18 Jun 2026

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

சீரழித்த சினிமா – 16

பாட்ஷா

ஆட்டோ மீட்டரும் அடியாட்கள் தியரியும்!

பாட்ஷாலஜி – ஒரு மாஸ் மசாலா சதி!

தொண்ணூறுகளின் மத்தியில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தப் பொதுப்புத்தியும், பகுத்தறிவும் ஒரே ஒரு ஆட்டோவின் மீட்டருக்குப் பின்னால் கட்டப்பட்டு, படுபாதாளத்தில் வீசப்பட்டது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சீரழிவை அரங்கேற்றிய உன்னதத் திரைப்படம் 1995 இல் வெளியான பாட்ஷா.

அதிரடி இயக்கமும், உச்ச நட்சத்திர நாயகனின் அமானுஷ்ய மாஸ் பிம்பமும், நாயகனுக்கான பிஜிஎம்மும் சேர்ந்து, தமிழர்களின் மூளையில் நிழல் உலக தாதாதான் உண்மையான கடவுள், என்ற ஆபத்தான நச்சை எப்படி நளினமாக ஏற்றியது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இன்றுவரை தமிழ்நாட்டின் முச்சந்திகளிலும், பள்ளிக்கூடப் பெஞ்சுகளிலும், அரசியல் மேடைகளிலும் தட்டப்படும் ஆகச்சிறந்த தத்துவ வசனம் என்னவென்றால், ஒரு தடவை சொன்னா அது நூறு தடவை சொன்ன மாதிரி. என்னவோ இம்போஷிஷன் எழுதவன் பயந்தது போல உரைக்கப்பட்ட இந்த வசனம் தமிழர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த ஜனநாயக் கல்வி என்ன தெரியுமா? தலைவன் என்பவன் விவாதங்களுக்கு அப்பாற்பட்டவன். அவன் ஒரு முறை உளறினாலும், அதை நீங்கள் நூறு முறை ஆராயாமல் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சுயசிந்தனையோ, கேள்விகள் கேட்கும் முதிர்ச்சியோ இல்லாத ஓர் ஆட்டுக்குட்டி சமூகத்தை உருவாக்க இந்த ஒரே ஒரு வசனம் போதுமானதாக இருந்தது. ஒரு மனிதன் தன் வாதத்திற்கு நியாயமான காரணங்களைச் சொல்வதை விடுத்து, நான் சொல்லிட்டேன், அவ்வளவுதான் என்ற சர்வாதிகாரப் புத்தியை நிஜ வாழ்க்கையில் கையாள்வதற்கு இந்த பாட்ஷா தியரிதான் ஊக்கமருந்து.

படத்தில் வரும் நாயகன் வெறும் ஆட்டோக்காரர் அல்ல; அவர் பம்பாயை ஆட்டிப்படைத்த தாதா. ஆனால், சினிமா அவரை எப்படிச் சித்தரிக்கும்? ஏழைகளுக்குப் பணம் கொடுப்பவர், நண்பனுக்காகக் கொலை செய்பவர், தங்கைகளின் திருமணத்திற்காகத் தன் கடந்த காலத்தை மறைத்து வாழும் ஒரு தியாகச் செம்மல்.

ஒரு குற்றவாளியை அவனது ரத்தக் கறை படிந்த குற்றப் பின்னணியில் இருந்து பிரித்து, அவனுக்குப் பின்னால் இருக்கும் குடும்பப் பாசம் என்ற சென்டிமென்ட் போர்வையைப் போர்த்தி, உருக வைத்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகப்பெரும் கமரஷியல் தந்திரம்.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் ஏரியாவில் கஞ்சா விற்கும் ரவுடியையும், மாமூல் வாங்கும் தாதாவையும் அண்ணன். வெளியில அப்படி இருந்தாலும், தங்கச்சின்னா அவனுக்கு உசிருப்பா, கஷ்ட நஷ்டம்ன்னு தெரிஞ்சா ஓடி வந்து உதவுவாருப்பா, என்று நியாயப்படுத்தத் தொடங்கினான்.

படத்தில் பாட்ஷாவின் தங்கைக்கு ஒரு பிரச்சினை என்றாலோ, அல்லது வில்லனின் ஆட்கள் வருகிறார்கள் என்று தெரிந்தாலோ, பாட்ஷா போடும் முதல் உத்தரவு, உள்ளே போ என்பதுதான். பெண்கள் வீட்டின் நான்கு சுவருக்குள்ளே பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்கள், அவர்களுக்குப் பிரச்சினை வந்தால் வெளியில் இருக்கும் ஆண் தான் அதைத் தன் தசைகளைக் கொண்டு தீர்க்க வேண்டும் என்ற நிலப்பிரபுத்துவ சிந்தனையை இந்தப் படம் மிக கம்பீரமாக விற்றது.

பெண்ணின் சுயசார்பு, அவளது தைரியம் அனைத்தையும் மழுங்கடித்து, அவள் எப்போதும் ஆணின் நிழலில் வாழும் ஒரு பலவீனமானப் பொருள் என்ற பொதுப்புத்தியை இன்றும் பல குடும்பங்களில் இந்த பாட்ஷா பாணி வளர்ப்பு முறைதான் தக்கவைத்திருக்கிறது.

