கரசாமியின் கரசேவை – ‘கர’ ஒரு திரைப்பார்வை!
கர
கதையென்று பார்த்தால்…
1990களில் இராமநாதபுரம்.
முன்னாள் திருடன், இப்போது திருந்தி ஹோட்டல்
வைக்க ஆசைப்படும் நல்லவராக நினைக்க, அவரது அப்பாவோ கடனில் மூழ்கிக் கிடக்க, அவருக்கு
அழகு மனைவி வந்து வாய்க்க, பணத்தேவைக்காக மீண்டும் பழைய பூட்டு உடைக்கும் தொழிலுக்குப்
போவதுதான் கதை.
படத்தில் தனுஷ் பெயர் கரசாமி. திரைப்படத்தில்
திருந்துவதற்கும் திருடுவதற்கும் இடையே ஊசலாடும் தனி ஒருவன் அவர். கண்களில் கண்ணீர்,
கைகளில் அரிவாள் என ஒரு ஆல் இன் ஆல் பெர்பார்மன்ஸ். மனுஷன் எமோஷனலாக அழுதால் நமக்கும்
அழுகை வருகிறது. படம் அவ்வளவு நீளம் என்பதாலோ என்னவோ!
அவரது மனைவி மமிதா பைஜூவின் ஒரே வேலை படத்தில்
அழுதுகொண்டே அழகு சேர்ப்பதுதான். ஒரு படத்தில் ஒன்றிரண்டு வசனங்கள் பேசுவதற்கே ஊதியம்
கிடைக்கிறது என்றால், அதுதான் மமிதாவுக்கே உரிய உண்மையான வங்கி லாபம்.
நாயகன் நாயகி தவிர படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு
காக்கி உடையில் கச்சிதம். வங்கி மேலாளர் ஜெயராம் செம டெரர். இவர்கள் இருவரும் இல்லையென்றால்
படம் எப்போதோ வாராக்கடன் ஆகியிருக்கும்.
ஜி.வி. பிரகாஷின் இசை காதுகளைத் துளைக்கிறது.
ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் தென் மாவட்டங்களின் புழுதியையும், வெக்கையையும் நம் கண்
முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். ஆனால், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் மட்டும் முதல்
பாதியில் கத்தரி போட மறந்துவிட்டு, தியேட்டரில் நம்மை தவம் இருக்க வைக்கிறார்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா சொல்ல வருவது என்னவென்றால்,
வங்கி கடன் தருவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதைத்தான். ஆனால் படம் சொல்லும்
மெசேஜ், திருடுவது கஷ்டம், ஆனால் க்ளைமாக்ஸில் அது அதைவிட ஈஸி என்பதாக இருக்கிறது.
அதாவது, இடைவேளை வரை திருடுவதற்கு அத்தனை கஷ்டமாகத்
தெரிந்த பேங்க் லாக்கர், க்ளைமாக்ஸில் தனுஷுக்கு அப்படியே ஹால்வா சாப்பிடுவது போல அத்தனை
சுலபமாகத் திறக்கிறது.
படத்தில், திருடனைப் பிடிக்க போலீஸ் போடும்
ஸ்கெட்ச் பக்கா. ஆனால், இயக்குநர் போட்ட திரைக்கதை ஸ்கெட்ச் மொக்கை.
ஆக, விசயம் இதுதான். திருடன் என்று முத்திரை
குத்தப்பட்டவன் ஹோட்டல் வைக்க நினைப்பது அறம். ஆனால், அவன் மீண்டும் திருட நினைப்பதுதான்
கமர்ஷியல் அறம்.
ஸோ, படத்தில் லாஜிக் என்பது ராமநாதபுரத்து
வெயிலில் கானல் நீராகிப்போகிறது. கரசாமியின் டிராக்டர் ஸ்டார்ட் ஆகிறது, ஆனால் திரைக்கதை
பாதியில் பஞ்சர் ஆகி நிற்கிறது.
படத்துக்கு பத்துக்கு 6½ மார்க் கொடுக்கலாம்.
அந்த அரை மார்க் எக்ஸ்ட்ரா, வங்கியில் கடன் வாங்குவது என்பது சாதாரணமில்லை என்பதைச்
சொன்னதற்காக.
*****

No comments:
Post a Comment