அறத்தை விடுவதாவது, அப்பளத்தை உடைப்பதாவது - ஓர் அலசல்
"அறங்களைக் கைவிடுக... அதுதான் சரணாகதி."
என்கிறார் ஜெயமோகன்.
கேட்பதற்கு எவ்வளவு கம்பீரமாக, ஒரு பெரிய ஆன்மிக
பேரானந்தம் கொடுக்கிற மாதிரி இருக்கிறது பாருங்கள்! ஆனால், இதன் பின்னால் இருக்கும்
தத்துவார்த்த ஓட்டையை எதைக் கொண்டு அடைப்பது?
ஏனென்றால், அறங்களை நாம் கைவிடுவதாவது?
நாம் எப்போது அறத்தைக் கையில் வைத்திருந்தோம்,
அதைத் தூக்கிக் கீழே போடுவதற்கு? என்ற கேள்வியைத் தூர வைத்து விட்டு, நாம் இக்கருத்தியலைத்
தொடர்ந்தால், நாம் அடைவது எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
தத்துவம் என்ன சொல்கிறது?
"நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்"
என்பது ஒரு அற விதி.
ஆனால் பிரபஞ்சம் என்ன சொல்கிறது? "எனக்கு
கொசு விரட்டிக்கும் கொசுவுக்கும் வித்தியாசம் தெரியாது. பொத்தனைப் போட்டால் கொசு சாகும்,
அவ்வளவுதான்" என்கிறது.
அறத்தை விடுவது எளிது. ஆனால், கைவிட்டால் என்னாகும்?
ஹிட்லரும் அதையேதான் சொன்னார். "நான் பிரபஞ்ச விதியைத்தான் செய்கிறேன், பலவீனமானர்கள்
அழிய வேண்டும்" என்றார். அதற்குப் பெயர் சரணாகதி இல்லை, அராஜகம்.
மனிதர்கள் தங்களுக்கு வசதியாகச் சில தார்மீக
விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதைக் கைவிட்டு விட்டு உண்மையான அறத்தைக் கைக்கொள்ள
வேண்டும் என்பதுதான் சமய நூல்களின் விருப்பமாக இருக்குமே தவிர, எல்லா தர்மங்களையும்
கைவிடு என்பதன் உண்மையான அர்த்தம், "அப்பாடா! இனிமேல் போக்குவரத்து சிவப்புச்
சமிக்ஞையில் வண்டியை நிறுத்த வேண்டியதில்லை, அடுத்தவன் பையில் கையை வைக்கலாம், எல்லாவற்றையும்
கைவிடச் சொல்லிவிட்டார்கள்" என்று நமக்குத் தகுந்தபடி தர்மத்தைக் கழற்றி விடுவதாக
இருக்காது.
ஜெயமோகனின் கட்டுரை சொல்கிறது, "பிரபஞ்சத்தில்
நாம் ஒரு மணல்துகள். அந்தத் துகளின் தர்க்கம் பிரபஞ்சத்துக்குப் பொருந்தாது. அதனால்
சரணாகதி அடைவதே விடுதலை."
இது மிக உன்னதமான தத்துவமாகச் சிலருக்கு இருக்கலாம்.
ஆனால், நடைமுறையில் இந்தச் சரணாகதி என்பது மனிதனின் ஆகச் சிறந்த சோம்பேறித்தனம்.
ஒரு காரியத்தை ஒழுங்காகச் செய்து முடிக்கத்
துப்பில்லை என்றால், உடனே "எல்லாம் அவன் செயல், நான் வெறும் கருவி" என்று
சரணாகதி பதாகையை மாட்டிவிடுவது எப்படி நியாயமாகும்?
தேர்வுக்குப் படிக்காமல் போய் விட்டு,
"நான் பிரபஞ்சப் பெருவெளியில் ஒரு தூசி, மதிப்பெண் என்பது மாயை" என்று தத்துவம்
பேசுவது எப்படி ஏற்புடையதாகும்?
பாதர் பெனெடிக்ட் சொன்ன, "நான் நீதியைக்
கேட்பதில்லை, என்னை ஒப்படைக்கிறேன்" என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார் ஜெயமோகன்.
தத்துவார்த்த ரீதியாகப் பார்த்தால், இது அதிமேதாவித்தனம். நீதி என்று நீதிமன்றத்துக்குப்
போனால் அங்கே சாட்சிகள், குறுக்கு விசாரணை என்று தலைவலி வரும். அதுவே சரணாகதி ஆகிவிட்டால்,
எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. "இறைவா, நீயே பார்த்துக்கொள்"
என்றுவிட்டு அறைக்குள் போய் கேண்டி க்ரஷ் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், அதற்கு
ஏ.எஸ்.ஆர். சாரி போன்ற வக்கீல்களைப் பெறும் கொடுப்பினை இருக்க வேண்டும்.
