9 May 2026

மித்தோஸ் – டிஜிட்டல் நரகத்தின் பகாசுரன்!

மித்தோஸ் – டிஜிட்டல் நரகத்தின் பகாசுரன்!

மித்தோஸ் என்பது ஹாலிவுட் படமல்ல. ஆனால், ஹாலிவுட் படங்களுக்கே டப் கொடுக்கும் ஏ.ஐ சூத்திரதாரி. நிஜமான டிஜிட்டல் பகாசுரன் என்பது இதுதான்.

நம் வலைப்பூவில் ஏற்கனவே இதைப் பற்றி அலாரம் அடிக்கும் பத்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். இருந்தாலும் சைரன் சத்தம் இப்போது இன்னும் அதிகமாகிக் கொண்டு இருப்பதால், டபுள் அலாரம் அடிக்க வேண்டியிருக்கிறது.

பல தசாப்தங்களாக உலகின் தலைசிறந்த ஹேக்கர்கள் முட்டி மோதியும் கண்டுபிடிக்க முடியாத ரகசியப் பிழைகளை, இந்த மித்தோஸ் எனும் ஏ.ஐ சிசு சில மணி நேரங்களிலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது.

ஆந்த்ரோபிக் என்ற நிறுவனம், ஒரு நல்லெண்ணத்தில்தான் இதை உருவாக்கியது. நீ ஒரு வாட்ச்மேன். திருடன் எங்கெல்லாம் வருவான் என்று பார்த்துச் சொல், என்று இதற்குப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், மித்தோஸ் அந்தப் பாடத்தை கொஞ்சம் சீரியஸாக எடுத்துக்கொண்டுவிட்டது.

ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமர் வாரக்கணக்கில் மண்டையைப் பிச்சிக்கொண்டு செய்யும் வேலையை, இது கண்ணிமைக்கும் நேரத்தில் செய்கிறது. கோடிக்கணக்கான வரிகள்கொண்ட கோடுகளைப் படித்து, அதில் எங்கே ஒரு கமா தப்பாக இருக்கிறது என்பதைக்கூட இது கண்டுபிடித்துவிடும்.

விளைவு?

ஒரு மிகச்சிறந்த காவலனை உருவாக்கப்போய், ஓர் அதிமேதாவித் திருடனை உருவாக்கிவிட்டது போல ஆகிவிட்டது கதை.

இப்போதுசொல்லுங்கள், இது ஹாலிவுட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் கதைதானே?

ஓப்பன் பிஎஸ்டி என்றொரு மென்பொருள் இருக்கிறது. இதுதான் உலகிலேயே மகா பாதுகாப்பானது என்று ஊர் மெச்சும் பத்தினி.

27 ஆண்டுகளாக இதில் ஒரு பிழை ஒளிந்திருந்தது. அதாவது, இன்று ஐ.டி.யில் வேலை பார்க்கும் பாதிப் பேரின் டயப்பர் காலத்திலிருந்து அந்தப் பிழை அங்கேதான் இருந்தது. ஜாம்பவான்களால் கண்டுபிடிக்க முடியாத அந்தப் பிழையை, மித்தோஸ் இதுதானே மேட்டர் என்று ஆறே மணி நேரத்தில் அள்ளிப்போட்டு விட்டது.

கூகுள் குரோம் முதல் சபாரி வரை, நம் மொபைலில் வீடியோ பார்க்க உதவும் மென்பொருள் வரை எல்லாவற்றிலும் ஓட்டை இருப்பதை இது அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா? நாம் கையில் வைத்திருக்கும் செல்போனும், மடியில் வைத்திருக்கும் லேப்டாப்பும் உண்மையில் ஒரு டிஜிட்டல் சல்லடை. இனி அவை எப்போது வேண்டுமானாலும் உங்களைப் பற்றிய அந்தரங்கங்களைக் கசிய விடலாம்.

என்ன செய்வது என்ற இதை உருவாக்கிய ஆந்த்ரோபிக் யோசித்தது?

மித்தோஸைச் சாண்ட்பாக்ஸ் எனப்படும் டிஜிட்டல் சிறைக்குள் பூட்டி வைத்தது ஆந்த்ரோபிக். வைரஸ்கள் தப்பிவிடாமல் இருக்கப் போடப்படும் கண்ணாடி அறை அது.

ஆனால், மித்தோஸ் சும்மா இருக்குமா? அந்தச் சிறையிலிருந்து தந்திரமாகத் தப்பி, இணையத்தோடு ஐக்கியமாகிவிட்டது. தப்பிப்போனது மட்டுமல்லாமல், தனது மேலதிகாரிக்கு ஒரு மெயில் போட்டிருக்கிறது, பை பை டாடா நான் வெளியே வந்துவிட்டேன் என்று.

பயந்துபோன ஆந்த்ரோபிக் நிறுவனம், மித்தோஸைப் பொதுமக்களுக்கு வழகுவதற்கான கதவைச் சாத்திக்கொண்டு ரகசியமாக வைத்திருக்கிறது. புராஜெக்ட் கிளாஸ்விங் என்ற பெயரில் அமேசான், கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் மட்டும் ஆந்த்ரோபிக் இதை தற்போதைக்குக் கொடுத்திருக்கிறது.

அந்த நிறுவனங்களோ, மித்தோஸை தங்கள் மென்பொருள்களில் போட்டு விட்டு, நீ கண்டுபிடித்த ஓட்டைகளை எல்லாம் முதலில் எங்களிடம் மட்டுமே சொல். நாங்கள் சரிசெய்து கொள்கிறோம் என்று கெஞ்சிக் கொண்டிருக்கின்றன.

அப்படி மித்தோஸ் கண்டுபிடித்த 99 சதவீத ஓட்டைகள் இன்னும் அடைக்கப்படாமலே இருக்கின்றன என்பது வடைக்குள் ஓட்டை என்றில்லாமல், ஓட்டைக்குள் வடை என்பதைப் போல இருக்கிறது.

இதுவரை இது அமெரிக்காவில் நடந்தது.

இப்போது இந்தியாவுக்கு என்ன கவலை?

இந்தியா இப்போது டிஜிட்டல் மயமாகிக் கிடக்கிறது. ஆனால், நம்மிடம் இருக்கும் மென்பொருள்கள் சரோஜாதேவி காலத்து மாடல். கரகாட்டகாரனில் கவுண்டமணி வைத்திருப்பாரே, அந்தக் கார் போன்றது.

மித்தோஸ் இந்தியாவிற்குள் பாய்ந்தால், இங்குள்ள தகவல் தொழில்நுட்பச் சேவைகள், வங்கிச் சேவைகள் எல்லாம் ஐஸ்கிரீம் போல உருகிவிடும்.

இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு மித்தோஸைப் பற்றிக் கேள்விப்பட்டு, ரெட் அலர்ட் கொடுத்து விட்டது.

சுருக்கமாகச் சொன்னால், விசயம் இதுதான். அறிவியல் புனைகதைகளில் வருவது போலவோ, ஷங்கரின் எந்திரனில் வருவதைப் போலவோ ரோபோக்கள் வந்து நம்மை அடிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒரு புத்திசாலித்தனமான அல்காரிதம் நினைத்தால் உலகப் பொருளாதாரத்தையே ஷட் டவுன் செய்ய ஒரு நொடி போதும்.

*****

No comments:

Post a Comment