10 May 2026

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

இழுத்துப் பார்த்தல் எனும் இருத்தலியல் தாகம்!

மனிதன் ஒரு வினோதமான பிராணி. கடவுள் இருக்கிறாரா என்று கேட்பதை விட, பூட்டு பூட்டியிருக்கிறதா? என்று கேட்பதில்தான் அவனது ஒட்டுமொத்த ஆன்மாவும் அடங்கியிருக்கிறது.

ஒரு முறை பூட்டைப் பூட்டுவது செயல். அதை இரண்டு முறை இழுத்துப் பார்ப்பது தரிசனம்.

பூட்டுக்கும் சாவிக்கும் இடையிலான உறவு என்பது ஒரு ரகசிய உடன்படிக்கை.  சாவியாகி நீ திரும்பினால் நான் பிடித்துக்கொள்வேன் என்பது பூட்டின் வாக்குறுதி. ஆனால், மனித மனம் அந்த வாக்குறுதியை நம்புவதில்லை.

பூட்டிய பூட்டை ஒரு முறை இழுக்கும்போது பூட்டு உறுதியாக இருப்பதை உணர்கிறோம். இரண்டாவது முறை இழுக்கும் போதுதான் அந்த உறுதி உண்மை என்று நம்புகிறோம்.

இது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு மட்டுமல்ல, மாறாக, செய்த காரியம் பிரபஞ்ச விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்யும் ஒரு உளவியல் பூர்வமான சடங்கு.

நமக்கு பூட்டு பூட்டப்பட்டிருப்பது மட்டும் முக்கியமல்ல. பூட்டும் போது அந்த கிளிக் சத்தம் நம் மூளையில் ஏற்படுத்தும் அதிர்வுதான் முக்கியம்.

முதல் முறை இழுக்கும்போது பூட்டு அசையாமல் இருந்தால், நமக்குத் திருப்தி வருவதில்லை. ஆம் முதல் முறை ஒரு பூட்டை இழுத்துப் பார்ப்பது என்பது, அந்தப் பூட்டுக்கு நாம் அளிக்கும் ஒரு சிறிய முத்தம் போன்றது. அது வலியற்றது, ஆனால் வழுவானது.

அந்த இரண்டாம் முறை இழுத்துப் பார்ப்பதுதான் முக்கியமானது. ஏன் அந்த இரண்டாம் முறை என்றால், முதல் இழுவை என்பது உடலுக்கானது. அதாவது, பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு பிசிக்கலான பதில். இரண்டாவது இழுவை என்பது மனதுக்கானது. நிச்சயமாகப் பூட்டியாச்சா? என்பதற்கு ஒரு சைக்காலஜிகல் பதில்.

மூன்றாவது முறை இழுவையும் உண்டென்றால், நிச்சயம் நீங்கள் OCD கேஸ். அதாவது நாகரிகமாகச் சொன்னால், அதீத ஜாக்கிரதை உணர்வு கொண்ட முத்தண்ணா. சைக்காலஜிக்கலாகச் சொன்னால் அப்செசிவ் கம்பள்சி டிஸ்ஆர்டர்.

அதுவே நான்காவது, ஐந்தாவது முறை என்று இழுவைகள் நீண்டால், அவர்கள் பூட்டை மட்டுமல்ல, கதவின் சட்டத்தையும் சேர்த்துப் பிடுங்கப் பார்ப்பார்கள். அவர்கள் நம்பிக்கையைத் தாண்டிய ஒரு புனிதமான பதற்றத்தில் இருப்பவர்கள்.

பூட்டுதலும் அதை இருமுறை இழுத்துப் பார்த்தலும் ஒரு தத்துவமே! உண்மையில், நாம் பூட்டை இழுத்துப் பார்ப்பதில்லை. நம்முடைய பயத்தை இழுத்துப் பார்க்கிறோம்.

பூட்டு திறந்திருந்தால் என்னவாகும்? யாராவது திருடிவிடுவார்கள். திருடுவதற்கு உங்களிடம் ஒன்றுமில்லை என்றால், அங்கேயும் ட்விஸ்ட் இருக்கிறது.  அந்த ஒன்றுமில்லாததை எவரும் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகக் கூட நீங்கள் ஒருமுறைப் பூட்டி இரண்டு முறை இழுத்துப் பார்க்கலாம்.

எனவே, அடுத்த முறை நீங்கள் பூட்டை இரு முறை இழுத்துப் பார்க்கும்போது கூச்சப்படாதீர்கள். நீங்கள் ஒரு பூட்டைச் சோதிக்கவில்லை, இந்தப் பிரபஞ்சத்தின் நிலையற்ற தன்மையை ஒரு நொடி நிலைநிறுத்தப் போராடுகிறீர்கள்!

*****

No comments:

Post a Comment