படத்தில் வரும் வில்லன் செய்யும் அநியாயங்களை ஒடுக்க, இந்திய அரசாங்கமோ அல்லது காவல்துறையோ வராது. பாட்ஷா தன் சொந்தக் கூலிப்படையை வைத்துக் கொண்டுதான் அவரோடு சண்டை போடுவார். சட்டம் என்பது ஏழைகளைக் காப்பாற்றாத ஒரு வெற்றுப் காகிதம்; நிழல் உலக தாதாக்கள்தான் உங்களுக்கான ஒரே ரட்சகர், என்ற ஆபத்தான சிந்தனையைத் தமிழர்களின் மூளையில் ஆழமாக நட்டது இந்தப் பாட்ஷா.

விளைவு?

ஒரு சாதாரண மனிதன், தன் கடந்த காலக் கிரிமினல் வரலாற்றை மறைத்துக்கொண்டு, ஆட்டோ ஓட்டுநராக வாழ்வதுதான் இத்திரைப்படத்தின் கதை. கேட்பதற்கு ஒரு சராசரி மசாலா தோசை அதாவது கதை போலத் தோன்றும் இந்தத் திரைப்படம், தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியை வேறு விதமாக ரிவீட் அடித்தது.

நிஜ வாழ்க்கையில் நமக்கொரு அநீதி நடந்தால், நீதிமன்றத்தையோ காவல்துறையையோ நம்புவதை விடுத்து, பெரிய இடத்து செல்வாக்குடைய அடியாட்களிடம் தஞ்சமடைவதே கௌரவம் என்ற காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரம் இதனால் சமூகத்தில் வேரூன்றியது.

பாட்ஷாவுக்கு முன்பு வரை, ஆட்டோக்கள் என்பவை வெறும் போக்குவரத்து வாகனங்கள். பாட்ஷாவுக்குப் பின்பு, அவை நடமாடும் தத்துவப் பள்ளிகளாக மாறின. நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி என்ற இந்த ஒரே ஒரு வசனம், தமிழ்நாட்டின் கணிதவியலையே தலைகீழாகப் புரட்டிப் போட்டது. ஒரு முறை சொல்வதற்கும் நூறு முறை சொல்வதற்கும் இடையே உள்ள பிரம்மாண்டமான நேர மற்றும் ஆற்றல் வித்தியாசத்தை இந்தச் சமூகம் தட்டையாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியது.

பாட்ஷா தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வணிக மைல்கல், பாக்ஸ் ஆபீஸின் இமயமலை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால், தமிழர்களை அது எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

ஒருவன் பம்பாயில் இருக்கும்போது நூறு பேரைக் கொலை செய்யலாம்; கடத்தல் தொழில் புரியலாம்; தாதாவாக வாழலாம். ஆனால், சென்னைக்கு வந்து அமைதியாக ஆட்டோ ஓட்டி, தங்கைக்கோ தம்பிக்கோ பீஸ் கட்டினால் அவன் புனிதன். இந்த ப்ளாஷ்பேக் தியரி, சமூகத்தில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியது. தற்போதைய குற்றவாளிகள் பலரும், நாளை நாம் ஒரு நல்ல காரியம் செய்து இதைக் கழுவிக்கொள்ளலாம் என்ற அசட்டுத் துணிச்சலைப் பெற்றனர். தர்மம் என்பது வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றல்ல, அது ஒரு பார்ட் டைம் ஜாப் என்ற எண்ணத்தை இந்தத் திரைப்படம் விதைத்தது.

அறிவையும் விவேகத்தையும் கொண்டு கட்டமைக்கப்பட வேண்டிய ஒரு சட்டபூர்வ ஜனநாயகச் சமூகத்தை, ஒரு முன்னாள் ரவுடியின் பம்பாய் பிளாஷ்பேக்கைக் கண்டு விசில் அடிக்கும் ஒரு முதிர்ச்சியற்ற கூட்டமாக மாற்றியதில், நாயகனின் அந்த ஆட்டோவிற்கும், பாட்ஷாவின் அந்தப் கோட்டுச் சட்டைக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத கசப்பான உண்மை!

பாட்ஷா என்பது ஒரு கமர்ஷியல் சினிமா மட்டும் அல்ல. அது, அமைதியாக இருப்பவனை உசுப்பிவிட்டால் அவன் உங்களை மிருகம் போல அடித்துத் துவம்சம் செய்வான் என்ற வன்முறைத் தத்துவத்தை, ஆட்டோ என்ற ஏழை எளிய வாகனத்தின் எஞ்சினில் ஏற்றி நம் தலைக்குள் புகுத்திய ஒரு மாஸ் மசாலா சதி.

இப்போதும் சாலையில் போகும்போது ஏதாவது ஆட்டோவின் பின்னால் உள்ளே போ என்றோ, பாட்ஷா என்றோ என்று எழுதியிருந்தால், தயவுசெய்து உள்ளே போகாதீர்கள். அங்கே உங்களுக்காக ஒரு பிளாஷ்பேக் காத்துக்கொண்டிருக்கலாம்! அது உங்களை அடித்துத் துவைத்து ரத்தக் களறியாக்கினால், அதற்கு யார் பொறுப்பு என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.  

*****

No comments:

Post a Comment