15 May 2026

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

எத்தனாலா? தண்ணீரா? – எது முக்கியம்?!

வாழ்க்கையே ஒரு கலவைதான். இப்போது நம் பெட்ரோலும் அப்படி ஆகிவிட்டது. சமீபகாலமாக எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற பேச்சு பலமாக அடிபடுகிறது. இதனால், பெட்ரோல் இறக்குமதி குறையும் என்கிறார்கள் ஒரு பக்கம். நிலத்தடி நீர் காலியாகிவிடும் என்கிறார்கள் இன்னொரு பக்கம்.

இதில் எது உண்மை?

எத்தனால் என்றால் என்னவென்றால் சர்க்கரை ஆலைகளின் கழிவான மொலாசஸ் அல்லது மக்காச்சோளம், நெல் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை எரிபொருள். குடிப்பவர்களுக்கு இது கிக் தரும், வண்டிக்கு இது பிக் அப் தரும் என்று நம்பப்படுகிறது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஐடியா வந்தாலும், இப்போதுதான் அரசு இதற்கு சீரியஸ் லுக் கொடுக்கிறது. தற்போது 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்க வேண்டும் என்பது இலக்கு.

சமூக வலைதளங்களில் ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க 10,000 லிட்டர் தண்ணீர் தேவை என்று வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். நிஜம் என்னவென்றால், சராசரியாக 3,000 முதல் 5,000 லிட்டர் தண்ணீர் தேவை. இதுவும் குறைவானது அல்ல!

இதனால் நமக்குத் தேவை எத்தனாலா, பெட்ரோலா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கணக்குப் போட்டுப் பார்த்தால், ஆண்டுக்கு 2,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. அதாவது ஒரு டி.எம்.சி எத்தனால். இதைத் தயாரிக்க நமக்குத் தேவைப்படும் தண்ணீர், காவிரி ஆற்றில் ஓடும் ஒட்டுமொத்த நீரை விட பல மடங்கு அதிகம்.

காவிரி நீருக்கே நூறு வருடமாகக் கர்நாடகமும் தமிழ்நாடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கையில், எத்தனாலுக்காக 5,000 டி.எம்.சி தண்ணீரை எங்கே போய்த் தேடுவது?

பெட்ரோல் இறக்குமதியைக் குறைத்தால் ஆண்டுக்கு 8 முதல் 10 பில்லியன் டாலர் மிச்சமாகும். இது நாட்டுக்கு நல்லது.

எத்தனாலுக்காக கரும்பு விவசாயம் எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்குப் பணம் கிடைக்கிறது, சரி. ஆனால் நிலத்தடி நீர்? அதுவும் எக்கச்சக்கமாகக் குறைந்து வருகிறது.

ஆக, என்ன நடக்கும்? கரும்பிலிருந்து எத்தனால் எடுத்து பெட்ரோல் போடுவோம். நாளை வண்டி ஓடும், ஆனால் குடிக்கத் தண்ணீர் இருக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

உண்மையைச் சொன்னால், எத்தனால் கலந்த பெட்ரோல் என்பது சாதாரண பெட்ரோலை விட உற்பத்திச் செலவு அதிகம். சுமார் 30% முதல் 50% வரை. ஆனாலும், புவிசார் அரசியல் சூழலில் மற்ற நாடுகளை நம்பியிருப்பதை விட, நம்மூர் கரும்பை நம்புவது மேல் என்று அரசு நினைக்கிறது.

எத்தனால் கலந்த பெட்ரோல் வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், பெட்ரோலைச் சேமிக்கப்போய் தண்ணீரைத் தொலைத்துவிடக் கூடாது.

பெட்ரோல் தீர்ந்தால் மின்சார வண்டிக்கு மாறலாம். தண்ணீர் தீர்ந்தால் எதற்கு மாறுவது?

இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் எத்தனால் கனவு கண்டால், எதிர்காலத்தில் பெட்ரோல் பங்குகளில் தண்ணீர் பாட்டில்களையும், குடிநீர் குழாய்களில் பெட்ரோலையும் தேட வேண்டியிருக்கும்.

*****

No comments:

Post a Comment