2 Dec 2025

வழிமுறைகள் விழிபிதுங்கச் செய்யும் முறைகளாவதா?

வழிமுறைகள் விழிபிதுங்கச் செய்யும் முறைகளாவதா?

ஆதார் யார் தந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தையும் பதில் சொல்லி விடும், இந்திய அரசு தந்ததென.

குழந்தை பிறப்பதற்கு முன்பே செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் எல்.கே.ஜிக்கு சீட் வாங்குவது என்பது இருக்கிறது என்றால், குழந்தை பிறந்த பின்பு செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாக ஆதார் எடுப்பது இருக்கிறது.

ஆதார் இல்லாமல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது, ஆதார் எண் இல்லாமல் வங்கிக் கணக்குத் தொடங்க முடியாது, ஆதார் எண் இல்லாமல் வருமான வரி சமர்ப்பிக்க முடியாது. இப்படி எத்தனையோ முடியாதுகள் இருக்கின்றன. அந்த அளவுக்கு முக்கியமானது ஆதார்.

ஆதாரைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் கூட எடுக்க முடியும். ஆனால் இந்த ஆதாரைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் உங்களை இடம் பெறச் செய்ய முடியாது. இதுதான் இந்தியாவில் நடக்கும் ஆச்சரியம்.

ஆதாரை மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் எத்தனையோ துறைகள் முக்கிய ஆவணமாக ஏற்கும் போது, தேர்தல் ஆணையம் ஏற்காதது விநோதமாக இல்லையா என்ன?

ரொம்ப முக்கியமாக ஒரு முறைக் கடவுச்சொல் எனப்படும் ஓடிபி கூட ஆதாரை நம்பி அனுப்பப்படும் போது, ஆதாரை நம்பி ஒருவரை வாக்காளராக ஏற்பதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?

ஐந்து வயது நிரம்பியவர்களைக் கட்டாயக் கல்விச் சட்டம் மூலமாகப் பள்ளிக்கு ஈர்ப்பது போல, பதினெட்டு வயது நிரம்பியவர்களை வாக்காளர்களாக சேர்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அதை இனி வாக்காளர்களே செய்து கொள்ளட்டும் என்று பொறுப்பை அவர்களின் தலையில் கட்டுவதில் எப்படி இருக்க முடியும் ஜனநாயகப் பெருமை?

நான்கைந்து தேர்தல்களில் வாக்காளர்களாக வாக்களித்த பலரும் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் திருத்தத்தால் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தில் இருப்பது, ஒரு ஜனநாயக நாட்டிற்கு எப்படி ஏற்புடையதாக இருக்கும்?

வாக்காளர் திருத்தப் படிவங்களில் கேட்கப்படுவது போலத் தந்தை மற்றும் தாயாரின் வாக்காளர் எண் குறித்த விவரங்களை எண்பது வயதுக்கு மேல் நிரம்பிய வாக்காளர்கள் எப்படி வழங்க முடியும்? அதுவும் தொகுதி மறுவரையறைகள் நிகழ்ந்த பிறகு இது ஒரு அசாத்திய சாத்தியம்.

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலேயே TN எனத் துவங்கும் உங்கள் பழைய வாக்காளர் எண்ணைக் கொடுத்து விவரத்தைத் தேடினால், அப்படியான விவரங்கள் இல்லை என்பதுதான் முடிவாகக் கிடைக்கும் எனும் போது மேற்கொண்டு உங்களால் என்ன செய்ய முடியும்?

வங்கிகள், வருமான வரித்துறை, யூபிஐ, ஜிபே போன்றவை ஆதாரைப் பயன்படுத்தியே கச்சிதமாகவும் மிகச் சரியாகவும் பணிகளை முடிக்கும் போது தேர்தல் ஆணையமும் ஆதாரைப் பயன்படுத்திக் கனக்கச்சிதமாக ஒரு வாக்காளர் இருமுறை இடம் பெறாமல் வாக்காளர் பட்டியலைச் சரி செய்து விட முடியும்.

சரி பரவாயில்லை, ஆதாரை ஏற்கவில்லை, அது ஒரு பிரச்சனையில்லை என்றால், வாக்காளர் அட்டை என்பது தேர்தல் ஆணையம் வழங்கியதுதானே. அதை வைத்துதானே வாக்காளர்களாக வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர் ஒவ்வொருவரும். அதை நம்பி ஏற்பதில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன சிரமம் இருக்க முடியும்?

இந்தியாவில் பிறந்த ஒவ்வொருக்கும் இந்தியர் என்பது எப்படி இயல்பான குடியுரிமையோ, அப்படி அவர் வாக்களிக்கத் தகுதியுடைய வாக்காளர் என்பதும் இயல்பான உரிமை. அந்த உரிமையை வாக்காளர் திருத்தம் போன்ற காரணங்களால் ஒருவர் கூட இழந்து விடக் கூடாது என்பதில்தான் ஜனநாயகத்தின் சிறப்பு அடங்கியிருக்கிறது.

வாக்காளர் பட்டியலை மிகச் சரியாகச் செம்மைப்படுத்துவதற்குத் தகவல் தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் வளர்ந்து விட்ட இந்த யுகத்தில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. வாக்காளர்களிடம் இன்னும் படிவங்களைக் கொடுத்து, அவர்களால் அறிந்து / தெரிந்து கொள்ள / திரட்ட முடியாத விவரங்களை நிரப்பச் சொல்லி, நிலைதடுமாறச் செய்து, எங்கே தங்கள் வாக்குரிமை பறிபோய் விடுமோ என்கிற ஐயத்திலும் அச்சத்திலும் வைத்திருப்பது நிச்சயமாக பொருத்தமான வழிமுறையும் அல்ல, சரியான வழிமுறையும் அல்ல.

*****

No comments:

Post a Comment