அல்காரிதம் சொல்லித் தர முடியாத
பாடம்!
தொண்டை நரம்பு புடைக்க பத்தொன்பதாம் நூற்றாண்டு பாணியில் ஒரு மணி நேரம் விரிவுரை
ஆற்றும் கல்வி முறையை இன்றைய மாணவர்கள் விரும்புவதில்லை. இதனால் மாணவர்களுக்குக் கவனக்குறைவு
அதிகமாகி விட்டது, பொறுமையில்லை, கற்றலில் ஆர்வமில்லை என்று அர்த்தமில்லை.
மாணவர்கள் இன்று மூன்று மணி நேர கிரிக்கெட் போட்டியை அல்லது ஒரே மூச்சில் எட்டு
அத்தியாயங்கள் கொண்ட ஓடிடி தொடரை கண் இமைக்காமல் பார்க்கிறார்கள். அப்படியென்றால் அவர்களிடம்
கவனம் இல்லாமல் இல்லை, ஆர்வம் இல்லாமல் இல்லை, பொறுமை இல்லாமல் இல்லை. மாணவர்களுக்கு
ஏற்ற சுவாரசியம் கற்பித்தலில் இல்லை என்பதுதான் எதார்த்தம்.
ஒரு காலத்தில் அறிவு என்பது ஆசிரியரின் தலையில் மட்டுமே இருக்கும் அரிய பொருளாக
இருந்தது. அதைப் பெற மாணவர்கள் அவர் பின்னால் கைகட்டி நிற்க வேண்டியிருந்தது. புத்தகங்கள்
புனிதமானவையாகக் கருதப்பட்டன.
ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ். செயற்கை நுண்ணறிவும், இணையமும் அறிவை தெருவோரக்
கடைகளைப் போல ஜனநாயகப்படுத்திவிட்டன.
இன்று தகவல்களை மனப்பாடம் செய்ய வைப்பதற்கு ஆசிரியர் தேவையில்லை. அதை ஓர் எளிய
கூகுள் தேடலோ அல்லது சாட்பாட்டோ நொடியில் செய்துவிடும். அப்படியென்றால், ஆசிரியரின்
வேலை முடிந்துவிட்டதா?
அங்குதான் உண்மையான சிக்கலே தொடங்குகிறது.
செயற்கை நுண்ணறிவால் தகவல்களைக் கொட்ட முடியும். ஆனால், ஒரு மாணவனின் கண்களில்
மின்னும் பயத்தைக் கண்டறிய முடியாது. தோற்றுப்போய் நிற்கும் ஒருவனின் தோளைத் தொட்டு,
பரவாயில்லை, எழுந்து வா என்று சொல்ல முடியாது.
இன்றைய குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே உலகத்தைப் பற்றிய பல்லாயிரம்
அரைகுறைத் தகவல்களுடன் வருகிறார்கள். அந்தத் தகவல்களை யார் தருகிறார்கள்? சமூக வலைத்தளங்களின்
அல்காரிதம்கள்.
வலைதளங்கள் தகவல்களைத் தருகின்றன, ஆனால் அவை விமர்சனச் சிந்தனையைத் தருவதில்லை.
அவை உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன, ஆனால் அதை நிர்வகிக்கும் முதிர்ச்சியை வழங்குவதில்லை.
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் குழந்தைகளின் கைகளைப் பிடித்து நூலகத்திற்கு அழைத்துச்
சென்றார்கள். இன்று அவர்களின் கைகளைப் பிடித்து, போலிச் செய்திகளும், வெறுப்புப் பிரச்சாரங்களும்
நிறைந்த டிஜிட்டல் காட்டுக்குள்ளிருந்து பாதுகாப்பாக அழைத்து வர வேண்டியிருக்கிறது.
இன்றைய குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு.
அவர்கள் அதிகாரத்தை மதிப்பதில்லை, ஆனால் அன்பையும் தகுதியையும் ஆராதிக்கிறார்கள். மாணவனின்
உலகத்தைப் புரிந்து கொள்ள முயலும் ஆசிரியரை அவர்கள் என்றும் மறப்பதில்லை.
இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, ஒரு செய்தியைக் கண்டதும் அதைச் ஆராய, சந்தேகிக்கக்
கற்றுத் தர வேண்டும். மாற்றுக் கருத்துடையோரையும் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ளப்
பழக்கப்படுத்த வேண்டும். மனிதர்களிடம் பரிவு காட்டுவதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
இனி வகுப்பறையில் ஆசிரியர்கள் அமைதியாக இருந்தால், அந்த இடத்தில் சமூக வலைத்தளங்கள்
அமர்ந்து கொள்ளும். பாடப் புத்தகங்களை தாண்டி, மனிதத்தையும் வாழ்க்கைக்கான நிதானத்தையும்
கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டியாக ஆசிரியர் மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
*****

No comments:
Post a Comment