கிராமியத் தறியின் திரை மகுடம் – பாரதிராஜா!
மனிதர்கள்
எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நகரத்தை நோக்கி ஓடும் மனிதர்களுக்கு மத்தியில்,
ஒரு மனிதன் நகரத்திற்கு ஓடிவந்து, பின் ஒட்டுமொத்த நகரத்தையும் கிராமத்தை நோக்கி ஓடவைத்தார்.
அவர்தான் பாரதிராஜா.
அவருக்குள்
ஒரு விசித்திரமான ஏக்கம் இருந்தது. சினிமா கிராமத்திற்குப் போய்விட்டது, ஆனால் கிராமம்
ஏன் சினிமாவுக்குள் வரவில்லை? என்பதுதான் அது.
சுகாதார
ஆய்வாளர் என்ற அரசுப் பணியைத் துறந்துவிட்டு, சென்னைக்கு அவர் கிளம்பியபோது, அவரிடம்
இருந்தது ஒரு பெட்டி அல்ல; கிராமத்து மனிதர்களின் உணர்வும் வியர்வையும் .
இன்று
ஐம்பத்தியாறு ஆண்டுகள் கழித்து அவர் பத்மஸ்ரீயுடனும், தேசிய விருதுகளுடனும், உயிரற்ற
உடலாகத் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பியிருக்கிறார். மரணம் என்பது ஒரு பயணத்தின் முடிவு
அல்ல, அது ஒரு வட்டத்தின் பூர்த்தி. அவர் கிளம்பிய இடத்திற்கே வந்து சேர்ந்திருக்கிறார்.
பாரதிராஜாவுக்கு
முன்பு வரை தமிழ் சினிமா என்பது அரண்மனைகளிலும், பங்களாக்களிலும், மேல்தட்டு மனிதர்களின்
பட்டு வேட்டிகளிலும் படுத்துறங்கிக் கொண்டிருந்தது. பாரதிராஜா அதை இழுத்துக்கொண்டு
வந்து சேற்றிலும் சகதியிலும் உட்கார வைத்தார்.
ஏவிஎம்,
ஜெமினி போன்ற பிரம்மாண்ட ஸ்டூடியோக்களின் செயற்கை வெளிச்சங்களை உடைத்துவிட்டு, தேனி,
மதுரை, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நிஜமான சூரிய வெளிச்சத்திற்குக் கேமராவைத் திருப்பினார்.
அதுவரை
திரையில் உலா வந்த கார்த்தி, வஸந்த், ராஜா, திவ்யா, காவ்யா, அனிதாக்களுக்கு மத்தியில்
பரட்டை, சப்பாணி, குருவம்மா, மயிலு, பொன்னாத்தா என்ற பெயர்களை உலவவிட்டார். மனிதர்களின்
பெயர்களில்தான் எத்தனை மண்வாசனை!
இதற்கெல்லாம்
உச்சமாக, அதுவரை நடிகர் திலகம் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் உலகநாயகன் என்றும் கொண்டாடப்பட்ட
பிம்பங்களை அவர் கையாண்ட விதம் ஒரு தத்துவார்த்த விந்தை. கமல்ஹாசனை வெறும் கோவணம் கட்ட
வைத்துச் சப்பாணியாக்கினார். சிவாஜி கணேசனைத் தன் ராஜ தோற்றத்தைக் கழற்றிவைத்துவிட்டு
எளிய மனிதனாக முதல் மரியாதை செய்ய வைத்தார். மனிதன் தன் ஆடைகளையும் பகட்டுகளையும் கழற்றி
வைக்கும்போதுதான் அவன் முழுமையான மனிதனாகிறான்; நடிகனும் அப்படித்தான் போல.
வசனங்கள்
என்பவை அதுவரை அடுக்கு மொழிகளாகவும், பிரச்சாரப் பாணி பிரசங்கங்களாகவும் இருந்தன. பாரதிராஜா
அதை கிராமிய மொழி என்று சொல்லப்பட்ட எளிய மக்களின் பேச்சு மொழியாக மாற்றினார்.
பாரதிராஜா
என்னும் திரைசூரியன் ஜூன் 10இல் மறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். மரணம் என்பது உடலுக்கு
மட்டுமே நிகழும் ஒரு சுருக்கமான விபத்து.
அவர்
தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் ஒரு பொன்மகுடம் அல்லது கிராமத்துத் தறியில் நெய்யப்பட்ட
பட்டாடை. அவர் திரையிலிருந்து மறைந்திருக்கலாம், ஆனால் அந்த மண் வாசனை தமிழ் சினிமா
இருக்கும் வரை ஒரு கிராமத்துத் தென்றலாக வீசிக்கொண்டே இருக்கும். ஏனெனில், காற்றுக்கு
மரணம் இல்லை; காற்றோடு கலந்த மண்வாசனைக்கும் மரணம் இல்லை.
*****

No comments:
Post a Comment