3 Dec 2025

கச்சா எண்ணெய் கச்சடாக்கள்!

கச்சா எண்ணெய் கச்சடாக்கள்!

கச்சா எண்ணெய் இந்த உலகை இயக்கும் கச்சாப் பொருள்.

பூமி சுற்றுவது நின்றாலும் கச்சா எண்ணெய்யை வைத்து சுழலச் செய்து விடலாம் என்கிற அளவுக்குக் கச்சா எண்ணெய் செய்கின்ற மாயம் அநேகம்.

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு எல்லாம் கச்சா எண்ணெய்யின் வாரிசுகள். இந்த வாரிசுகளின் ஆதிக்கத்திலும் அரசியலிலும்தான் சண்டைகள், சச்சரவுகள், போர்கள் எனும் உலகின் தலைப்புச் செய்திகள் உருவாகின்றன.

ஒரு நாட்டில் எந்த வளம் இல்லாவிட்டாலும், கச்சா எண்ணெய் இந்த ஒரு வளம் இருந்து விட்டால் எல்லா வளத்தையும் கொண்டு வந்து விடலாம் என்பதற்கு அரபு நாடுகளே சாட்சி.

இரு சக்கர வாகனம், முச்சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தை மட்டுமல்லாது, உலக அரசியலையும் இயக்குவது இந்தக் கச்சா எண்ணெய்தான் இல்லையா? ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு இன்னும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தது அதற்கு ஆதாரமே தேவைப்படாத சான்றாதாரம்.

டிரம்ப் இப்படியெல்லாம் இந்தியாவை மிரட்டினாலும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கிச் சுத்தகரிக்கும் கச்சா எண்ணெய்யின் பெரும்பகுதி அமெரிக்காவிற்கே பொட்டலம் கட்டப்படுகிறது. இது டிரம்புக்கும் தெரியும், உலகுக்கும் தெரியும்.

ஆனால் ஏன் இப்படி?

அரசியல் என்ற சொல்லின் பொருள் வேறானாலும், உலகம் என்ன சொல்கிறது என்றால் அதைத்தான் அரசியல் என்கிறது. இதைக் கச்சா எண்ணெய்யின் கச்சடா அரசியல் என்றும் சொல்லலாம்.

ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போரை விரும்பவில்லை. தங்கள் எதிர்ப்பை வலுவாகத் தெரிவித்தாலும் ஐரோப்பிய நாடுகளின் வீடுகளில் எரியும் அடுப்பானது ரஷ்யாவின் எரிவாயுவால்தான். அந்த அளவுக்கு ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவை மலிவான விலையில் வாங்கித் தள்ளுகின்றன ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு நாடகமாடி, மலிவு அரசியல் செய்வதற்காக.

உலக அரசியல் என்பதோடு உலகப் பொருளாதாரத்தை இயக்குவதும் கச்சா எண்ணெய்தான். உலகப் பணக்காரர்களின் இயக்கமும் கச்சா எண்ணெயில்தான் நடக்கிறது. இந்தியாவின் முதன்மை பணக்காரரான முகேஷ் அம்பானி இதற்கு நல்ல உதாரணம்.

உலக அரசியலையும் உலகப் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் கச்சா எண்ணெய்யை வைத்துச் செய்யாமல் வேறு எதை வைத்து அவியலும் பொறியலும் அரசியலும் செய்ய முடியும்?

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதுதான் இந்தக் கச்சா எண்ணெயைப் பற்றிப் பின்னிப் பிணைந்துள்ள அரசியல். இதை வைத்து உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை சொக்கட்டான் ஆடலாம். உலகப் பொருளாதாரத்திலிருந்து உள்ளூர் பொருளாதாரம் வரை பரமபதம் ஆடலாம்.

இரண்டாயிரத்தைக் கடந்து விட்ட உலகளாவிய வாழ்க்கை கச்சா எண்ணெய் இல்லாவிடில் ஒரு அடி கூட நகராது என்னும் நிலையில் இந்தத் திரவத் தங்கத்தை வைத்துப் போங்காட்டம் ஆடாவிட்டால் எதையும் செய்ய முடியாது என்ற நிலை வெகு சாமர்த்தியமாக உருவாக்கப்பட்டு விட்டது. ஒரு நாட்டின் அரசாங்கம் வரை அதைச் சுழற்றும் மைய அச்சாகக் கச்சா எண்ணெய் உருமாறி விட்டது.

உதாரணத்துக்கு இந்தக் கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் செலுத்தும் வரியில் ஜிஎஸ்டி அதிகமா அல்லது பெட்ரோல் டீசலுக்கான வரி அதிகமா?

பெட்ரோலுக்கும் டீசலுக்கும் நாம் வரி செலுத்துகிறோமா என்று நீங்கள் கேட்டால், அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்று சுலபமாக இதை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அரசியலை நீங்கள் கச்சா எண்ணெயின் கரும்புகைக்கு மத்தியில் சுவாசிப்பது தெரியாமல் நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு நாள் விலைவாசி எனும் மூச்சுத்திணறல் நேரிடும் போது, உங்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டு விட்டதாகத்தான் நீங்கள் சொல்கிறீர்களே தவிர, உங்கள் நுரையீரல் பாதிப்படையச் செய்யப்பட்டிருக்கிறது என்பதை வசதியாக மறந்து போகிறீர்கள்.

உலக அரசியலில் விளையாடி, உள்ளூர் அரசியலில் வினைபுரிந்து, உங்கள் நுரையீரலை வரிப்புலிகளால் சூறையாடி, இது எதுவும் தெரியாதது போல உங்கள் வாகனத்தில் புகைப் பிடித்துக் கொண்டிருக்கிறது கச்சா எண்ணெய்!

*****

No comments:

Post a Comment