விரல் நுனி நரகம் – ஒரு டிஜிட்டல் ஜாதகம்!
ஒரு
காலத்தில் மனிதர்கள் மண்ணைத் தோண்டினார்கள். பிறகு இயந்திரத்தைத் துடைத்தார்கள். இப்போது
கைப்பேசியைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விழித்தவுடன் டூத் பேஸ்ட்டையும் பிரஷையும்
தேடுகிறார்களோ இல்லையோ, நோட்டிபிகேஷன் பாரில் யாராவது லைக் போட்டிருக்கிறார்களா என்று
தேடுகிறார்கள்.
முன்பு
ஒழுக்கம் என்பது அண்டை வீட்டாருடன் சண்டை போடாமல் இருப்பது. இன்று, தெரியாத ஊரில் இருக்கும்
ஒருவரைத் திட்டி கமெண்ட் போடாமல் இருப்பதே பெரும் ஒழுக்கம்.
சுதந்திரம்
என்பது நினைத்ததை வாந்தி எடுப்பது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால்,
ஒரு பொய்யான தகவலைப் பகிர்வது என்பது, ஆயிரம் பேருக்குத் தெரியாமல் டயேரியா மாத்திரைகளைக்
கொடுப்பதற்குச் சமம்.
இன்று
உலகமே விலையில்லா உலகமாகி விட்டது. இதில் இலவசம் படுத்தும் பாடு படாத பாடாக இருக்கிறது.
அதிலும் இந்த இலவசச் செயலிகள். இலவசமாக ஒரு செயலியைத் தரவிறக்கம் செய்யும்போது நீங்கள்
எதையும் கொடுக்கவில்லை என்று தப்புக்கணக்கு போடலாம். அங்கே விற்கப்படுவது நீங்கள் தான்.
உங்கள்
புகைப்படம், உங்கள் ரசனை, உங்கள் ரகசியங்கள் என இவை அனைத்தும் விளம்பர நிறுவனங்களின்
கல்லாவிற்குப் போகும் எரிபொருள். நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பது உங்கள் மனைவியை
விட கூகுள் அல்காரிதத்திற்கு நன்றாகவே தெரியும்.
இணையத்தினால்
எழுந்த பிரச்சனைகளே இன்னும் தீர்ந்த பாடில்லை. அதற்குள் அடுத்த பூதம் கிளம்பியது போலச்
செயற்கை நுண்ணறிவு புதுப்புது பிரச்சனைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இன்று
செயற்கை நுண்ணறிவு கவிதை எழுதுகிறது, படம் வரைகிறது. நாளை அது உங்களுக்காக முடிவெடுக்கும்.
அப்போது மனிதத் தீர்ப்பு எங்கே போகும்? இயந்திரம் சொல்வதை அப்படியே கேட்பதற்கு நாம்
ஏன் ஆறாம் அறிவோடு அலைய வேண்டும்?
விசயங்கள்
இவ்வளவு இருக்கின்றன. இதற்கு மத்தியில் திரைக்குப் பின்னால் இருப்பது ஒரு மனிதன் என்பதை
மறந்துவிட்டு, கீபோர்டில் வீரவசனம் பேசுவதுதான் இன்றைய நாகரிகம்.
என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்று யோசிக்கும் போது இப்படிச் சில எண்ணங்கள் வந்து போவதைத்
தடுக்க முடியவில்லை. பரிணாம வளர்ச்சியில் மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பார்கள்.
இப்போது மீண்டும் ஸ்மார்ட்போனுக்குள் கூனிக் குறுகி அமர்ந்து, அந்தப் பழைய நிலையை நோக்கிப்
போய்க்கொண்டிருக்கிறான்.
மனிதர்களின்
ஆறாம் அறிவுக்கு எப்போதும் வேலை இருக்க வேண்டும். அதற்கு இந்த இயந்திர அறிவை ஆறாம்
அறிவு ஆள வேண்டும். மாறாக ஆறாம் அறிவை இயந்திர அறிவு ஆளக் கூடாது. இன்றைய உலகின் பெரும்
கவலை இதுவாகத்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?
*****

No comments:
Post a Comment