ஒரு வேட்டை விலங்கு என்ற மாயையிலும்,
பக்கத்து வீட்டு நாய் குரைத்தால் கூட நாய்க்கா இந்த வெறி? என்று தன்னைத்தானே ஹீரோவாகப்
பாவித்துக்கொள்ளும் உளவியல் நோய் தமிழர்களிடம் இதனால் பரவியது.
தூள்
என்பது வெறும் திரைப்படம் அல்ல; அது தமிழ் சமூகத்தின் கூட்டு நனவிலி மனதிற்குள் செலுத்தப்பட்ட
ஒரு நச்சு ஊசி. அதன் உளவியல் பாதிப்புகளைக் கணக்கிட்டால் அது முடிவிலி வரை செல்லும்.
இதித்ரைப்படம்
ஏற்படுத்திய இன்ஸ்டன் ஆங்கர் ஆக்சன் மாடல், நிஜ வாழ்க்கையிலும் மக்களிடையே பரவியது.
டிராபிக் சிக்னலில் ஒரு விநாடி லேட்டானால் கூட, மக்கள் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு
வில்லனைத் தேடும் அளவுக்குப் பொறுமை இழந்தவர்களாக மாறினர்.
ஆக மொத்தத்தில்,
சட்டத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் மதிக்காமல், உணர்ச்சிவசப்பட்டு ஆக்சன் அவதாரத்தைக்
கையில் எடுப்பதே ஆகச்சிறந்த வீரம் என்று நம்பி ஒரு தூள் கிளப்பும் முரட்டுச் சமூகமாகத்
தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!
*****

No comments:
Post a Comment