புத்தகங்களை ஏன் கொண்டாட வேண்டும்?
புத்தகம் என்பது புதிய உலகங்களுக்கான நுழைவாயில்
என்கிறார்கள். அதாவது, நிஜ உலகில் போக்குவரத்து நெரிசலிலும், வரி வரிசையிலும் சிக்கிக்கொள்ளாமல்,
காசே செலவில்லாமல் வேறொரு இடத்திற்கு எஸ்கேப் ஆக உதவும் ஒரு சட்டவிரோதமில்லாத வழி இது.
ஒரு புத்தகம் என்பது வெறும் காகிதக் கட்டு
அல்ல, அது மனிதக் கற்பனை செய்துகொண்ட உச்சகட்ட அறிவின் தொகுப்பு.
யுனெஸ்கோகாரர்கள் ஏப்ரல் 23 ஆம் தேதியை உலகப்
புத்தக தினம் என்று அறிவித்திருக்கிறார்கள். அன்று நமக்குத் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்
நாள் ஆகி விட்டது.
ஏன் அந்தத் தேதி? 1616 இல் ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ்
போன்ற ஜாம்பவான்கள் இறந்த அதே நாளில்தான் பல எழுத்தாளர்கள் பிறந்தும் இருக்கிறார்கள்.
இயற்கையின் விசித்திரமான பேலன்சிங் இது.
ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் ஒரு படி மேலே போய்,
இந்த ஏப்ரல் 23 இல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ரோஜா மலரைப் பரிமாறிக்கொண்டார்களாம். ரோஜாவைப்
பரிமாறிக்கொண்டால் மட்டும் போதாது, அந்தப் புத்தகத்தில் இருக்கும் வரிகளையும் கொஞ்சம்
உள்ளே ஏற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் சூட்சுமம்.
உன் நண்பனைச் சொல், உன்னைப் பற்றிச் சொல்கிறேன்,
என்றார் சாக்ரடீஸ்.
நீ படிக்கும் புத்தகத்தைச் சொல், நீ யார் என்று
சொல்கிறேன், என்றார் ஜேம்ஸ் ஆலன்.
இன்றைய நிலவரப்படி பலரிடம் இதைக் கேட்டால்,
அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் திரையைக் காட்டி, நான் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கிறேன்
அல்லது யூடியூப் ஷார்ட்ஸ் பார்க்கிறேன், என்றுதான் சொல்வார்கள்.
பாவம் நூலகங்கள். ஆயிரக்கணக்கான அறிஞர்களைத்
தன்னுள் ஒளித்து வைத்துக்கொண்டு, தெருவோரம் கவனிக்கப்படாத ஓர் அருங்காட்சியகத்தைப்
போலக் காத்திருக்கின்றன.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் நூலகம் கட்டுவேன்
என்றாராம் காந்தி. இன்று ஒரு கோடி கிடைத்தால், அதை வைத்துக்கொண்டு எந்த ஓடிடி சந்தாவை
வாங்கலாம் என்று யோசிக்கும் தலைமுறையில் நாம் இருக்கிறோம்.
புத்தகங்கள் நெருக்கடியான காலங்களில் ஆறுதல்
தருகின்றன என்பது உண்மைதான். ஆனால், ஒரு நல்ல புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு ஏற்படும்
அந்த வெறுமை இருக்கிறதே, அது ஒரு காதலியின் பிரிவை விடக் கொடியது.
வாசிப்பானது உங்கள் சொற்களஞ்சியத்தை இது விரிவுபடுத்தும்.
அதன் பிறகு நீங்கள் சாதாரண மனிதர்களிடம் பேசும்போது, அவர்களுக்குப் புரியாத வார்த்தைகளைப்
பயன்படுத்தி உங்களை ஒரு அறிவாளி என்று நீங்களே நம்ப வைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளுக்குப் பிறந்தநாள் பரிசாகப் பொம்மைகளைத்
தந்து அவர்களை மொக்கையாக்காதீர்கள். புத்தகங்களைத் தாருங்கள். பாரதிதாசன் சொன்னது போல,
நாளை நாட்டை ஆளப்போகிறவர்கள் அவர்கள்தான். அவர்கள் சரியாக ஆள வேண்டும் என்றால், முதலில்
அவர்கள் கையில் ஒரு புத்தகம் இருக்க வேண்டும், ரிமோட் கண்ட்ரோல் அல்ல.
ஓடும் நீர்தான் தூய்மையாக இருக்கும், எரியும்
விளக்குதான் அதாகப்பட்டது மெழுகுவர்த்தி, அகல் வகையறாக்கள்தான் இன்னொன்றை ஏற்றி வைக்கும்.
மின்சார பல்புகளை இதனுடன் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல், வாசிக்கும்
மூளைதான் துருப்பிடிக்காமல் இருக்கும். எனவே, புத்தகங்களை வாங்குங்கள், 10 சதவீத தள்ளுபடி
வேறு இருக்கிறது.
படித்துவிட்டு அப்படியே அலமாரியில் அடுக்கி
வைக்காமல், காகித வாசத்தை சுவாசித்து, அதில் இருக்கும் கிறுக்குத்தனங்களை ரசிக்கக்
கற்றுக்கொள்ளுங்கள்.
இதற்கு மேலும் என்னால் வாசிக்க முடியாது என்பவர்கள்,
குறைந்தபட்சம் ஒரு புத்தகத்தின் அட்டையையாவது தொட்டுப் பார்க்கவும்!
*****

No comments:
Post a Comment