20 Jun 2026

ரௌடியிஸத்திற்கு அடிக்கப்பட்ட கிளாமர் பெய்ண்ட்!

சீரழித்த சினிமா – 18

போக்கிரி

ரௌடியிஸத்திற்கு அடிக்கப்பட்ட கிளாமர் பெய்ண்ட்!

இரண்டாயிரத்து ஏழு, ஜனவரி மாதம். தமிழ்ச் சமூகத்தின் பகுத்தறிவு ஐ.க்யூ  பூஜ்ஜியத்துக்கு இறங்கிய புண்ணிய தினம். சட்டம், ஒழுங்கு எல்லாவற்றிற்கும் பை பை சொல்லிவிட்டு, தியேட்டர் வாசலிலேயே குழி தோண்டிக் கொண்டாடினார்கள் தமிழர்கள்.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய போலீஸ்காரர்கள் சீருடை அணிந்து, சட்டத்தின்படி குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு அண்டர்கவர் போலீஸ் அதிகாரி நினைத்தால், ரவுடி போலத் தலைமுடியை வளர்த்துக்கொண்டு, ரௌடியிஸத்தை பாபுலரிசம் போலவும், கூலிப்படைத் தலைவன் போலவும் ஊர் சுற்றலாம்; பணத்திற்காக என்று காரணம் சொல்லி யாரையும் போட்டுத் தள்ளலாம், என்ற ஒரு புதுவிதமான யூனிபார்ம் இல்லாத வக்கிர அத்துமீறலைத்  தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை, மைக்கேல் ஜாக்ச நடன இயக்குநரின் இயக்கத்தில் வெளியான போக்கிரி திரைப்படத்திற்கு உண்டு.

நாயகனின் அலட்சியமான, அதேசமயம் ஆபத்தான சண்டியர் பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பின்னணி இசையும், நாயகியின் ஏமாளிப் பாத்திரமும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு லோக்கல் மார்க்கெட் நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இந்தப் படம் தமிழ்நாட்டு யூத்களுக்குச் சொல்லிக் கொடுத்த அட்வான்ஸ்டு சிவிக்ஸ் லெசன் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்க வேண்டும் என்றால், உங்களுக்குச் சட்ட புத்தகங்களோ அல்லது காவல் நிலையங்களோ தேவையில்லை. ரவுடியிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, அவனது எதிரிக் கும்பலைக் கொடூரமாகத் தீர்த்துக் கட்டினால் போதும்; நீங்கள் தான் டாப் க்ளாஸ் சிபிசிஐடி ஆபீசர்!

எப்ப அடிச்சான், எப்புடி அடிச்சான்னு தெரியக்கூடாது. அடிச்சா இடிமாதிரி இருக்கணும், என்ற ஒற்றை வரி தத்துவத்தின் மூலம், சட்டம் ஒழுங்கு என்ற அற்பமான விஷயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஒரு அதிகாரி சட்டத்தைக் கையில் எடுத்து எத்தனை கொலைகள் செய்தாலும், க்ளைமாக்ஸில் யூனிபார்ம் மாட்டிக்கொண்டு சல்யூட் அடித்தால் போதும், அவனது அத்தனை அராஜகங்களும் புனிதமானவை என்று தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் வன்முறையைக் கையில் எடுக்கும் ரவுடித்தனத்தை மாஸ் என்று நினைத்துக்கொண்டு, போக்கிரி பாணியில் சுற்றும் ஒரு முதிர்ச்சியற்ற வால்களின் ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஹீரோ ஹீரோயினை லிப்ட்டுக்குள் வைத்தும், நடுத்தெருவில் வைத்தும் மிரட்டுவது போலவும், வம்புக்கு இழுப்பது போலவும் காட்சிகள் இருக்கும். ஒரு பெண் பயந்து நடுங்கும்போது, அவளது பயத்தைப் போக்கத் துணியாமல், அவளது பயத்தையே தன் காதலுக்கான முதலீடாக மாற்றும் வக்கிரத்தை இத்திரைப்படம் மாஸாகக் காட்டியது.

ஆனால் கூர்ந்து கவனித்தால், அது காதல் அல்ல; அது ஓர் ஆதிக்க மனோபாவம். ஒரு ஆண் ரவுடியாக இருந்தாலும், அவன் தன்னைக் காப்பாற்றுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக, அவன் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் பொறுத்துக்கொண்டு அவனையே காதலிக்க வேண்டும் என்ற ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் மனநிலையை இது பெண்களிடமும், ஆண்களிடமும் விதைத்தது.

