21 Jun 2026

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

சீரழித்த சினிமா – 19

மங்காத்தா

ஆன்டி ஹீரோக்களின் எழுச்சியும் வில்லனை ரசிக்கும் ஜீன்களும்

இரண்டாயிரத்து பதினொன்றாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த அறநெறியும், ஒழுக்க விழுமியங்களும் பணம் என்ற ஒற்றைச் சொல்லுக்கு முன்னால் மண்டியிட்டு, படுபாதாளத்தில் வீழ்ந்தன.

தமிழ் சினிமா அதுவரை காப்பாற்றி வந்த ஹீரோ என்பவன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும், என்ற எழுதப்படாத விதியை உடைத்து, ஒரு முழுநேரக் குற்றவாளியைத் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த ரோல் மாடலாக மாற்றிய உன்னதத் திரைப்படம்தான் மங்காத்தா.

ஹாலிடே பாணி இயக்கமும், நாயகனின் சால்ட் அண்ட் பெப்பர் பிம்பமும், அமானுஷ்ய தீம் இசையும் சேர்ந்து, தமிழர்களின் பொதுப்புத்தியை எப்படி சூதாட்டக் கிளப் மட்டத்திற்குச் சீரழித்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம் என்ன தெரியுமா?

நீங்கள் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய போலீஸ் அதிகாரியாக இருந்தாலும், சஸ்பெண்ட் ஆன பிறகு பணத்திற்காக எந்தக் கொடூரமான குற்றத்தையும் செய்யலாம். துரோகம் செய்வது, கூட இருப்பவனைக் கொல்வது, சூதாடுவது எல்லாமே கெத்துதான். இப்படியாக, இங்க நல்லவனா இருந்தா வாழ முடியாது என்று வில்லத்தனத்திற்கான புனித அங்கீகாரத்தை வழங்கியதுதான் மங்காத்தா செய்த ஆகச் சிறந்த வாழ்வியல் பாடம்.

படத்தில் வரும் நாயகன் ஓர் ஆண்டி ஹீரோ கூட அல்ல; அந்நாயகன் ஓர் அப்பட்டமான வில்லன். ஆனால், சினிமா அந்த வில்லத்தனத்திற்கு ஸ்டைல், ஆளுமை, கம்பீரம் என்ற போலி முலாம் பூசி ஒரு ரட்சகனாகக் கொண்டாடியது.

நான் எவனுக்கும் நல்லவன் கிடையாது, எனக்குப் பணம் மட்டும்தான் முக்கியம் என்று நாயகன் பேசும் வசனத்தைக் கேட்டுத் திரையரங்கில் விசில் அடித்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையிலும் நேர்மை, நாணயம், தர்மம் போன்ற நற்பண்புகளை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினான்.

இத்திரைப்படத்தின் மையக்கதையே கிரிக்கெட் பெட்டிங் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்பதுதான். உழைத்து வாழும் நடுத்தர வர்க்கத் தமிழனை, ஒரே நாளில் குறுக்கு வழியில் கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்ற பேராசைப் போதைக்குள் தள்ளியது இத்திரைப்படம்.

நெற்றியில் வியர்வை சிந்தி உழைப்பது முட்டாள்தனம், எவனையாவது ஏமாற்றிப் பணத்தைப் பறிப்பதுதான் புத்திசாலித்தனம் என்ற விசித்திரமான நுகர்வோர் கலாச்சார நச்சை இது இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.

விளைவு?

ஆன்லைன் சூதாட்டங்களிலும், போலிப் பணப் பரிவர்த்தனைகளிலும் சிக்கி தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைப்பதற்குக் தத்துவார்த்த ரீதியான பிள்ளையார் சுழி போட்டது இந்த மங்காத்தா மனோபாவம்தான்.

படத்தில் நாயகி ஒரு பெரிய தொழிலதிபரின் மகள். அவளை நாயகன் காதலிப்பது எதற்காக? அவளது குணத்திற்காகவோ அல்லது அழகுக்காகவோ அல்ல; அவளது தந்தையின் பணப் பெட்டியை நெருங்குவதற்காக மட்டும்தான். காதலைக் கூட ஒரு வணிகத் திட்டமாக மாற்றி, பெண்களைத் தங்களின் சுயநலப் பேராசைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்தப் படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

பெண்களை மதிப்பதை விடுத்து, அவர்களைத் தங்களின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கான ஒரு வெறும் பகடைக்காயாக மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலப் புத்தியை இத்திரைப்படம் காதலின் பெயரால் இளைஞர்களிடம் விற்றது.

