7 Aug 2026

குடை மற்றும் ஏணி தத்துவம்

குடை மற்றும் ஏணி தத்துவம்

மழை பெய்யும் போது மனிதன் குடையைத் தேடுகிறான். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறான். மழை நின்ற அடுத்த விநாடி, அதே குடை மூலைக்குத் தள்ளப்படுகிறது அல்லது மறதியாகப் பேருந்திலேயே விட்டுச் செல்லப்படுகிறது.

இங்கே குடைக்குக் கிடைத்த மரியாதை அதன் மீதுள்ள நேசத்தால் அல்ல, மழையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற தேவையால்.

மனிதர்கள் உங்களைக் கொண்டாடுகிறார்கள் என்றால், நீங்கள் அவர்களுக்குப் பயனுள்ள ஒரு குடையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களிடம் அவர்களுக்கு அன்பு இருக்கிறது என்று நினைத்து ஏமாந்துவிடாதீர்கள். அங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது, எனவே குடை தேவைப்படுகிறது, அவ்வளவுதான்.

ஒருவர் உங்களை எந்நேரமும் தேடிக்கொண்டே இருக்கிறார் என்றால், நீங்கள் அவரது வாழ்வில் இறைவன் போன்றவர் என்று அர்த்தமல்ல, அவரது வீட்டு சுத்தியல் போன்றவர் நீங்கள். ஆணி அடிக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் சுத்தியல் பவித்திரமாகத் தேடப்படும்.

நவீன உலகம் என்பது ஒரு மாபெரும் சந்தை. இங்கே உணர்ச்சிகள் கூட பண்டமாற்று அடிப்படையில் தான் இயங்குகின்றன.

எதிர்பார்ப்பு என்பது எப்படி இருக்கிறது என்றால், நான் உனக்கு இதைச் செய்கிறேன், நீ எனக்கு அதைச் செய் என்பதாக இருக்கிறது.

ஏமாற்றம் என்பது எப்படி இருக்கிறது என்றால், அவன் காரியம் முடிந்ததும் என்னை மறந்துவிட்டான் என்பதாக இருக்கிறது.

காரியம் முடியும் வரை காட்டப்படும் அதீத அக்கறையை, நாம் அன்பு என்று தவறாக மொழிபெயர்த்துக் கொள்கிறோம். நேசம் என்பது எந்தக் காரணமும் இன்றி, நிபந்தனைகள் இன்றி மலர்வது. தேவை என்பது இலக்கோடு வருவது. இலக்கு அடைந்ததும், பாதை மாறிவிடும்.

ஓர் ஏணிக்குத் தெரியும், தன்னை மிதித்துக்கொண்டுதான் மனிதர்கள் மேலே ஏறுகிறார்கள் என்று. மேலே ஏறிய பிறகு யாரும் குனிந்து ஏணிக்கு நன்றி சொல்வதில்லை; மாறாக, மேலே இருக்கும் தளத்தின் அழகைப் புகழத் தொடங்கிவிடுவார்கள்.

நம்மில் பலர், பல உறவுகளில் ஏணிகளாகவே வாழ்ந்து முடிந்துவிடுகிறார்கள்.

அவர் என்னைத் தேடி வருகிறாரே, என்று பெருமைப்பட்டுக்கொள்வது அறியாமை. அவருக்குத் வேறு யாரும் கிடைக்கவில்லை, அல்லது உங்களை விடச் சிறந்த கருவி கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. இந்த உண்மையை எவ்வளவு சீக்கிரம் ஒருவர் உணர்கிறாரோ, அவ்வளவு சீக்கிரம் அவன் ஏமாற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அப்படியென்றால் இந்த உலகத்தில் தூய அன்பே இல்லையா?

மனிதர்கள் உங்களை நேசிக்கிறார்களா இல்லையா என்பதை அறிய ஒரே ஓர் எளிய வழிதான் இருக்கிறது. உங்களுக்கு எதையும் செய்யத் துப்பில்லை என்றும், உங்களிடம் தருவதற்கு ஒன்றுமே இல்லை என்றும் உலகிற்கு அறிவியுங்கள்.

அதன் பிறகும் யாராவது ஒருவர் உங்களோடு அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தால், அவரை மட்டும் நம்புங்கள். ஏனெனில், அவர் உங்களை நேசிக்கிறார். உங்களின் வெறும் இருப்பை மட்டுமே நேசிக்கிறார்!

*****

No comments:

Post a Comment