கொசுக்களின் உலகமயமாக்கல்
"பூமிப்பந்து
அதன் எல்லைகளைக் கடந்துவிட்டது" என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்
அலறுகிறார். பாவம், அவருக்குப் பந்து விளையாடத் தெரியவில்லை போலும். எல்லைகளைக் கடப்பதுதான்
பந்தின் இயல்பு. ஆனால், இங்கே எல்லை தாண்டி ஓடுவது பந்தல்ல; உள்ளே இருக்கும் ஆட்டம்.
மனிதகுலத்தின்
ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு நெருப்பு என்கிறார்கள். அன்று குகைக்குள் சிக்கிய சிக்கிமுக்கிக்
கல்லில் தொடங்கிய அந்த ஆதி நெருப்பு, இன்று அண்டார்டிகாவின் பனிப்பாறைகளைத் தின்று
செரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் நாம் ஏற்றிய அடுப்பு,
இப்போது நம்மையே அவித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் இதில் ஒளிந்திருக்கும் தத்துவார்த்த
நகைமுரண்.
அறிவியல்
பூர்வமாகப் பார்த்தால், பூமிக்கு ஒரு பட்ஜெட் இருக்கிறது. உள்ளே வரும் வெப்பம், வெளியே
போகும் கதிர்வீச்சு. வரவு, செலவு கணக்கு சரியாக இருந்தால் பூமி நிம்மதியாக வாழும்.
ஆனால், கடந்த 65 ஆண்டுகளாக பூமியின் கணக்குப்பிள்ளை தூங்கிவிட்டார் போலும். பட்ஜெட்டில்
துண்டு விழுகிறது.
2015
முதல் 2025 வரையிலான பத்தாண்டுகள், இந்த பூமியின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான கோடைக்
காலம். 19ஆம் நூற்றாண்டின் சராசரியை விட 1.43 டிகிரி செல்சியஸ் அதிகம். "வெறும்
ஒன்றரை டிகிரிதானே!" என்று நாம் குளிர்சாதனப் பெட்டியின் ரிமோட்டைத் தேடலாம்.
ஆனால்,
மனித உடலின் வெப்பநிலை ஒன்றரை டிகிரி உயர்ந்தால் அதற்குப் பெயர் காய்ச்சல். பூமிக்கு
இப்போது வந்திருப்பதும் அதே காய்ச்சல்தான். நாமோ, அதற்கு பாராசிட்டமால் போடுவதற்குப்
பதிலாக, இன்னும் கொஞ்சம் கரியமில வாயுவை விசிறிவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
பூமிக்குக்
காய்ச்சல் அடித்தால், முதலில் வியர்ப்பது கடல்களுக்குத்தான். துருவப் பகுதிகளில் இருக்கும்
பனிப்பாறைகள் உருகி ஓடும்.
1980களில்
இருந்த ஆர்டிக் பனிப்பரப்போடு ஒப்பிடும்போது, 2025இல் அது வெறும் 14.19 மில்லியன் சதுர
கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. பனி உருகுவது அழகுதான், அது நம்மை மூழ்கடிக்காத வரை.
1993ஆம்
ஆண்டோடு ஒப்பிடும்போது கடல் மட்டம் 11 சென்டிமீட்டர் உயர்ந்திருக்கிறது. கடல் நிலத்தை
நோக்கி நகர்கிறது. நாம் நிலத்தை ஆக்கிரமித்ததற்கு, கடல் செய்யும் நாகரிகமான ஆக்கிரமிப்பு
இது.
விளைவு?
நிலத்தடி
நீர் உவப்பாக மாறுகிறது. இன்னும் சில பத்தாண்டுகளில், வந்தாரை வாழவைக்கும் சென்னை,
வந்தாருக்கு நல்ல தண்ணீர் தராத நகராக மாறினாலும் வியப்பில்லை.
ஆழ்கடல்களின்
அமிலத்தன்மை கடந்த 41 ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே போகிறது. நாம் காற்றில் கரைக்கும்
கரியமில வாயுவில் 29 சதவீதத்தைக் கடல் தன் நெஞ்சில் சுமக்கிறது. மனிதனின் பாவங்களைக்
கழுவிக் கழுவி, இன்று கடலே நஞ்சாகிக் கொண்டிருக்கிறது.
காலநிலை
மாற்றம் என்பது வெறும் வானிலை அறிக்கை அல்ல; அது ஒரு மருத்துவச் சீட்டு. வெப்பநிலை
உயரும்போது, வெள்ளமும் புயலும் இயல்பாகின்றன. இயற்கையின் இந்த ஆக்ரோஷ தாண்டவத்தின்
பின்னால் வருவதுதான் நீர் மூலம் பரவும் நோய்கள்.
உலக
சுகாதார அமைப்பு ஒரு சுவாரசியமான உண்மையைச் சொல்கிறது: வெப்பம் அதிகமாகும்போது கொசுக்களுக்குக்
காண்டிராக்ட் எடுத்தது போல் கொண்டாட்டமாகி விடுகிறது.
உலகம்
முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு நாம் உருவாக்கிய இந்த உலக வெப்பமயமாதல்தான்
முதன்மைக் காரணம். கொசுக்களைக் கொல்வதற்கு ஆல் அவுட்டைத் தேடும் மனிதன், கொசுக்கள்
வாழ்வதற்கான ஆல் இன் ஆல் சூழலைத்தானே உருவாக்குகிறான்.
மறுபுறம்,
நாட்டின் பொருளாதாரம் மழையின் துளிகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பொய்த்துப் போகும்
பருவமழை, அல்லது முன்கூட்டியே கொட்டித் தீர்க்கும் வெள்ளம் ஆகிய இவை இரண்டுமே வேளாண்மையின்
முதுகெலும்பை உடைக்கின்றன.
வெப்ப
அழுத்தத்தால் இன்று உலகில் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வயலிலும் தொழிற்சாலையிலும்
வேர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளி, தன் உடல்நலனை இழக்கும்போது, அந்த நாட்டின் பொருளாதாரமும்
தானாகவே முடங்கிப் போகிறது.
மனிதன்
விசித்திரமானவன். தான் வாழும்போதும், தன் இறப்புக்குப் பின்னும் தனக்கு இடமளிக்கும்
இந்த பூமிக்கு அவன் தரும் பரிசு கரியும் புகையும் மட்டும்தான்.
பூமிக்குத்
தாகம் எடுக்கிறது. ஆனால், அது தண்ணீருக்கான தாகம் அல்ல; தன்னுயிரைக் காக்கும் மனிதர்களின்
அன்புக்கான தாகம். அந்தத் தீராத தாகத்தைத் தணிக்க நாம் மரங்கள் போன்றவற்றுக்கு உயிர்
கொடுக்கும் உன்னதச் செயல்களைச் செய்ய வேண்டும். இல்லையெனில், பூமி தன் தாகத்தைத் தணிக்க
நம் எல்லோரையும் ஒரே அடியாகக் குடித்துவிடக் கூடும்.
அதுவரை,
காய்ச்சல் அடித்த பூமிப்பந்தின் மீது அமர்ந்து கொண்டு, டெங்கு கொசுக்களோடு அடித்துப்
பிடித்து விளையாட்டு விளையாடலாம்.
*****

No comments:
Post a Comment