19 Jun 2026

நள்ளிரவு பிரியாணியும் நாற்பது கிலோ துப்பாக்கியும்!

சீரழித்த சினிமா – 17

விக்ரம் (2022)

நள்ளிரவு பிரியாணியும் நாற்பது கிலோ துப்பாக்கியும்!

இருபத்தோராம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகள் முடியும் தருவாயில், தமிழ்ச் சமூகம் தன் சிந்திக்கும் திறனையும் ரசனைத் திறனையும் ஒட்டு மொத்தமாகத் திரையரங்கு வாசலிலேயே அடகு வைத்துவிட்டு, எல்சியூ என்ற ஒற்றைப் மாய உலகிற்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்டது.

நாயகனின் முதிய வயது மாஸ் பிம்பமும், காது ஜவ்வு கிழியும் பிஜிஎம்மும், கமர்ஷியல் நடிகர்களின் கண்கள் பிதுங்கும் நடிப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையில் நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் லட்சக்கணக்கான தோட்டாக்களை நடுரோட்டில் சுட்டுத் தீர்க்க வேண்டும் என்ற ஆபத்தான பாசிச நச்சை இந்த விக்ரம் எப்படி விதைத்தது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த சமூகப் பாடம் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு போதைப்பொருள் இல்லாத உலகத்தை உருவாக்க விரும்பினால், சட்டத்தையோ, நீதிமன்றத்தையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவையோ நம்பக் கூடாது. ஒரு பழைய ஏஜென்டை கூட்டி வந்து, கள்ளச்சந்தையில் விற்கப்படும் ஆகச்சிறந்த பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கொண்டு ஊரிலிருக்கும் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும்.

படத்தில் வரும் நாயகன், நாட்டின் பாதுகாப்பிற்காக உழைத்த முன்னாள் அதிகாரி. ஆனால், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் வேகம் இருக்கிறதே. அது எந்த ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கும் குறைவானது அல்ல. நோக்கம் நன்றாக இருந்தால், நீங்கள் எந்த ஒரு கட்டடத்தையும் வெடிவைத்துத் தகர்க்கலாம்; அது தப்பில்லை என்ற அராஜகச் சிந்தனையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.

படத்தின் ஆகச்சிறந்த கலாச்சாரப் பங்களிப்பு என்றால், வில்லன் கதாபாத்திரத்தை இச்சமூகம் கொண்டாடிய விதம்தான். வாயில் ஏதோ ஒரு போதை மாத்திரையைப் போட்டுக் கொண்டு, அந்த வில்லன் பாத்திரம் செய்யும் அமானுஷ்ய அட்ராசிட்டியைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பிம்பமாக மாற்றிக் கொண்டாடினர்.

கொலையையும், சித்திரவதையையும், போதைப்பொருள் கடத்தலையும் ஒரு கெத்து வடிவமாக மாற்றிக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு ஒருவித வக்கிரமான சுவாரசியத்தைத் தந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் வன்முறையையும் குரூரத்தையும் பார்த்து அருவருப்படைய வேண்டிய இளைஞர்கள், சந்தானம் பாய்ஸ் என்று தங்களைக் கற்பனை செய்துகொண்டு, வக்கிரங்களை ரசிக்கும் ஒரு மூர்க்கமான பொதுப்புத்தியை வளர்த்துக்கொண்டனர்.

படத்தின் கிளைமாக்ஸில் வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வரும் ரோலக்ஸ்  கதாபாத்திரம் தமிழ்நாட்டிற்குச் செய்த உபகாரம் அளப்பரியது. கத்தியால் ஒருவனின் தலையைச் சீவிவிட்டு, ரத்தம் வழிய வழிய வந்து நிற்கும் ஒரு சர்வதேசக் கடத்தல்காரனைத் திரையரங்கில் ஒட்டுமொத்தத் தமிழனும் எழுந்து நின்று கைகொட்டி வரவேற்றான்.

அறிவையும், சுயசிந்தனையையும் வளர்த்துக்கொண்டு சமூகத்திற்குப் பயன்பட வேண்டிய வயதில், தமிழ்நாட்டு வாலிபர்கள் பலரும் தங்களை ஒரு ரோலக்ஸ் ஆகக் கற்பனை செய்துகொண்டு, கைல காசு, வாயில தோட்டா என்று போஸ்டர் அடித்துத் திரியத் தொடங்கினர். ஒரு தனிமனிதனின் மாஸ் பிம்பத்திற்காக, ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த அறநெறியும் படுபாதாளத்தில் தள்ளப்பட்டது.

பெரும்பாலான கமர்ஷியல் படங்களைப் போலவே, இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகக் குறைவு. ஒன்று அவர்கள் வில்லனால் கொடூரமாகக் கொல்லப்பட வேண்டும் இல்லையென்றால் ஹீரோவின் குடும்பத்தைக் காப்பாற்றும் ஒரு வெறும் பரிதாபப் பொருளாக இருக்க வேண்டும்.

பெண்களின் ஆளுமையையோ, அறிவுத்திறனையையோ காட்டுவதை விடுத்து, ஆண்களின் பழிவாங்கும் வெறிக்குத் தீனியாக அவர்களைக் கொலைக்களத்தில் பலியிடுவதையே இத்திரைப்படம் தன் திரைக்கதை உத்தியாகக் கொண்டது.

விக்ரம் பாக்ஸ் ஆபீஸில் 400 கோடிகளைக் குவித்து, உலக நாயகனைத் தமிழ் சினிமாவின் பிரபஞ்ச நாயகனாக மீண்டும் அரியணையில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

அறுபது வயது முதியவர் ஒருவர், நூறு கிலோ எடையுள்ள இயந்திரத் துப்பாக்கியை ஒற்றைக் கையில் தூக்கிக்கொண்டு சுடுகிறார் என்றால், நியூட்டனின் மூன்றாவது விதிப்படி அவர் பின்னோக்கிப் போய் விழுந்திருக்க வேண்டும். அதைத் தனி ஒருவராகத் தூக்க முடியாது என்பதும் அது போர்க்கப்பல்களில், போர் விமானங்களில், கவச வாகனங்களில் பயன்படுவது என்பதும் வேறு விசயம். ஆனால், தூக்கியது உலகநாயகன் என்பதால் என்பதால் புவியீர்ப்பு விசையும், இயற்பியல் விதிகளும் கேள்விக்குறியாகி ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரிக்கே சாவல் விட்டன. இப்படி ஓர் அஞ்ஞானக் கோதாவில் பேரக் குழந்தைகளுக்குக் கதை சொல்ல வேண்டிய தாத்தாக்களை ரகசிய அறையில் கெத்தாகத் தீபாவளி துப்பாக்கித் துடைக்க வைத்ததுதான் விக்ரம் உருவாக்கிய சூடோ சயன்ஸ் நான்சென்ஸ்.

நெடுங்காலமாக கத்தி என்பது மனிதனை நாகரிகமாக மாற்றுவதற்குப் பயன்பட்ட ஓர் எளிய சாதனம், காய்கறி நறுக்க, அறுவை சிகிச்சை செய்ய, சவரம் செய்ய என்று. அந்த ஜெய்பீம் நாயகன் ரோலக்ஸ் ஆக வந்து, ஒரு சவரக் கத்தி போன்ற ஒரு கசாப்பு கத்தியை வைத்துக் கொண்டு அநாயசமாகத் தலையைச் சீவிய பிறகு, இப்போதெல்லாம் சலூன் கடைகளில் ஒரு நிசப்தம் உலவுகிறது. கசாப்புக் கடை கத்திகளுக்கும் ஒரு தட்டுபாடு நிலவுகிறது.

இப்படி ஒரு தாத்தாவுடன் அந்தப் பேரக் குழந்தை வளர்ந்தால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள். 2035இல் அந்தக் குழந்தை வளர்ந்து எட்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு வாத்தியார் ஹோம்வொர்க் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். பையன் மெதுவாகப் பையிலிருந்து பேனாவை எடுப்பதற்குப் பதிலாகத், தாத்தா கொடுத்த விக்ரம் ஸ்பெஷல் துப்பாக்கியை எடுத்தால். வாத்தியாரின் கதி? இது அமெரிக்காவில் சர்வ சாதாரணம் என்பதற்காக இந்தியாவிலும் அப்படி ஆக வேண்டுமா என்ன? அந்த அளவுக்கு ஒரு துப்பாக்கிக் கலாச்சாரத்தை விதைத்ததுதான் விக்ரம் செய்த அறுவடை.

தமிழ்நாட்டின் அத்தனை ரவுடிகளையும், போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் ஒரே பிரபஞ்சத்துக்குள் கொண்டு வந்து ஒரு புதிய சாதனை படைத்த எல்சியூவினால் பாதிக்கப்பட்ட தமிழன் அடுத்தடுத்து புதுப்புது கடத்தல் வில்லன்களையும் போதைப் பொருள் மாபியாக்களின் விசித்திர நடமாட்டத்தையும் தேடி கோலம்பஸ் போல ஓட ஆரம்பித்தான்.

சட்டத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் கேலிக்கூத்தாக்கிவிட்டு, உணர்ச்சிவசப்பட்டுப் பீரங்கிகளைத் தூக்குவதே ஆகச்சிறந்த வீரம் என்றும், போதை உலக தாதாக்களை ஆராதிப்பதே நாகரிகம் என்றும் நம்பி ஒரு எல்சியூ போதைக்கு அடிமையான சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment