11 May 2026

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

மௌனத்தின் மர்மமும் மற்றவர்களின் நல்ல எண்ணங்களும்!

வாழ்க்கை எனக்கு மட்டும் ஏன் இப்படிப் போகிறது? – இது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒரு தேசிய கீதம்.

இந்தக் கேள்வி எழாத நாளில்லை, இந்தக் கேள்விக்குப் பதில் கிடைத்ததாகச் சரித்திரமுமில்லை.

இப்போது நாம் இங்கே பேசப் போவது இந்தக் கேள்வியின் மையத்தை அல்ல,  இந்தக் கேள்வியை நீங்கள் வெளியில் சொல்லக் கூடாது என்கிற பரம ரகசியத்தைதான். உங்களை அடித்துக் கேட்டாலும் கூட, ஆள் வைத்து மிரட்டிக் கேட்டாலும் கூட சொல்லி விடக் கூடாது.

உங்களுக்கு ஒரு கஷ்டம் என்று தெரிந்தால், உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஓடி வருவார்கள். அது உங்கள் காயத்துக்கு மருந்து போட அல்ல, அந்தக் காயம் எவ்வளவு ஆழமானது என்பதை அளந்து பார்த்துவிட்டு, தங்களுக்கு அது இல்லை என்று நிம்மதி அடைவதற்காக.

நீங்கள், என் வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது? என்று சொன்னால் போதும், அவர்கள் உடனே தங்கள் பையிலிருந்து ஆறுதல் என்ற பெயரில் சில விஷக் குளிகைகளை எடுப்பார்கள்.

இதெல்லாம் என்னப்பா பிரமாதம்? பக்கத்துத் தெரு பரமசிவத்துக்குக் காலைக் கடன் கழிக்கவே கடன் வாங்க வேண்டியிருக்கு தெரியுமா? என்பார்கள்.

உங்கள் துயரத்தைவிடப் பெரிய துயரத்தை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தி, உங்கள் வலியை அவர்கள் அற்பமானதாக மாற்றிவிடுவார்கள்.

நீங்கள் உங்கள் குழப்பத்தைச் சொன்னால், அவர்கள் அதைத் தீர்க்க மாட்டார்கள். மாறாக, நீங்கள் இதுவரை யோசிக்காத சில புதுப் புதுத் துன்பங்களை அறிமுகப்படுத்துவார்கள்.

நீ ஏன் இது இப்படிப் போகிறது என்று கேட்கிறாய். ஆனால், உண்மை என்னவென்றால், இது இன்னும் மோசமாப் போக வாய்ப்பிருக்கிறது என்று பேதியைக் கிளப்புவதைப் போலப் பீதியைக் கிளப்புவார்கள். உங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்தை ஒரு திகில் சினிமாவாக மாற்றி உங்கள் கையில் கொடுப்பார்கள்.

இறுதியில், உங்கள் வாழ்க்கை போவதைப் பற்றி வருத்தப்பட்ட நீங்கள், வாழ்க்கை ஏன் இன்னும் போகாமல் இங்கேயே நிற்கிறது? என்று வருத்தப்பட ஆரம்பிப்பீர்கள்.

வாழ்க்கை ஏன் எனக்கு மட்டும் இப்படிப் போகிறது என்பதற்கான பதில் யாரிடமும் இல்லை. அது கடவுளுக்கே தெரியாத ரகசியம். ஏனெனில் அவர்தான் அந்தத் திரைக்கதையை எழுதிவிட்டு, இடையில் தூங்கிப் போனவர்.

எனவே, இந்தக் கேள்வியை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். நீங்கள் மௌனமாக இருக்கும் வரை, மற்றவர்கள் நீங்கள் ஏதோ ஒரு பெரிய மிஷன் அல்லது தியானத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.

நீங்கள் வாயைத் திறந்து ஏன் இப்படி? என்று கேட்ட அடுத்த நிமிடம், உங்கள் மீதான மதிப்பு குறைந்து, நீங்கள் ஒரு பாவப்பட்ட ஜீவன் என்ற முத்திரை குத்தப்படுவீர்கள்.

விசயம் இதுதான்.

உங்கள் வாழ்க்கை எப்படிப் போகிறது என்பது முக்கியமல்ல, அது போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் முக்கியம்.

நதி ஓடுகிறது என்றால் அது இயற்கை. ரயில் ஓடுகிறது என்றால் அது போக்குவரத்து. வாழ்க்கை ஓடுகிறது என்றால் ஓடி விட்டுப் போகட்டுமே. அது தலைவிதி.

அதை ஏன், எதற்கு என்று கேட்டால், இவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, என்று நினைத்து உலகம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கும்.

இனிமேல், வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது என்று உங்களுக்குத் தோன்றினால், ஒரு கண்ணாடி முன்னால் நின்று அந்தக் கேள்வியைக் கேளுங்கள். கண்ணாடி பதில் சொல்லாது, ஆனால் அங்கே நிற்கும் ஆள், நானும் உன்னோடுதான் இருக்கிறேன், என்று ஒரு போலிச் சிரிப்பைச் சிரிப்பார் பாருங்கள். அது போதும்.

அதை விட்டுவிட்டு அடுத்தவரிடம் சொன்னால், உங்கள் வாழ்க்கைப் படகு ஓட்டையாக இருப்பதை ஊருக்கே தம்பட்டம் அடித்து, அதில் இன்னும் கொஞ்சம் தண்ணீரையும் மொண்டு ஊற்றி விட்டுப் போவார்கள்.

மௌனமாக இருங்கள். உங்கள் வாழ்க்கை எப்படிப் போனாலும், அது உங்களுடையது மட்டுமே!

இது போன்ற நிறைய கட்டுரைகள் எழுத ஆசை. ஆனால், அது உங்களது தயவின்றி முடியாது.  கொஞ்சம் ஷேர் பண்ணி விட்டு மற்றவர்களை ஒரு வழி பண்ணி விடுங்கள்.

*****

No comments:

Post a Comment