8 May 2026

ஒற்றை வாக்கு முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை – 2026 தேர்தல் முடிவுகள் ஒரு கழுகுப் பார்வை!

ஒற்றை வாக்கு முதல் ஒரு லட்சம் வாக்குகள் வரை

– 2026 தேர்தல் முடிவுகள் ஒரு கழுகுப் பார்வை!

 தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகள் என்பது எப்போதும் ஒரு சுவாரஸ்யமான பொம்மலாட்டம்தான். ஆனால், இந்த முறை பொம்மலாட்டக்காரர்களே மிரண்டு போகும் அளவுக்கு முடிவுகள் வந்திருக்கின்றன.

திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நடந்த விந்தையைப் பார்த்தால், ஜனநாயகத்தின் மீதே ஒரு பயம் கலந்த பக்தி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சீனிவாச சேதுபதி அவர்கள் வென்றிருக்கிறார். எத்தனை வாக்கு வித்தியாசத்தில் தெரியுமா? ஒரே ஒரு வாக்கு!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகருப்பன். அவர்கள் 2006லிருந்து அந்தத் தொகுதியைத் தனது பட்டா நிலம் போல தக்க வைத்திருந்தார். கிட்டதட்ட இருபது ஆண்டுகள். யாரோ ஒருவரின் அந்த ஓர் ஓட்டு பட்டா டிரான்ஸ்பர் செய்து வைத்து விட்டது.

அந்த ஒரு வாக்காளர் மட்டும் அன்று ஒட்டு போடாமல் இருந்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரியாகியிருக்கும். அந்த ஒரு வாக்குதான் அன்றைய தேர்தல் களத்தில் பெனால்டி ஷூட் அவுட். இந்திய ஜனநாயகத்தின் தலைவிதியை ஒரு சாதாரணக் குடிமகனின் மூட் எப்படித் தீர்மானிக்கும் என்பதற்கான வரலாற்றுச் சம்பவம் இது.

வேப்பனஹள்ளியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி.எஸ். சீனிவாசன் அவர்களின் வாக்கு வித்தியாசம் 138தான். ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்கும் ரொம்பவே முக்கியம் என்பதற்கு இன்னொரு தரமான சம்பவம் இது.

ஒரு பக்கம் இப்படி நூலிழையில் வெற்றி என்றால், இன்னொரு பக்கம் யானை கட்டிப் போரடிக்கும் ரகம்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடப்பாடியில் காட்டிய விஸ்வரூபம் 98,110 வாக்குகள். இந்தத் தேர்தலில் தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் அவர்தான். அவர் தனது எடப்பாடி கோட்டையில் ஒரு பயர்வால் போட்டு வைத்திருப்பார் போல. யாரும் ஊடுருவ முடியவில்லை.

தமிழக வெற்றக் கழகத்தின் சோழிங்கநல்லூர் சரவணன் அவர்கள் மற்றும் மாதவரம் விஜய்பிரபு அவர்கள் ஆகியோரின் வாக்கு வித்தியாசத்தைப் பார்த்தால், அது வெற்றி என்பதை விட சுனாமி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தொண்ணூறாயிரம் ஓட்டுகளுக்கு மேல் வாக்கு வித்தியாசம் என்பது ஒரு பேட்ஸ்மேன் டபுள், டிரிபுள் செஞ்சுரி அடிப்பதற்கும், பந்து வீச்சாளர் ரன்னே கொடுக்காமல் பத்து விக்கெட்டுகளை எடுப்பதற்கும் சமம்.

தமிழக வெற்றக் கழகத்தின் ஆவடி ஆர். ரமேஷ்குமார் அவர்கள், பூந்தமல்லி ஆர். பிரகாசம் அவர்கள் ஆகியோர் எழுபதாயிரம் ஓட்டுகளுக்கு மேலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அரசியலில் இது போன்ற கெமிக்கல் ரியாக்சன்கள் ராக்கெட் சயின்ஸில் ஒரு சேட்டிலைட்டை நிலைநிறுத்துவதைப் போன்றது.

இந்தத் தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கும் போது, நகர்ப்புறங்களில் எப்போதும் முன்னணியில் இருக்கும் திமுக இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மக்கள் எப்போதும் லேட்டஸ்ட் மாடல் போனைத் தேடுவது போலவே, இந்த நகர்ப்புற மக்கள் அரசியலிலும் புதிய மாடலைத் தேடியிருக்கிறார்கள் போலத் தெரிகிறது. 2026 இல் தவெக அந்தப் புதிய மாடலாக வந்திருக்கிறது.

அரசியலில் வெற்றி என்பது ஒரு பிராபலிட்டி ஈக்வேஷன். அதில் பிரபலம் என்கிற மாறிலி சரியாக அமைந்துவிட்டால், வாக்கு வித்தியாசம் என்பது ராக்கெட் வேகத்தில் எகிறும் என்பதைத்தான் இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

*****.

No comments:

Post a Comment