அப்பாவின் பரிட்சயங்கள்
டாஸ்மாக்
இடம் மாற்றப் பட்டதில்
அப்பாவிற்கு
ஆரம்பத்தில் சிரமம் இருந்தது
இப்போது
பழகி விட்டார்
அவராகவே
பேருந்திலேறி
போய்
விட்டு வந்து விடுகிறார்
ஆஸ்பத்திரிக்கு
செல்லும் போது மட்டும்
அக்காவின்
துணை தேவையிருக்கிறது
பேருந்துக்காகக்
காத்திருக்கும் நாட்களில்
பைக்கில்
செல்பவர்கள்
அழைத்துச்
செல்லும் அளவுக்கு
சகாக்கள்
கிடைத்து விட்டதாகவும்
நடத்துநர்களோடு
நல்ல பரிட்சயம்
ஏற்பட்டு
விட்டதாகவும் சொல்லிச் சிரிக்கிறார்
குடிக்க
ஆரம்பித்த நாள்களிலிருந்து
அவரோடு
பேச்சை நிறுத்திய அம்மா
மெளன
சாட்சியாய் கேட்டு வறுபட்ட படியே
எல்லாருக்குமான
இரவு உணவை
வறுத்துக்
கொண்டிருக்கிறார்.
*****
No comments:
Post a Comment