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் துரோகம் செய்து கொள்வார்கள். கூட இருப்பவனை எப்போது வேண்டுமானாலும் முதுகில் குத்தலாம், பணம்தான் இறுதி வெற்றி என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ் கற்றுத்தரும் பாடம்.

நட்பு, கூட்டுழைப்பு, பரஸ்பர நம்பிக்கை போன்ற சமூகக் கட்டமைப்பின் அத்தியாவசிய விதிகளைக் கேலிக்கூத்தாக்கிவிட்டு, தனிமனித சுயநலமே பிரபஞ்சத்தின் விதி என்ற பாசிசச் சிந்தனையைத் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாகப் பதியவைத்தது மங்கத்தா.

மங்காத்தா திரைப்படம் அப்பட நாயகனின் ஐம்பதாவது திரைப்படமாகப் பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்திருக்கலாம், அந்த ஹாலிடே பாணி இயக்குநருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

தமிழக நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்கவியல் கோட்டையை ஒற்றைக் கையால் தகர்த்தெறிந்த பெருமை மங்காத்தா திரைப்படத்திற்கு உண்டு. வழக்கமாக, நல்லவன் வாழ்வான், கெட்டவன் நாசமாய்ப் போவான், என்ற கோடம்பாக்கத்து நாஸ்டால்ஜியா பார்முலாவை, தியேட்டர் வாசலில் வைத்தே கொளுத்திவிட்டு, கெட்டவன் வாழ்வான், மிகக் கெட்டவன் இன்னும் சூப்பராக வாழ்வான் என்ற புதுமொழியை இது விதைத்தது.

நல்லவனாக இருப்பது கஷ்டம் என்பதை விட, கெட்டவனாக இருப்பது எவ்வளவு கூல் என்பதை மிக நேர்த்தியாக மார்க்கெட்டிங் செய்தது மங்காத்தா. ஒழுக்கம் என்பது ஓர் ஆடை என்றால், அதை அவிழ்த்து எறிவதே சுதந்திரம் என்று இளைஞர்கள் நம்பத் தொடங்கியது இத்திரைப்படத்திற்குப் பின்புதான்.

சூதாடினால் குடும்பம் அழியும் என்ற பழைய சினிமாவின் போதனை சோதனைக்குள்ளாகி, சூதாடினால் 500 கோடி கிடைக்கும், அதை வைத்து பாரின் போகலாம் என்பது புதிய சினிமாவின் மில்லேனிய சாதனை போதனையானது. அத்துடன் யாரையும் நம்பாதே, உன்னையும் சேர்த்து என்ற நச்சுப் பார்வை நடுத்தர வர்க்க நட்புகளுக்குள் மெல்லப் பரவியது ஓர் அவலச் வேதனையானது.

இதன் காரணமாக ஐபிஎல் மேட்ச் நடக்கும்போது டிவி முன்னால் உட்காரும் ஒவ்வொரு டீன் ஏஜ் பையனின் மனதிலும் ஒரு மினி மங்காத்தா நாயகன் பிறப்பெடுத்தான். உழைத்து வாழும் தத்துவம், ஒரே மேட்ச்சில் லைப் செட்டில் என்ற பேராசையிடம் மண்டியிட்டது.

இப்படம் மூன்று புதிய விதிகளை இளைஞர்களின் மனதில் எழுதியது. விதி 1: பணம் முக்கியம். விதி 2: அந்தப் பணத்தைப் பெற யார் கழுத்தையும் அறுக்கலாம். விதி 3: விதி 1 மற்றும் விதி 2ஐ ஸ்டைலாகச் செய்ய வேண்டும். இந்த மூன்று விதிகளையும் எடுத்துக் கொண்ட இளைய சமூகம் அதாவது, துரோகம் என்பது ஒரு கலை, அதைச் சரியாகச் செய்தால் ஜெயிப்பாய் என்று நம்பத் தொடங்கியது.

குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதைக் கெத்து என்றும், துரோகம் செய்வதைப் புத்திசாலித்தனம் என்றும், சட்டத்தையும் ஒழுக்கத்தையும் மதிக்காமல் வாழ்வதே அல்டிமேட் வாழ்க்கை என்றும் நம்பிய ஒரு ஸ்டைலிஷான, முதிர்ச்சியற்ற சூதாட்ட சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment