16 Jun 2026

மன்மதப் போலியும் திசை மாறிய தலைமுறையும்!

சீரழித்த சினிமா – 14

மன்மதன்

மன்மதப் போலியும் திசை மாறிய தலைமுறையும்!

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டின் நவம்பர் மாதம், தமிழ்ச் சமூகத்தின் எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பாலினச் சமத்துவத்திற்கும் ஒட்டுமொத்தமாக டாட்டா காட்டிவிட்டு, திரையரங்கு வாசலிலேயே சவக்குழி தோண்டப்பட்டது.

தமிழ் சினிமா அதுவரை காட்டிய, காதலி ஏமாற்றினால் வேறு வேலையைப் பார்க்க வேண்டும் அல்லது தாடி வளர்த்துக் கொண்டு, சரக்கடித்துக் கொண்டு தெரு நாயோடு திரிய வேண்டும் என்ற எதார்த்த விதியை அடியோடு மாற்றி, ஒரு பெண் ஏமாற்றினால், ஒட்டுமொத்தப் பெண் இனமுமே மோசடியானது என்று பொதுமைப்படுத்தி, பெண்களைத் தொடர் கொலை செய்வதுதான் ஆகச்சிறந்த ஆண்மை என்ற ஒரு புதுவிதமான வக்கிர அத்துமீறலை தமிழனின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை மன்மதன் திரைப்படத்திற்கு உண்டு.

கடையில் வாங்கி வந்த ஓர் ஆப்பிள் அழுகிப் போய்விட்டது என்பதற்காக, உலகத்தில் இருக்கும் அத்தனை ஆப்பிள் மரங்களையும் வெட்டிச் சாய்க்கும் விசித்திரமான மனநோயாளித்தனம்தான் மன்மதன் காட்டிய சைக்கோதனம். இப்படத்தின் ஆகச்சிறந்த சீரழிவே, ஒரு கொலைகாரனைப் பாதிக்கப்பட்ட அப்பாவியாகவும், பெண்களைத் திருத்தும் அவதாரமாகவும் காட்டியதுதான்.

மன்மதன் என்ற போலிப் புனித வேடமிட்ட கொலையாளி பிம்பமும், காதல் வளர்த்தேன் என்ற அந்தப் போலி நாடகத்தின் மீது பின்னப்பட்ட பின்னணி இசையும், ஓ மன்மதனே என்கிற கிளாமர் போதையும் சேர்ந்து, தமிழ்நாட்டு இளைஞர்களின் மூளையை எப்படி ஒரு கசாப்புக் கடை நிலைக்குக் கொண்டு சென்றது என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த நெறிமுறைக் கல்வி என்ன தெரியுமா? நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கும்போது, அவளுக்கு உங்களைத் தவிர வேறு யாருடனாவது தொடர்பு இருப்பதாக உங்களுக்குத் தெரிந்தால் போதும்; நீங்கள் நேரடியாக நீதிபதியாக மாறிவிடலாம். அவளைக் கொடூரமாகக் கொலை செய்து, பிணத்தை மறைத்துவிடலாம் என்பதுதான்.

ஒரு பெண் ஏமாற்றுகிறாள். அது தவறுதான், தார்மீகக் குற்றம்தான். ஆனால், அதற்குத் தண்டனை? மரணதண்டனை! அதுவும் நீதிமன்றம் கொடுக்கவில்லை, தியேட்டரில் பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரசிகர்களின் கைதட்டல்களுக்கு நடுவே மன்மதன் கொடுத்தார்.

ஏமாற்றுவது துரோகம் என்றால், கொலை செய்வது என்ன?

இந்தியத் தண்டனைச் சட்டம் செக்சன் 302 – கொலைக்குற்றம் போன்ற சட்டங்கள் எல்லாம் மன்மதன் போன்ற கமர்ஷியல் சினிமா நாயகனுக்குப் பொருந்தாது. காதலில் துரோகம் செய்யும் பெண்களைக் கொலை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்றாலும், அது ஆண்குலத்தைக் காக்கும் புனிதமான சமூகச் சேவை என்று இப்படத்தின் மூலம் தமிழ் இளைஞன் நம்பத் தொடங்கினான்.

விளைவு?

இன்றுவரை நிஜ வாழ்க்கையில் ஒரு பெண் தங்களை ஏமாற்றிவிட்டதாகவோ அல்லது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னாலோ, அவளது கேரக்டரைச் சமூக வலைத்தளங்களில் படுகொலை செய்வதோடு நிறுத்தாமல், அவளுக்கு நிஜ வடிவிலேயே வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஓர் ஆபத்தான பெண் வெறுப்புக்கு ஆதிப்புள்ளி இந்தத் திரைப்படம்தான்.

காதல் கொண்டேன் படத்தில் சைக்கோத்தனத்திற்குப் பரிதாபம் தேடினார்கள் என்றால், மன்மதன் படத்தில் ஒட்டுமொத்தப் பெண்களையும் வில்லிகளாகக் காட்டி வன்முறையை நியாயப்படுத்தினார்கள்.

அண்ணன் மன்மதன் செய்யும் அத்தனை உறைபனியூட்டும் கொலைகளையும் பின்னணியில் சோக இசையை ஒலிக்க விட்டு, அவன் பாவம், அவனோட தம்பி காதலிச்ச பெண் அப்படிப் பண்ணிட்டா, என்று பார்ப்பவருக்குக் கொலையாளியின் மீது பரிதாபத்தை வரவழைப்பார் இப்படத்தின் நாயக இயக்குனர்.

