12 Jun 2026

ரொமாண்டிசமான ரௌடியிசமும் பொறுக்கித்தனமும்!

சீரழித்த சினிமா – 10

அமர்க்களம்

ரொமாண்டிசமான ரௌடியிசமும் பொறுக்கித்தனமும்!

தொண்ணூறுகளின் இறுதிக்கட்டம், தமிழ்ச் சமூகத்தின் இளைஞர் பட்டாளம் தங்களின் எதிர்காலத்தைப் பற்றிய சுயசிந்தனையை மொத்தமாகக் கழற்றி எறிந்துவிட்டு, ஒரு புதிய ஆன்டி ஹீரோ போதைக்குள் தங்களை ஒட்டடை அடித்துக் கொண்ட காலம். அதற்குப் பட்டுவாடா செய்யப்பட்ட ஆகச்சிறந்த நச்சுப் பண்டம்தான் 1999இல் வெளியான அமர்க்களம்.

நாயகனின் சிவந்த கண்களும், பரட்டைத் தலையும், திணறடிக்கும் பிஜிஎம்மும் சேர்ந்து, தமிழ்நாட்டு வாலிபர்களின் மூளையை எப்படி அமர்க்களமாய்க் கூசாமல் பதம் பார்த்தன என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.

இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த வாழ்வியல் பாடம் என்ன தெரியுமா?

நீங்கள் ஒரு உருப்படியான வேலைக்கும் போகாமல், தியேட்டரிலேயே குடியேறி, மது அருந்திக் கொண்டு, புகை பிடித்துக் கொண்டு, உள்ளூர் தாதாவுக்கு அடியாளாக அலைந்தாலும், நீங்களும் அல்டிமேட் நாயகன் என்பதுதான்.

படத்தில் வரும் நாயகன் ஒரு சமூக விரோதிக்குத் தேவையான அத்தனை தகுதிகளையும் கொண்டவர். தியேட்டரே வீடு, ரௌடித்தனமே வேலை என்று இருப்பவர்.  அவருக்குப் பின்னால் ஒரு சோகமான அனாதை பிளாஷ்பேக்கை ஒட்டி வைத்து, அவர் செய்யும் அத்தனை பொறுப்பற்ற ரவுடித்தனங்களுக்கும் புனித முலாம்பூசியது அமர்க்களம்.

விளைவு?

நிஜ வாழ்க்கையில் உருப்படாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள் பலரும், தங்களைத் தாங்களே ஒரு அல்டிமேட் ஸ்டாராகக் கற்பனை செய்துகொண்டு, நமக்கும் பின்னாடி ஒரு சோகக் கதை இருக்குடா, என்று தங்களின் சோம்பேறித்தனத்திற்குத் தத்துவார்த்த முட்டுக் கொடுக்கத் தொடங்கினர்.

இப்படத்தில் நாயகன், நாயகியை எப்படிக் காதலிப்பார் தெரியுமா?

முதலில் அவளை மிரட்டுவார், அவளது சம்மதம் இல்லாமல் பின்தொடர்வார், ஒரு கட்டத்தில் அவளைக் கடத்திக் கொண்டு போய் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைப்பார். ஒரு பெண்ணின் தனிமனித சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்கும் இந்தக் கடத்தல் நாடகத்தைத்தான் இத்திரைப்படம் காதலின் நுழைவாயில் என்று கமர்ஷியலாக நமக்கு விற்றது.

ஒரு பெண்ணைக் கடத்தி வைத்து மிரட்டினாலும், அவளுக்குக் கொஞ்சம் சோறு போட்டு, பழைய கதையைப் பேசினால் அவள் உங்கள் மீது உருகிப் போவாள் என்ற ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் வக்கிரத்தைத் தமிழர்களின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை அமர்க்களத்திற்கு உண்டு.

இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு வந்த நைன்டிஸ் கிட்ஸ் பலரும், பெண்களை மதிப்பதை விடுத்து, அவர்களை மிரட்டுவதையும், கடத்துவதையும், வளைப்பதையும்தான் காதலின் ஆகச்சிறந்த பார்முலா என்று நம்பினர்.

இத்திரைப்படத்தின் பாடல்களும், அதன் பின்னணிச் சூழலும் தமிழ்ச் சமூகத்திற்குச் செய்த அபத்த்தமான கலாச்சாரப் பங்களிப்பு அளப்பரியது. கையில் மதுக் கோப்பையோடும், வாயில் சிகரெட்டோடும், தாடியை வளர்த்துக்கொண்டு தியேட்டர் சீட்டில் படுத்துக் கிடக்கும் அல்டிமேட் ஸ்டாரின் பிம்பம், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு புதிய டிப்ரஷன் பேஷனைக் கொடுத்தது.

வாழ்க்கையில் ஒரு தோல்வி அல்லது ஏமாற்றம் வந்தால், அறிவார்ந்த முறையில் அதை எப்படிக் கடப்பது என்று யோசிக்காமல், உடனே கள்ளுக்கடைக்கும் டாஸ்மாக்குக்கும் ஓடிச் சென்று, சத்தமில்லாத் தனிமைக் கேட்டேன் என்று அழுதுகொண்டே பாடுவதுதான் காதலின் இலக்கணம் என்று இத்திரைப்படம் மூலம் போதிக்கப்பட்டது.

நிஜ வாழ்க்கையின் எதார்த்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் துப்பில்லாத ஒரு பலவீனமான, போதைக்கு அடிமையான தலைமுறையை உருவாக்க இந்த ரௌடியிஸ டார்க் ரொமாண்டிசிசம் மிகச் சிறப்பாகப் பயன்பட்டது.

படத்தில் நாயகியின் வளர்ப்புத் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. அவர் தன் மகளைக் கண்டிப்புடனும் ஒழுக்கத்துடனும் வளர்க்க முயல்வார். ஆனால், படம் அவரை எப்படிச் சித்தரிக்கும்? ஒரு வில்லனைப் போலவும், இரக்கமற்ற கோமாளியைப் போலவும் காட்டும். அதேநேரம், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு திரியும் ரவுடி நாயகனை உண்மையான பாசக்காரன் எனக் காட்டும்.

பெற்றோர்களின் நியாயமான கண்டிப்பையும், வளர்ப்பு முறையையும் நம் சுதந்திரத்தைப் பறிக்கும் அராஜகம் என்று இளைஞர்களை எண்ண வைத்து, குடும்பக் கட்டமைப்பிற்குள் ஒரு தேவையற்ற கிளர்ச்சியை இத்திரைப்படம் தூண்டிவிட்டது.

அமர்க்களம் பாக்ஸ் ஆபீஸில் மங்காத்தா நாயகனின் மார்க்கெட்டை இமயமலையில் ஏற்றியிருக்கலாம், நிஜ வாழ்க்கையிலும் அதே நாயகியுடன் அவருக்குத் திருமணத்தை முடித்து வைத்திருக்கலாம். ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுவதைக் கெத்து என்றும், பெண்களை மிரட்டுவதைக் காதல் என்றும், மதுவின் போதையில் விழுந்து கிடப்பதைத் தத்துவம் என்றும் நம்பிய ஒரு முதிர்ச்சியற்ற அமர்க்களமான கூட்டமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச் சீரழிவு!

*****

No comments:

Post a Comment