சீரழித்த சினிமா – 9
கில்லி
கபடி டூ கடத்தல் – சீரழித்த ஒரு பாஸ்ட் பார்வேர்ட் டெக்னிக்!
இரண்டாயிரங்களின்
நடுப்பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த இளவட்டங்களும் தங்களின் படிப்பு, வேலை,
எதிர்காலம் போன்ற அற்பமான விஷயங்களை மறந்துவிட்டு, ஒரே ஒரு சொல்லுக்குப் பின்னால் பைத்தியமாக
அலைந்தார்கள். அதுதான் கில்லி. 2004இல் வெளியான இத்திரைப்படம், தமிழ் கமர்ஷியல் சினிமாவின்
இலக்கணத்தையே மாற்றி எழுதியது.
கில்லி
என்ற தலைப்பு வைக்கப்பட்டாலும், இப்படம் கிட்டிப்புள் விளையாட்டோடு தொடர்புடையது கிடையாது.
கபடியோடு அதுவும் கமர்ஷியல் கபடி என்ற பெயரில் ஆள் கடத்தலோடு தொடர்புடையது.
தமிழ்நாட்டு
இளைஞர்களின் பொதுப்புத்தியை இப்படம் எப்படி மூர் மார்கெட் ரேஞ்சுக்குச் சீரழித்த்து
என்பதைச் சற்று ஆழமாகக் கீறிப் பார்ப்போம்.
இத்திரைப்படம்
தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த கல்வி தத்துவம் என்ன தெரியுமா?
நீங்கள் வீட்டில் அப்பாவிற்குத் தெரியாமல் பொய் சொல்லிவிட்டு, காலேஜுக்குப் போகாமல்
கபடி விளையாடப் போகலாம். வழியில் யாராவது ஒரு பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், அங்கேயே
கபடியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மதுரையே அலறும் அளவிற்கு ரவுடித்தனம் செய்யலாம்.
படத்தில்
வரும் நாயகன், ஒரு சாதாரணப் போலீஸ் அதிகாரியின் மகன். ஆனால், அவர் சட்டத்தைக் கையில்
எடுக்கும் வேகம் இருக்கிறதே, அது எந்த ஒரு சர்வதேச டானுக்கும் குறைவானது அல்ல.
விளையாட்டு
வீரனாக வர வேண்டுமென்றால் உங்களுக்கு ஒழுக்கமோ, பயிற்சியோ தேவையில்லை; நடுரோட்டில்
ஐம்பது பேரை அடித்துத் துவம்சம் செய்யும் முரட்டுத்தனம் இருந்தால் போதும், என்ற விசித்திரமான
வீரத்தை இத்திரைப்படம் இளைஞர்களின் மூளையில் ஏற்றியது.
இப்படத்தின்
கதையே ஒரு விசித்திரமான முரண்பாடுதான். வில்லன் நாயகியைக் காதலிப்பதாகச் சொல்லி அவளை
மிரட்டுகிறார், பின்தொடர்கிறார், அவளது சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்ய முயல்கிறார்.
இது டாக்சிக் ஸ்டாக்கிங்.
அவரிடமிருந்து
நாயகியைக் காப்பாற்றும் நாயகன் என்ன செய்கிறார்? அவரும் அவளை அவளது சம்மதம் இல்லாமல்
மதுரையிலிருந்து சென்னைக்குக் கடத்திக் கொண்டு வந்து, தன் வீட்டின் பரணில் அடைத்து
வைக்கிறார்!
வில்லன்
செய்தால் அது அராஜகம், ஹீரோ செய்தால் அது காதல் என்ற தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இரட்டை
நிலையை இத்திரைப்படம் மிக நளினமாக நியாயப்படுத்தியது.
பெண்ணின்
பாதுகாப்பு என்ற பெயரில் அவளது தனிமனித சுதந்திரத்தை இரண்டு ஆண்கள் போட்டிப் போட்டுக்
கொண்டு பந்தாடுவதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றி விற்றதுதான் இந்தச் சினிமாவின்
ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.
படத்தில்
நாயகனின் தந்தை ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் தன் மகன் உருப்படாமல் சுற்றுகிறானே
என்று கண்டிப்பதும், சட்டத்தின்படி நடக்க முயல்வதும் படத்தில் எப்படிச் சித்தரிக்கப்படும்
தெரியுமா? அவர் ஒரு காமெடிப் பீஸாகவும், வில்லனுக்குப் பயப்படுபவராகவும், மகனின் கெத்துக்கு
முன்னால் தோற்றுப் போகும் ஒரு பலவீனமான அதிகாரியாகவும் சித்தரிக்கப்படுவார்.
பெற்றோர்களின்
நியாயமான கண்டிப்பையும், சமூக ஒழுங்கையும் நம் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைப் போடும்
வில்லத்தனம் என்று இளைஞர்களை எண்ண வைத்தது இத்திரைப்படம். நிஜ வாழ்க்கையில் வீட்டில்
அப்பாவையும், வெளியில் சட்டத்தையும் மதிக்காமல், நாங்க கில்லிடா என்று சுற்றும் ஒரு
பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்க இத்திரைப்படம் மிகச் சிறப்பாகப் பயன்பட்டது.
இத்திரைப்படத்தின்
ஆகப்பெரும் சாபம், இதன் அசாத்தியமான வேகம். படம் பார்ப்பவனுக்குச் சிந்திக்க ஒரு நொடி
கூட இடம் தராமல் பாடல்களாலும், சண்டைக்காட்சிகளாலும், பஞ்ச் வசனங்களாலும் அவனது பகுத்தறிவை
மழுங்கடித்து, ஒருவிதத் திரைபோதைக்குள் தள்ளிவிட்டது இந்தக் கில்லி.
விளைவு?
திரையரங்கை
விட்டு வெளியே வந்த சராசரித் தமிழன், தன் நிஜ வாழ்க்கையின் வறுமையையோ, வேலையில்லாத்
திண்டாட்டத்தையோ பற்றி யோசிக்காமல், தன்னை ஒரு கில்லியாகக் கற்பனை செய்துகொண்டு அலையத்
தொடங்கினான்.
கில்லி
பாக்ஸ் ஆபீஸில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்தது, அப்படத்தின் நாயகனை தமிழ் சினிமாவின்
வசூல் சக்கரவர்த்தியாக அரியணையில் ஏற்றியது. ஆனால், சமூக ரீதியாக அது தமிழனை எங்கு
கொண்டு போய் நிறுத்தியது?
பொறுப்பில்லாமல்
பொய் சொல்வதைக் கெத்து என்றும், பெண்களைக் கடத்துவதைக் காதல் என்றும், சட்டத்தை மதிக்காமல்
அராஜகம் செய்வதை வீரம் என்றும் நம்பிய ஒரு விறுவிறுப்பான, முதிர்ச்சியற்ற கில்லித்தனமான
சமூகமாகத் தமிழர்களை மாற்றியதுதான் இந்தத் திரைப்படம் செய்த ஆகச்சிறந்த வரலாற்றுச்
சீரழிவு!
*****

No comments:
Post a Comment