காட்டில் புழுவை பறவை தின்கிறது, அங்கே கருணை
இல்லை என்று கட்டுரை கேட்கிறது. உண்மைதான். காட்டில் புட் செயின் இருக்கிறது. மனிதனிடம்
செயின் ஸ்னாட்சிங் இருக்கிறது. இரண்டையும் ஒன்றாக்க முடியுமா?
கட்டுரையில் காட்டில் சிங்கம் மானைச் சாப்பிடுவதாகவும்,
அதனால் அங்கே ஏது அறம் என்ற கேள்வி எழுப்பப்டுகிறது. நியாயமான கேள்விதான். ஆனால், நாம்
இன்னும் காட்டில் மரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கவில்லையே. ஹோமோ சேப்பியன்ஸ் என்று
நமக்கென்று ஒரு மென்பொருளை நிறுவியிருக்கிறோமே. அதற்குப் பெயர்தான் சமூகம்.
காட்டில் சிங்கம் மானைச் சாப்பிட்டால் அது
உணவுச் சங்கிலி. ஆனால், நாட்டில் மனிதன் மனிதனைச் சாப்பிட்டால் அது கொலைக்குற்றம்.
காட்டுக்கு அறம் தேவையில்லை, ஏனென்றால் அங்கே நீதிமன்றம், காவலர்கள், ரேஷன் அட்டை எதுவும்
கிடையாது. ஆனால், மனிதருக்கும் அறம் தேவையில்லை என்றால், நாளைக் காலையில் உங்கள் வீட்டில்
காணாமல் போன வாகனத்தைத் திருடிக் கொண்டு போனவன், பிரபஞ்ச விதி, சரணாகதி என்றெல்லாம்
சொல்வான். ஏன், ஜெயமோகன் கட்டுரையைத் திருடி எழுதியவன் கூட அதைச் சொல்லலாம். அதை அவரால்
ஏற்க முடியுமா?
விலங்குகளுக்குப் பகுத்தறிவு இல்லை, அதனால்
அவை அறத்தை உருவாக்கவில்லை. மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது, அதனால் அவன் அறத்தை
உருவாக்கினான். பின்பு அதை எப்படி மீறலாம் என்று வழியையும் கண்டுபிடித்தான் என்பது
வேறு விடயம்.
அறங்களை முழுமையாகக் கைவிடுவது என்பது, ஒரு
கணினியின் இயக்க மென்பொருளை முற்றிலும் அன் இன்ஸ்டால் செய்வது மாதிரி. அதைச் செய்துவிட்டால்
நீங்கள் ஜீவன் முக்தர் ஆகிவிட மாட்டீர்கள்; வெறும் ஹேங் ஆன கணிப்பொறி மாதிரிதான் உட்கார்ந்திருக்க
வேண்டும்.
இதற்கு மேல் என்ன சொல்வது?
காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை, வாய்ப்பு
கிடைக்கும்போதெல்லாம் அடுத்தவனை ஏமாற்றத் துடிக்கும் ஒரு மனிதன், "நான் தத்துவார்த்த
ரீதியாக அறங்களைக் கைவிட்டுவிட்டேன், இப்போது சரணாகதி நிலையில் இருக்கிறேன்" என்று
சொன்னால், அவனைப் போலீஸ் லாக் அப்பில் வைத்துத்தான் தத்துவ விசாரணை நடத்த வேண்டும்!
ஆகவே,
பிரபஞ்சம் ரொம்பப் பெரிதுதான். நாம் அதில்
ஒரு சின்னப் புள்ளிதான். அதுற்காக, நான் சின்னப் புள்ளி, அதனால் சாலையில் விதிகளை மதிக்க
மாட்டேன், வண்டியைக் கண்டபடி ஓட்டுவேன், பிடிக்கவில்லை என்றால் கொலை செய்வேன் என்று
சொல்ல முடியுமா?
கடவுள் பெரியவராக இருக்கலாம், பிரபஞ்சம் விசித்திரமாக
இருக்கலாம். ஆனால், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால், அறம் என்கிற ஒளிவிளக்கு வேண்டும்.
பிரபஞ்ச இருட்டில் அந்த ஒளி விளக்கை அணைத்து விட்டால் அப்புறம் இருட்டுதான். அதனால்,
அறங்களை எப்போதும் கைவிடக் கூடாது. கைவிட்டால், நாம் வெறும் சதைப்பிண்டங்கள்தான்!
*****

No comments:
Post a Comment