ஒரு தொடர் கொலையாளியின் வக்கிரமான குற்றங்களை அவனது தம்பியின் ப்ளாஷ்பேக் சோகத்தைக் காட்டி நியாயப்படுத்தி, பார்ப்பவனுக்குக் கொலைக் குற்றத்தின் மீதான பயத்தையே துடைத்து எறிந்ததுதான் இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.

இதன் விளைவாக நிஜ வாழ்க்கையில் ஆயுள் தண்டனை வழங்கிச் சிறையிலடைக்கப்பட வேண்டிய ஒரு குற்றவாளியை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று திரையரங்கில் கொண்டாடி விசிலடிக்கும் ஒரு மிருகத்தனமான பொதுப்புத்தியைத் தமிழன் வளர்த்துக்கொண்டான்.

படத்தின் கிளைமாக்ஸ் தமிழர்களுக்கு விற்ற ஆகச்சிறந்த தத்துவம் என்னவென்றால் தன் தம்பியின் மேல் கொண்ட பாசத்திற்காகவும், அவனது தற்கொலைக்காகவும் ஒழுக்கமற்ற பெண்களைக் கொல்லலாம் என்பதுதான். ஆனால் கூர்ந்து கவனித்தால், அது பாசம் அல்ல; அது ஒரு சுயநல ஆணின் அகந்தை என்பது புலப்படும். . என் தம்பியைத் தற்கொலைக்குத் தூண்டியது போன்ற பெண்கள் எப்படி இன்னும் உயிரோடு வாழலாம்? என்ற நிலப்பிரபுத்துவக் கௌரவக் கொலை மனோபாவத்திற்கு இது மிக நுணுக்கமாகப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆதரவு.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படைப் பகுத்தறிவைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஆண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் சட்டம் நமக்குத் தேவையில்லை, என்ற பாசிச மனநிலையை இது இளைஞர்களிடம் விதைத்தது.

இத்திரைப்படத்திலும் பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை மிகவும் வக்கிரமானது. படத்தின் நாயகி ஒரு புத்திசாலிப் பெண்ணாகக் காட்டப்படுவார். ஆனால், அவரும் கடைசியில் கொலையாளியான நாயகனின் போலித்தனம் நாடகீயத்தனமான கனிவான குணத்தால் காதலில் விழுந்து அவனைக் காதலிக்க துடிப்பார்.

பெண்கள் ஒன்று காதலில் துரோகம் செய்யும் நாகப்பாம்புகள், இல்லை என்றால் கொலையாளியைக் கூட அடையாளம் காணத் தெரியாமல் ஏமாறும் முட்டாள்கள் என்ற இரு முனைகளுக்குள் பெண்களின் ஒட்டுமொத்த ஆளுமையையும் அடியோடு மழுங்கடித்தது இத்திரைப்படம்.

பெண் என்பவள் தனக்கென ஒரு பகுத்தறிவோ, சுய புத்தியோ இல்லாதவள்; அவளை ஆட வைப்பதற்கும், பலியாக்குவதற்கும் மட்டுமே சினிமாவுக்காகப் பயன்படும் ஒரு பொருள் என்பதைத் தமிழனின் ஆழ்மனதில் விதைத்தது மன்மதன்.

மன்மதன் பாக்ஸ் ஆபீஸில் கோடிகளைக் குவித்து, அப்படத்தின் நாயகனை மாஸ் ஹீரோ பிம்பத்தில் ஏற்றியிருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

படம் முழுக்க கிளாமர், இரட்டை அர்த்த வசனங்கள், மன்மத லீலைகள் எல்லாம் தாராளமாக இருக்கும். ஆனால், க்ளைமாக்ஸில் பெண்ணியம் பேசுவது போலவும், பெண்களின் ஒழுக்கத்தைப் பற்றிப் பாடம் எடுப்பது போலவும் ஒரு போலி வேஷம் போடப்பட்டிருக்கும். இதுதான் மிகப்பெரிய சீரழிவு. தீமையைக் காட்டிவிட்டு, நான் நன்மையைத் தான் போதிக்கிறேன் என்று சொல்வது போன்ற அப்பட்டமான ஏமாற்று வேலை இது.

மன்மதன் என்பது வெறும் படமல்ல; அது ஒரு சமூக மனநோயின் திரை வடிவம். காதலைக் காமமாகவும், காமத்தைக் கொலையாகவும், கொலையை நியாயமாகவும் மாற்றிய ஓர் அபத்த ரசவாதம்.

மன்மத லீலைகளை ரசிப்பதாக நினைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழனின் நிஜ வாழ்க்கைக்கான பாலினச் சமத்துவத்தை அடியோடு சீரழித்தது இத்திரைப்படம்.

காதல் தோல்வி அடைந்தால் பெண்களைக் கொலை செய்வதுதான் வீரம் என்றும், எல்லாப் பெண்களும் ஏமாற்றுக்காரர்கள் என்று பாட்டுப் பாடுவதுதான் புத்திசாலித்தனம் என்றும், குரூரமான சைக்கோத்தனத்தைக் கொண்டாடுவதே மாஸ் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற பெண் வெறுப்பு சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

1 comment:

  1. உண்மையை உரைக்கின்ற பதிவு

    ReplyDelete