வழக்கமான கமர்ஷியல் பாணியில் நாயகி என்ற கதாபாத்திரம், ஏதோ ஹீரோவின் அடிதடி சாகசங்களைப் பார்த்து விசிலடிப்பதற்கும், பாடலுக்குக் கிளாமராக ஆடுவதற்கும் மட்டுமே பயன்படும் ஒரு பொருளாகக் காட்டப்பட்டது. நாயகிக்கு என்று தனியாக வேலை, குடும்பப் பிரச்சினைகள் இருந்தாலும், ஹீரோவின் துப்பாக்கிச் சத்தங்களுக்கு நடுவே அய்யோ அம்மா என்று கத்திக்கொண்டே அவனது பின்னால் ஓடுவதுதான் அவளது முழுநேர வேலையாகச் சுருக்கப்பட்டது.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, சுய புத்தியோ இல்லாதவள்; அவளை யார் ரவுடிகளிடமிருந்து காப்பாற்றுகிறானோ, அவன் எவ்வளவு பெரிய பொறுக்கியாக இருந்தாலும் அவனுக்குத் தன் வாழ்க்கையையே தாராளமாகத் தந்துவிட வேண்டும் என்ற ஆணாதிக்க வக்கிரத்தை இத்திரைப்படமும் மிக நளினமாகப் பட்டுவாடா செய்தது. அத்துடன் பெண்களை வெறும் குத்துப் பாடல்ககளுக்கும், ஹீரோவின் சாகசங்களை வாய்பிளந்து பார்ப்பதற்கும் மட்டுமேயான ஒரு காட்சிப் பொருளாக மாற்றியது.

ஒருவாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்கமாட்டேன், என்று நாயகனைப் பேச வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தமிழனின் மூளையையும் ரீசார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு அடியோடு சீரழித்துதான் இத்திரைப்படத்தின் ஆகக் சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இந்த வசனத்தைத் தத்துவார்த்தமாக அலசினால் எஞ்சுவது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? இந்த ஒரே ஒரு வசனம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தங்களுக்குள் இரண்டு பிரிவாகப் பிரித்தது. முடிவு செய்யும் நான் ஒருவன், தன் பேச்சைத் தானே கேட்க மறுக்கும் நான் இன்னொருவன். ஆக எனக்குள் நான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ள முடியாது. எனக்குள் நானும் இன்னொருவனும் என்ற மனச்சிதைவைத்தான் நீங்கள் குறிப்பிட வேண்டியிருக்கும்.

மருத்துவம் மற்றும் நரம்பியல் ரீதியாக நோக்கினாலும் இது ஓர் ஆபத்தான நிலைதான். மனித மூளையின் முன் பகுதிதான் முடிவுகளை எடுக்கும். எடுத்த முடிவைச் செயல்படுத்துவது நரம்பு மண்டலம். ஒருவன் தன் பேச்சைத் தானே கேட்க மறுக்கிறான் என்றால், அவனுடைய முன்மூளைக்கும் பின்மூளைக்கும் இடையே ஏதோ வயர் கட் ஆகியிருக்கிறது என்று அர்த்தம். ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டின் நரம்பியல் சமநிலையை அந்த ஒரே ஒரு வசனம் காலி செய்துவிட்டது.

போக்கிரிக்கு முன், போக்கிரி என்றால் ரவுடி. போக்கிரி என்ற இப்படத்திற்குப் பின், போக்கிரி என்றால் அது ஒரு ஸ்டைல் என அகராதிகள் கதறும் அளவுக்கு நிலைமை மாறியது.

போக்கிரி பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, நாயகனின் வசூல் சக்கரவர்த்தி பிம்பத்தை மீண்டும் இமயமலையில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

காவல்துறை அதிகாரிகள் என்பவர்கள் ரவுடிகளோடு சேர்ந்து கள்ளச்சந்தையில் சுற்றும் சண்டியர்கள் என்றும், டிராக் மாறிக் கொலைகள் செய்வதே ஹீரோயிசம் என்றும், பெண்களை மிரட்டிக் காதலிப்பதே வாலிபத்தின் ஆகச்சிறந்த பொழுதுபோக்கு என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற போக்கிரிச் சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment