கோள்களின் க்யூ வரிசை!
அதிகாலையில்
எழுந்து எப்போதாவது வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதிகாலையில் எழும் பழக்கமே இல்லை
என்றால் இந்த அதிசயத்தைப் பார்ப்பது கஷ்டம். அதற்காகவே அதிகாலை எழுந்திருங்கள்.
இதுதான்
2026 இன் மிகப்பெரிய காஸ்மிக் ஷோ. இந்த பிப்ரவரி மாதத்தில் ஐந்து கோள்கள், அவையாகப்பட்டன
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து க்யூவில் நிற்கின்றன.
இதை பிளானட்டரி அலைன்மென்ட் என்கிறார்கள் வானியிலாளர்கள்.
உடனே,
இதனால் ஆர்டிக் பனி உருகி, ஆண்டிப்பட்டியில் வெள்ளம் வருமா என்றோ, ராகு, கேது இரண்டும்
சேர்ந்து தேர்தலில் நிற்குமா என்றோ, மகளிர் உரிமைத் தொகை பத்தாயிரத்தைத் தாண்டி விடுமா
என்றோ கேட்காதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.
சயின்டிபிக்கா
இதில் ஆபத்து எதுவும் இல்லை. ஜோதிடர்கள் எதாவது சொல்வதற்கு நான் பொறுப்பில்லை. இது
ஒரு ஜியாமெட்ரி பெர்ஸ்பெக்டிவ். அவ்வளவுதான். சூரியனை சுற்றி வரும் மேற்படி கோள்களை
நாம் இருக்கும் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு நேர்க்கோட்டில் இருப்பது போன்ற
ஒரு தோற்றம் உருவாகிறது.
அறிவியல்
ரீதியாகப் பார்த்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
வேகத்தில் பயணிப்பவை.
இந்த
புதன் இருக்கிறதே, இது உசைன் போல்ட் மாதிரி 88 நாட்களிலேயே சூரியனை ஒரு ரவுண்ட் அடித்து
விடும். வியாழன் இருக்கிறதே, அது கவர்ன்மென்ட் பைல் மாதிரி சூரியனை ஒரு ரவுண்ட் அடிக்கு
ஒரு மாமாங்கம் ஆகி விடும். இவை இரண்டும், மற்ற நண்பர்களுடன் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது
என்பது அபூர்வமான விஷயம். கிட்டத்தட்ட ஒரு ஃபேமிலி கெட் டுகெதர் மாதிரி.
இதைப்
பார்ப்பதற்கு டெலஸ்கோப் இத்தியாதிகள் எதுவும் வேண்டாம். அதிகாலை, சுபவேளை, கீழ்வானத்தைப்
பார்த்தால் பளிச்சென்று புள்ளிகளாக இந்தக் கோள்களின் பெரேடைப் பார்க்கலாம். அதுவும்
வெறுங்கண்ணால் பார்க்கலாம். நட்சத்திரங்களைத் தாண்டி இவை ஜொலிக்கும். ஏனென்றால் நட்சத்திரங்கள்
மின்னும். கோள்கள் எவ்வளவு மப்பு என்றாலும் ஸ்டெடியாக நின்று ஜொலிக்கும்.
கிரகச்சாரங்களைப்
பற்றிச் சொல்லும் போது, நேரம் முக்கியமில்லையா? அதுவும் நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு
காலம், எம கண்டம் போல நேரத் துல்லியம் வேண்டுமல்லவா! ஸோ, அதிகாலை 5.15 டூ 6.00 மணி
பெஸ்ட் டைம். அதாவது முற்பகல்.
நேரக்
கணக்கைச் சொல்லி விட்டு, நாள் கணக்கை விட்டு விட முடியுமா? நேற்றிலிருந்தே இந்த கோள்களின்
பெரேட் தெரிய ஆரம்பித்து விட்டது. இருந்தாலும் நாளையும் நாளை மறுதினமும் ரொம்ப ஸ்பெஷலாகவே
தெரியும். அதனால்தான் இன்று மாலையே இந்தப் பதிவைப் போடுகிறேன்.
அப்புறம்
திசை. கிழக்கு மற்றும் தென்கிழக்கு உத்தமம். வானம் கொஞ்சம் மேகமூட்டம் இல்லாமல் இருந்தால்
சௌகரியம்.
இடம்
என்றால் உங்கள் வீட்டு மொட்டை மாடி ரொம்பவே பெஸ்ட்.
அதில்
ஒரு விஷேசம் பாருங்கள். இந்த வெள்ளி அப்படியே வைரக்கல் மாதிரி ஜொலிக்கும். அதற்கு அடுத்தப்படியாக
வியாழன் ஜொலிக்கும். இருப்பதிலேயே பெரிய கோள் என்றாலும் ஜொலிப்பில் வியாழன் வெள்ளிக்கு
அடுத்ததப்படிதான். என்ன செய்வது பிரபஞ்சம் அப்படித்தான் டிசைன் பண்ணி வைத்திருக்கிறது.
செவ்வாய் குங்குமப் பொட்டு போலவும், சனி மஞ்சள் கலந்த வெள்ளையில் டிராபிக் சிக்னலைப்
போல இருக்கும். புதன் அடிவானத்தில் இருக்கும்.
இதற்கு
மேலும் துல்லியம் வேண்டுமென்றால், ஸ்கைவியூ, ஸ்டெல்லாரியம் போன்ற ஆப்கள் இருக்கின்றன.
அவற்றை உங்கள் மொபைலில் டௌன்லோடுங்கள். திசையைத் துல்லியமாகச் சொல்லி விடும்.
மிக
முக்கியமான விசயம் என்னவென்றால், எல்லாவற்றையும் சூரியன் வருவதற்கு முன்னே பார்த்து
விட வேண்டும். சூரியன் வந்து விட்டால் எல்லாம் அப்ஸ்கான்ட்தான். பார்ப்பது கஷ்டம்.
மறுநாள் அதிகாலை வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். ஆம் பிப்ரவரி 15 வரை இந்த வானியியல்
ஆபர் உங்களுக்குக் காத்திருக்கிறது.
அப்புறம்
இந்தக் கோள்கள் எல்லாம் இப்படி வரிசையாகக் கியூவில் நிற்கிறதே, மனிதன் மட்டும் ஏன்
அப்படி இல்லை என்றால், அது கோள்களின் கிரகச்சாரம், இது மனிதர்களின் கிரகச்சாரம். அது
கிடக்கட்டும், நீங்கள் நாளை அதிகாலை எழுந்து ஒரு வியூ பார்த்து விட்டு, அப்படியே வாட்ஸ்
ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விடுங்கள். இந்த உலகம் உங்களைப் பார்த்து அசரட்டும், சயின்ஸில்
நீங்கள் இவ்வளவு கில்லியாக இருக்கிறீர்களே என்று! அப்படியே இதை நான்கு பேருக்கு ஷேர்
பண்ணுங்கள். புண்ணியமாகப் போகட்டும், அவர்களும் அதைப் பார்த்துப் பரவசமடையட்டும்!
*****

No comments:
Post a Comment