அட்ஜெஸ்ட்மென்ட் ஆபத்துகள்!
விதிமுறை என்பது
ஒரு ஸ்கேல் மாதிரி. அது நேராக இருந்தால் மட்டும்தான் கோடு நேராக வரும். கொஞ்சம் வளைந்தால்
என்ன, என்று நாம் நினைக்கும்போதுதான் அந்த ஸ்கேல் நம் தலையில் விழும் கத்தியாகிறது.
நமக்குப் பொதுவாக
நிர்வாக ஞானம் லேட்டாகத்தான் பிறக்கிறது, முடி கொட்டிய பிறகுதான் சீப்பு கிடைக்கும்
என்பது போல. சில விதிகளை நெகிழ்வுத்தன்மை என்கிற பெயரில் தளர்த்தும் போது அது மிகப்பெரிய
தவறுகளில் போய் முடிகிறது.
விதிகள் என்பவை
வெறும் சட்டங்கள் அல்ல, அவை ஒரு நிர்வாகியின் கையில் இருக்கும் மிகச்சிறந்த அறுவைச்
சிகிச்சை கருவிகள். அந்தக் கருவியைக் கீழே போட்டுவிட்டு, எல்லாம் சுமூகமாகப் போகட்டும்
என்று நினைத்தால் கட்டி பெரியதாக வளர்ந்து வளர்ந்து வீங்கி வெடித்து நிர்வாகத்தைப்
பதம் பார்த்து விடும். ஆக இதுதான் பூதாகரமாக நிற்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் விதை.
இதன் தர்க்கம்
மிக எளிது. ஒரு சின்ன அட்ஜெட்மென்ட்தானே என்று நினைத்து தளர்த்தக் கூடாத விதியைத் தளர்த்தும்
போது, ஏகப்பட்ட குழப்ப கும்மாளங்கள். அங்கேதான் உள்ளுணர்வு ஒரு ஷார்ட்கட்டை யோசிக்கிறது.
ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மென்டைச் செய்யும் போது, நாமும் எப்போதாவது அதை பயன்படுத்திக் கொள்ளலாமே
என்று. இந்த எண்ணம் இருக்கிறதே, இது ஓர் ஆபத்தான போதை. நிர்வாகத்தில் தவறான பாதை.
இங்கேதான்
ஒரு நுட்பமான விஷயத்தைக் கோட்டை விட்டு விடுகிறோம். நீங்களும் அவர்களும் ஒன்றல்ல.
நீங்கள் கொடுக்கும்
உழைப்பு அதிகமாக இருக்கலாம், அவர்கள் கொடுப்பதோ அற்பமாக இருக்கலாம். உழைப்பால் உயர்ந்து
நிற்பவனையும், உழைக்காமல் ஊதியம் பார்ப்பவனையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதுதான்
நிர்வாகக் கொலை. உங்களுக்குப் பொருந்தும் சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாருக்கும் பொருந்தாது.
உலகத்தில்
எல்லோரையும் சமமாகப் பாவிப்பது போல ஒரு பாவனை வேண்டுமானால் செய்யலாம். ஆனால், உண்மையில்
எல்லோரையும் சமமாகப் பார்க்க முடியாது. அதுவும் நிர்வாகத்தில். அதுதான் யதார்த்தம்.
நிர்வாகத்தில்
குறுக்கு வழிகள் கிடையாது. ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படித்தான் செய்ய
வேண்டும். அதில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய நினைத்தால், அதற்கான விலையை நீங்கள்தான் கொடுத்துத்தான்
ஆக வேண்டும்.
ஏன் நிர்வாகத்தைச்
சில நேரங்களில் ஓர் ஒழுங்கோடு கொண்டு செல்ல முடிவதில்லை? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்,
உள்ளே ஒரு மெல்லிய தாழ்வு மனப்பான்மை ஒளிந்திருக்கலாம். நம்மால் சரியாகச் செய்ய முடியாமல்
போனால் மற்றவர்களின் துணை வேண்டுமே என்கிற பயம் அப்பிக் கிடக்கலாம். ஆனால் உண்மை என்ன
தெரியுமா? நிர்வாகத்தில் யாரும் யாருக்கும் துணை இல்லை. எல்லாம் ஒரு கடிகாரத்திற்குத்
தேவையான கட்டாயப் பார்ட்டுகள்.
சிறிய முள்
மெதுவாக இயங்குகிறதே, பெரிய முள் வேகமாக இயங்குகிறதே, பெரிய முள்ளுக்குக் கொஞ்சம் ஓய்வு
கொடுத்து மெதுவாக இயங்கிக் கொள்ள ஒரு சிறு அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்று நினைத்தால்,
கடிகாரம் கடிகாரமாக இருக்காது, அது பயனற்றதாகப் போய் விடும்.
ஆனால், ஒரு
சின்ன அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், அவர்கள் துணை நிற்பது போலப் பேசுவார்கள், அழகாகச்
சமத்காரம் செய்வார்கள். ஆனால் காரியம் என்று வரும்போது, ஒவ்வொருவரும் அவரவர் சுயநலக்
கூட்டிற்குள் சுருண்டுகொள்வார்கள்.
அடுத்தவனின்
கஷ்ட நஷ்டங்களைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாத மனிதர்களிடம் போய் அட்ஜெஸ்ட்மென்ட்
செய்து கொடுத்து விட்டு ஆப்பாயில் எதிர்பார்ப்பது என்பது பறவைக் காய்ச்சல் வந்தக் கோழியின்
முட்டையை வாங்கிச் சாப்பிடுவதைப் போன்றது.
இனிமேல் நோ
அட்ஜஸ்ட்மென்ட். விதிகள் பேசட்டும். நீங்கள் வேடிக்கை பாருங்கள். அவர்கள் விதிகளுக்குள்
அட்ஜெஸ்ட்மென்ட் ஆகி வருவதை ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள்.
அப்படி அட்ஜெஸ்ட்மென்ட்
செய்ய நினைத்தால் அதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஒரு விதி இருக்கிறது. அது
திருவள்ளுவர் சொன்னது,
“தகுதி என ஒன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.” (குறள், 111)
பொருள் என்ன
என்கிறீர்களா?
நீங்களே தேடிக்
கண்டடையுங்கள். ஏனென்றால், இதில் நோ அட்ஜெஸ்ட்மென்ட். நீங்கள் தேட வேண்டும். தேடிக்
கண்டடைய வேண்டும். அப்போதுதான் அது நிலைக்கும்.
*****

No comments:
Post a Comment