10 Aug 2026

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

திருவள்ளுவரின் காதல் சூத்திரங்கள்

சூத்திரம் – 1

வள்ளுவன் 18+

மின்னொளி பளீச்சிட்ட அந்த அரை வினாடி இடைவெளியில், அவளைப் பார்த்தேன்.

மழை பெய்து கொண்டிருந்த திருவாரூர், தியாகராஜர் கோயிலின் அருகே  இருந்த ஓட்டு வீட்டின் அருகே ஒற்றை ஆளாய் நின்றிருந்தாள்.

யார் இவள்?

தலையில் சுற்றியிருந்த நீல நிற துப்பட்டாவையும் மீறி, அந்த முகம் ஏதோ செய்தது.

மனிதப் பிறவிதானா?

அல்லது மழை இரவில் தவறி கீழே விழுந்த ஏதேனும் தேவகன்னியா?

மயிலின் சாயல் இருந்தது. ஆனால் தோகைக்குப் பதில் ஈரமான சுடிதார்.

காதில் அசையும் அந்தப் பெரிய ஜிமிக்கி. அது தங்கமா, கவரிங்கா என்று ஆராயும் அளவுக்கு என் மூளைக்குத் தெளிவில்லை.

மின்சாரத் தாக்குதலுக்கு ஆளானவன் போல என் கைவிரல்கள் ஆக்டிவாவின் ஆக்சிலேட்டரை இறுகப் பற்றிக்கொண்டன.

"ஹேய் ஜிமிக்கி பொண்ணே!" என்று மனம் முணுமுணுத்தது.

மார்புக்குள் இதயத்தின் படபடப்பு சட்டென்று அதிகரித்தது. நிஜமாகவே பயமாக இருந்தது.

இவள் தேவதையா?

மயக்கும் மோகினியா?

இல்லை வெறும் மனிதப் பெண்தானா?

தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிந்தது. என் நெஞ்சம் தன் கட்டுப்பாட்டை இழந்து, பித்தெடுத்து அலைபாயத் தொடங்கிவிட்டது.

அந்த மழையிலும் தெற்கு கோபுர வாசலில் போக்குவரத்து நெரிசல் புளிமூட்டையைப் போல இருந்தது. பின்னால் இருந்த வாகனங்களின் ஒலிப்பெருக்கிகள் காதைப் பிளந்தன.

என் ஆக்டிவா மெல்ல நகரத் தொடங்கியது. கண்ணாடியைப் பார்த்தேன். அவளது உருவம் மழையிலும், பின்னோக்கிச் செல்லும் வெளிச்சத்திலும் மெல்ல மறைந்தது.

அதற்கு மேல் என்னால் ஆக்டிவாவைச் செலுத்த முடியவில்லை.

ஆக்டிவாவை தகர சீட்டுகள் வேயப்பட்டிருந்து ஒரு கடையோரமாக ஓரங்கட்டி விட்டு, வண்டியின் சீட்டைத் திறந்தேன். உள்ளே இருந்த கைபேசியைக் கையில் எடுத்தேன். வழக்கமாக வாட்ஸ்ஆப்பையும், பேஸ்புக்கையும், இன்ஸ்டாவையும் தட்டும் விரல்கள், அன்று தானாகக் கூகுளில் தேடித் தட்டியது திருவள்ளுவரை.

குறள் எண் : 1081

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு."

இதே குழப்பம், இதே படபடப்பு, இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி அந்த ஆளுக்கும் வந்திருக்கிறது!

வள்ளுவர் பெருமூச்சு விட்டிருப்பார். எனக்கும் அதே பெருமூச்சு. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் எதுவும் மாறவில்லை.

நான் மீண்டும் கைபேசியை ஆக்டிவாவின் சீட்டைத் தூக்கி உள்ளே போட்டு விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்து ஆக்சிலேட்டரை முறுக்கினேன். மழை வலுக்கத் தொடங்கியது. வண்டியின் வேகத்தில் மழைநீர் அம்புகளைப் போல உடலைத் தாக்கத் தொடங்கின. உடல் தொப்பரையாக நனைந்தது.

உடலுக்குள் மழைநீரின் குளிர் நடுக்கம் மற்றும் வெளியே மழைக்காற்றின் ராட்சச குளிர். இந்த இரண்டையும் தாண்டி, வீடு வந்து சேரும் வரை நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று தகித்துக் கொண்டே இருந்தது.

-          சூத்திரங்கள் தொடரும்!

*****

No comments:

Post a Comment