17 May 2026

நள்ளிரவு மேட்னி! - ஒரு குறுங்கதை

நள்ளிரவு மேட்னி!

சென்னையின் ஒரு பழைய அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடி. அறையில் இருந்த ஒரே ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்தால், கீழே தெருவிளக்கின் ஒளியில் மழையில் நனைந்தபடி ஒரு கறுப்பு நாய் நின்றிருந்தது. இன்பவேணி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி இரவு பனிரெண்டு. கண்ணபிரான் இன்னும் வரவில்லை.

கண்ணபிரான் ஒரு கலைஞன். துரதிர்ஷ்டவசமாக அவனது கலை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிட்டது. அவன் ஒரு தேர்ந்த கைரேகை நிபுணன், ஆனால் அடுத்தவர் பைகளில் இருக்கும் பர்ஸைத் திருடும்போதுதான் அவனது கைரேகைகள் சிறப்பாகச் செயல்பட்டன.

இன்பவேணி ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தாள். இப்போது அவள் பாடுவது இரண்டு பேருக்கு மட்டும்தான். ஒன்று, தூளியில் இருக்கும் குழந்தைக்கு. இன்னொன்று, அவள் படும் துயரங்களைக் கேட்டுப் பழகிப்போன அந்தச் சுவருக்கு.

அவர்களின் வாழ்க்கை ஒரு கிழிந்த இசைத்தட்டு போல ஓடிக்கொண்டிருந்தது. கண்ணபிரான் அடிக்கடி சொல்வான், இன்பவேணி, ஒரு பெரிய டீல் இருக்கு. அது முடிஞ்சா நாம பெரிய இடத்துக்குப் போயிடலாம். அப்புறம் நீ வைரம் பதிச்ச கம்மல் போட்டுக்கிட்டு கச்சேரி பண்ணலாம் என்று.

இன்பவேணி வைரத்தை எதிர்பார்க்கவில்லை, அமைதியான ஒரு தூக்கத்தையே எதிர்பார்த்தாள்.

அந்த இரவு 12 மணிக்குப் பலமாக ஒரு சத்தம் கேட்டது. கதவு திறக்கப்பட்டது. கண்ணபிரான் உள்ளே நுழைந்தான். ஆனால் அவன் தனியாக வரவில்லை. பின்னால் இரண்டு முரட்டு மனிதர்கள். ஒருவன் கையில் கத்தி, இன்னொருவன் கையில் ஒரு லெதர் பேக்.

இதோ இவதான் என் பொண்டாட்டி. நல்லா பாடுவா. இவகிட்ட கொடுங்க, என்றான் கண்ணபிரான். அவன் கண்கள் மதுவினால் சிவந்திருந்தன.

அந்த மனிதர்களில் ஒருவன் முன்னால் வந்தான். இன்பவேணி மேடம், உங்க புருஷன் எங்ககிட்ட 50,000 ரூபாய் கடன் வாங்கியிருக்கான். இன்னைக்குத் திருப்பித் தர்றதா சொன்னான். ஆனா அவன்கிட்ட காசு இல்லை. என் பொண்டாட்டி ஒரு பழைய பாட்டைக் கண்டுபிடிச்சு வச்சிருக்கா, அதைக் கொடுத்தா கோடிக்கணக்குல பணம் வரும்னு சொல்லி எங்களை இங்க கூட்டிட்டு வந்திருக்கான், என்றான்.

இன்பவேணி நடுங்கினாள். கண்ணபிரான் அவளருகே வந்து ரகசியமாகச் சொன்னான், வேணி, அந்தப் பழைய பெட்டியில இருக்கிற பேப்பரை எடு. அந்த ராகம் மட்டும் கிடைச்சா இவங்க நம்மளை விட்டுடுவாங்க.

இன்பவேணி மெதுவாக உள்ளே சென்றாள். அவளிடம் எந்தப் பழைய ராகமும் இல்லை. ஆனால், அவளது அப்பா ஒரு பழைய உயிலை வைத்திருந்தார். அது அவர்கள் ஊரில் இருந்த ஒரு சிறிய நிலத்தின் பத்திரம். கண்ணபிரானைத் தப்பிக்க வைக்க அவள் எதையும் செய்யத் தயாராக இருந்தாள். அந்தப் பத்திரத்தைக் கொண்டுவந்து அவர்களிடம் நீட்டினாள்.

இதுதான் அந்தப் பாட்டு. இதோட மதிப்பு உங்களுக்குத் தெரியாது, என்றாள் இன்பவேணி கண்ணீருடன்.

அந்த மனிதர்கள் அந்தப் பத்திரத்தைப் பார்த்தார்கள். இது என்ன பாட்டா? இது ஏதோ சொத்துப்பத்திரம் மாதிரி இருக்கே, என்று குழம்பினார்கள்.

கண்ணபிரான் அவசர அவசரமாக, ஆமாம், இதுதான் அந்த மியூசிக் நோட்ஸ். இதை எடுத்துட்டுப் போங்க, என்று அவர்களைத் துரத்தினான். அவர்கள் நம்ப முடியாமல் அதை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.

இன்பவேணி தரையில் அமர்ந்து அழுதாள். நம்மளோட கடைசிப் புகலிடமான அந்த நிலத்தையும் கொடுத்துட்டேனே, என்றாள்.

கண்ணபிரான் அவளைப் பார்த்து ஒரு விசித்திரமான சிரிப்பு சிரித்தான்.  நீ ஒன்னும் கவலைப்படாத வேணி, இனிமே நமக்குக் கஷ்டமே இல்லை, என்றான்.

மறுநாள் காலை. இன்பவேணி தூங்கி எழுந்தபோது, கண்ணபிரான் வீட்டில் இல்லை. மேஜை மேல் ஒரு கடிதம் இருந்தது.

இன்பவேணி, அந்த நிலப் பத்திரம் உண்மையில் செல்லாத ஒன்று. அது என் அப்பா அடமானம் வைத்து மூழ்கிப்போன சொத்து. அதை வைத்து நான் அந்த ரௌடிகளிடம் நாடகமாடித் தப்பித்து விட்டேன். ஆனால், நீ எனக்காகச் செய்த அந்தத் தியாகம் எனக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைத்தது. நான் உனக்குத் தகுதியானவன் இல்லை. அதனால் நான் கிளம்புகிறேன். உன் அப்பா உனக்காகச் சேர்த்து வைத்த உண்மையான நகைகள் அந்தத் தூளிக்கு அடியில் இருக்கின்றன. நான் அதைத் தொடவில்லை.

இன்பவேணி பதற்றத்துடன் தூளியைத் தூக்கினாள். அங்கே ஒரு சிறிய பொட்டலம் இருந்தது. அதைத் திறந்தால். உள்ளே நகைகள் இல்லை. பென் டிரைவ்கள்.

ஒவ்வொரு பென் டிரைவ்வாகப் போட்டுப் பார்த்தாள். அவளுக்கு உடலெங்கும் கூசியது. அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. 

கேஸ் அடுப்பைப் பற்ற வைத்தாள். ஒவ்வொரு பென் டிரைவ்வாகப் போட்டு அவை உருகியோடுவதைப்பார்த்துக் கொண்டே இருந்தாள்.

*****

No comments:

Post a Comment