11 Feb 2026

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

பனிப்பொழிவோடு கலந்த ரத்தத் துளிகள்!

கனடா அமைதியின் தேசம். இன்று நடந்த சம்பவம் கனடாவா அங்கு என்னடா நடக்கிறது விழி உயர்த்த வைத்திருக்கிறது.

அந்த இடம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ்.

காலை மணி ஒன்பதே கால். வகுப்பறை துவங்கும் நேரம்.

அந்தக் காலை வகுப்பறைக்குள் ஆப்பிள் மடிக்கணினிகள் மெல்லத் திறந்துகொண்டிருந்தன. திடீரென்று அந்தச் சத்தம்.

என்ன சத்தம் இந்த நேரம் என்று அதைக் கேட்டு, யாரோ கதவை முட்டுகிறார்களோ என்றுதான் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது கதவை முட்டும் சத்தமல்ல, உயிரை எடுக்கும் சத்தம். துப்பாக்கிச் சூடு.

துப்பாக்கி ஏந்தியவன் உட்பட பத்து பேரின் உயிர்கள் காற்றில் கலக்கின்றன. 25க்கும் மேற்பட்டோரின் காயம் பட்ட ரத்தத் துளிகள் பனியில் நனைகின்றன.

அந்த செமி ஆட்டோமேட்டிக் கன், கண் இமைக்கும் நேரத்தில் மண்ணில் 10 உயிர்களை விழச் செய்து விட்டது.

அந்தத் துப்பாக்கிக் கொடூரனின் பெயர் இன்னும் போலீஸ் ஃபைலில் ரகசியமாக இருக்கிறது.

அந்தத் துப்பாக்கி மிருகம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தபோது, கணக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியைக்குத் தெரிந்திருக்காது, அதுதான் அந்த வகுப்பின் கடைசிப் பாடம் என்று. அவர் நடத்திய கணக்கு முடிவதற்குள் பத்து பேரின் கணக்கு முடிந்து விட்டது.

கனடா என்றால் நம்பகம் என்று ஒரு பிம்பம் உண்டு. பனி, மேப்பிள் சிரப், பண்பான மனிதர்கள். ஆனால், இப்போது அந்தப் பனிப்பாறையில் ரத்தக் கறை படிந்திருக்கிறது. துப்பாக்கிக் கலாச்சாரம் எனும் வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குப் பரவுகிறதோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதெல்லாம் அமெரிக்காவில்தான் சகஜம், கனடாவில் அல்ல.

அமெரிக்காவில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகளைக் கடக்க பழகி விட்ட உலகம், கனடாவில் நடக்கும் போது அதிர்ச்சி அடைகிறது. கனடா பிரதமர் மார்க் கார்னி கண்கள் சிவக்க, இது ஒரு தேசிய சோகம் என்கிறார்.

கனடா இந்தியா அல்ல. அங்கே பாதுகாப்பு அதிகம், தொழில்நுட்பமும் அதிகம். அப்படியானால் அந்தப் பள்ளியில் இருந்த ஸ்மார்ட் செக்யூரிட்டி சிஸ்டம் ஏன் வேலை செய்யவில்லை? லேசர் அலாரங்கள் எங்கே போயின? ஒருவன் ஆயுதத்தோடு நுழையும்போது அந்தச் செயற்கை நுண்ணறிவு ஏன் மௌனமாக இருந்தது?

மனித வன்முறையை எந்த மென்பொருளாலும் முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு இது மேலும் ஓர் உதாரணமாகி விட்டது.

பத்து உயிர்கள் காற்றில் கரைந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் மெழுகுவர்த்திகள் எரியும். பூங்கொத்துகள் குவியும். அப்புறம்? அடுத்த ஒரு செய்தி வரும் வரை நாம் இதை மறப்போம்.

துப்பாக்கிகள் பேசுவதை நிறுத்திவிட்டு, மனிதர்கள் பேசத் தொடங்கினால் ஒழிய, இது போன்ற செய்திகள் வந்துகொண்டேதான் இருக்கும்.

குழந்தைகளோடு பேசத் தொடங்குவோம். அவர்கள் கைகளில் இருக்கும் துப்பாக்கிகளைப் பிடுங்கி விட்டுத் தூரிகைகளையும் பூங்கொத்துகளையும் கொடுப்போம்.

கனடா போன்ற நிலை இந்தியாவில் ஏற்படாது என்று நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இப்படித்தான் அமெரிக்காவில் ஏற்பட்டது போல, இங்கு ஏற்படாது என்று கனடா இருந்திருக்கும். ஆனால் என்னவாயிற்று?

இந்தியாவில் துப்பாக்கிகளுக்கு சட்ட ரீதியான தடைக்கற்களும், வேகத்தடைகளும் நிறைய இருக்கின்றன என்றாலும், கள்ளத்துப்பாக்கிகள் அதிகம் உலவுவது குறித்து உச்சநீதிமன்றமே கவலை தெரிவித்திருக்கிறது. அவை விளையாட்டுப் பொம்மைகள் போலக் குழந்தைகள் கையில் கிடைத்து விடாமல், அவர்களின் கையில் புத்தகங்களும், பேனாக்களுமே புழங்குவதற்கு அவர்களுடனான உரையாடலையும் விவாதங்களையும் நாம் அதிகப்படுத்த வேண்டும்.  

மொபைலிலும், டிஜிட்டல் திரைகளிலும் மூழ்கியிருக்கும் அவர்களை ஆடி, பாடி, உரையாடி விளையாடும் களம் நோக்கித் திருப்ப வேண்டும்.

*****

No comments:

Post a Comment