18 May 2026

தூக்கம் எனும் அரிய வகைக் கலை – ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

தூக்கம் எனும் அரிய வகைக் கலை –

ஒரு யோக நித்திரை எக்ஸ்போஸ்!

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தூக்கம் என்பது ரொம்ப முக்கியம். ஆனால், இந்த ஹோமோ சேப்பியன்ஸ் ரக மனிதர்களுக்குத்தான் அந்தப் பிராப்தம் இல்லாமல் போய்விட்டது.

உருப்படியாக நாலு மணி நேரம் ஆழ்ந்து தூங்கினால் உடல், மனம் எல்லாம் தேறிவிடும் என்பது ஸ்லீப்பிங் தியரி. ஆனால், நடைமுறையில் நமக்கோ கம்ப்யூட்டர் யுகம் என்ற பெயரில் கண்ணைச் சுற்றிக் கருவளையத்தை வளர்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

தூங்க முடியாத சோகத்தில் இருப்பவர்களுக்காகவே உலகெங்கும் இப்போது ஒரு புது பிசினஸ், மன்னிக்கவும், உத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் அறிதுயில் நிலை. அதாவது, தூங்காமலேயே தூக்கத்தின் பலனைப் பெறுவது. அட, இது நம்ம ஊர் சித்தர்களும் முனிவர்களும் பல ஆயிரம் வருஷங்களாக யோக நித்திரை என்ற பெயரில் செய்து வந்ததுதான்! புது மொந்தையில் பழைய கள்.

நம்ம ஊர் பெரியவர்கள் படுக்கச் சொல்லும்போதே இடது பக்கமாக ஒருக்களித்து படு என்பார்கள். ஏன்? இடது பக்கம் படுத்தால், புவிஈர்ப்பு விசை புண்ணியத்தில் நீங்கள் உள்ளே தள்ளிய பிரியாணியும், அதைச் செரிக்கச் சுரக்கும் அமிலமும் அங்கேயே அடங்கி இருக்கும். மல்லாக்கப் படுத்துக் கொண்டு நெஞ்செரிச்சல் என்று கதற வேண்டியிருக்காது. இதயம் சீராக இயங்கும், ரத்த ஓட்டமும் ஸ்மூத் ஆக இருக்கும்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்? இரவு நேர வேலையில் விழித்திருந்து, கைப்பேசியின் நீல நிற ஒளியைப் பார்த்து, உடலின் உயிரியல் கடிகாரத்தைத் தலைகீழாகத் திருப்பி வைத்திருக்கிறோம். விளைவு, காலையில் விழிக்கும்போது புத்துணர்வுக்குப் பதில் ஏன்டா உயிர் வாழ்றோம்? என்ற அலுப்புதான் மிஞ்சுகிறது.

சரி, தொலைத்த தூக்கத்தைத் திரும்பப் பெற என்னதான் வழி?

சவாசனம் என்ற மகா அற்புதமான யோகா போஸ் ஒன்று இருக்கிறது.

அதை எப்படிச் செய்வது என்கிறீர்களா?

நல்ல காற்றோட்டமான இடத்தில் ஒரு விரிப்பை விரித்துப் படுத்துக் கொள்ளுங்கள். இரு பாதங்களுக்கு இடையில் இரண்டடி இடைவெளி இருக்கட்டும். கைகளை உடம்புக்குப் பக்கத்தில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி சரணாகதி மோடில் வைத்துக்கொள்ளுங்கள்.

கால் விரலில் தொடங்கி தலை வரை ஒவ்வொரு உறுப்பாக ஓய்வு எடு என்று ஆர்டர் போடுங்கள்.

இப்போது ஒரு விஷுவலைசேஷன். மலை, அருவி, பறவை சத்தம், தென்றல் என ஒரு சொர்க்கத்தை உங்கள் மனக்கண்ணில் ஓட விடுங்கள். கூடவே ஓர் ஒளிக்கற்றை உங்கள் கால் வழியாக நுழைந்து தலை வரை சென்று உங்களை அமைதிப்படுத்துவதாக நம்புங்கள். நம்பிக்கைதானே எல்லாம்!

மூக்கு வழியாக மூச்சை இழுத்து, நாக்கை இலைச்சுருள் போலச் சுருட்டி வாய் வழியாக மெதுவாக விடுங்கள். இதையும் ஒரு ஐந்து முறை செய்யலாம்.

கடைசியில் வலது பக்கம் திரும்பி மெதுவாக எழுந்து உட்காருங்கள். இந்த இருபது நிமிஷ வித்தையைச் சரியாகச் செய்தால், அது ஆறு மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்குச் சமமாம்.

இதனால் என்ன லாபம்?

ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் எஸ்கேப் ஆகிவிடும்.

இதயத் துடிப்பு சீராகும்.

ஆழ்மன அழுக்குகள் கிளீன் ஆகும்.

முக்கியமாக, உங்கள் தோலின் மேல் இருக்கும் அந்த ஏதோ ஒரு அழுத்தம் மற்றும் முகத்தில் இருக்கும் அந்த எரிச்சல் காணாமல் போகும்.

மொத்தத்தில், நேராகப் படுத்து உருப்படியாகத் தூங்க முடியாதவர்கள், இந்த யோக நித்திரை என்ற ஷார்ட்கட் ரூட்டில் போய் புத்துணர்ச்சி அடையலாம். கம்ப்யூட்டர் கர்மாவிலிருந்து தப்பிக்க இதைத் தவிர வேறு வழியில்லை போலிருக்கிறது!

என்ன இருந்தாலும் எட்டு மணி நேர தூக்கத்திற்கு எதுவும் ஈடாகாது. ஈடாகாத போது இது கொஞ்சம் ஈடு செய்யும். விசயம் அவ்வளவுதான்.

*****

No comments:

Post a Comment