ஆத்மார்த்த அலப்பறைகளும், உபநிடத பல்புகளும்!
ஜெயமோகன்
வழக்கம்போல ஆரம்பத்திலேயே இளைஞர்களைக் கொஞ்சம் வாரிவிடுகிறார். இளமை என்றாலே கொந்தளிப்பு,
தந்தை எதிர்ப்பு, அரசு எதிர்ப்பு என்று சைக்காலஜி பேசுகிறார்.
உண்மையில்
விஷயம் அதுவல்ல; காந்தியின் சத்திய சோதனையை விட, அவரது சரளாதேவி சோதனைதான் வாசிப்பதற்கு
சுவாரசியமாக இருக்கிறது, அவ்வளவுதான்! வங்காளத்து மேட்டிமைவாதம், பாரதியாரின் சிறுகதை,
பிரம்ம சமாஜம் × ஆரிய சமாஜம் என்று ஏகப்பட்ட வரலாற்றுப் பின்னணிகளோடு சரளாதேவி சௌதராணியை
மேடைக்குக் கொண்டு வரப்படுகிறார்.
38 வயதில்,
கணவனும் மகனும் இருக்கும் போதே, 51 வயது காந்தியுடன் கடிதப் போக்குவரத்து நடத்தியிருக்கிறார்
சரளாதேவி. காந்தியோ, தன் வழக்கமான பரிசோதனை பாணியில், இதற்கு “அறிவுத்துணைவி”, “ஆத்மாவின்
தோழி” என்றெல்லாம்
டிசைன் டிசைனாகப் பெயர் வைக்கிறார். நாமெல்லாம் இன்று Platonic Relationship என்று
ஸ்டேட்டஸ் போடுவதைக் காந்தி அப்போதே காந்தியப் பாணியில் டிசைன் பண்ணியிருக்கார்!
அடுத்த
கட்டமாக, திருமணத்தை நோக்கிக் காந்தி முடிவெடுத்தபோதுதான், சுற்றியிருந்த ராஜாஜியும்,
மகாதேவ தேசாயும் பதறிப்போய் அலறுகிறார்கள். இதைச் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்கிறார்கள்.
காந்தியோ விடாமல், “இது உடற்காதல் இல்லப்பா, இன்டெலக்சுவல் ஈர்ப்பு” என்று
வாதாடுகிறார்.
கடைசியில்,
இருபது வயது மகன் தேவதாஸ் வந்து, “அப்பா, அம்மாவைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கள்” என்று
சென்டிமென்ட் பிளாக்மெயில் செய்த உடனே, காந்தி ஒரு லெட்டரைப் போட்டுவிட்டு விலகி விடுகிறார்.
தன் சுயசரிதையில், “என் ஆணவம் என்னை ஒரு தீயாலான பாதைக்குள் கொண்டு செல்லப் பார்த்தது” என்று
இதைக் காந்தியடிகள் சொல்வதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
சரளாதேவி
சும்மா இருக்கவில்லை. காந்திக்கு எதிராகப் பேனாவை எடுத்துப் போர்க்கொடி தூக்குகிறார்.
காந்தி பண்றதெல்லாம் நாட்டுக்குக் கேடு என்று கட்டுரைகளாகக் கொட்டுகிறார்.
இதையெல்லாம்
படித்துவிட்டு நம்ம ஜெயமோகன், காந்தியவாதி ஜி.குமாரபிள்ளையிடம் போய், “சரளாதேவி செம
அறிவாளி சார், அவங்க காந்தியை எதிர்த்தா அதுல நியாயம் இருக்கும்ல?” என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.
அதற்கு குமாரபிள்ளை, “தம்பி, முதல்ல காந்தியைப் படிப்பா” என்று
சில புத்தகங்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.
அங்குதான்
அந்த மகா மெய்ஞ்ஞான விவாதம் நடக்கிறது. சரளாதேவி ஏன் காந்தியைப் புரிந்துகொள்ளவில்லை?
அதற்கு குமாரபிள்ளை, ஈஸோவாஸ்ய உபநிடத வரியை எடுத்துப் போடுகிறார். “அறியாமையில் இருப்பவன்
இருளில் இருக்கிறான்; ஆனால், எனக்கு எல்லாம் தெரியும் என்று அலையும் அறிவுஜீவி, அதைவிடப்
பெரிய இருளில் அதாவது, ஆணவ இருளில் இருக்கிறான்.”
சரளாதேவியின்
கட்டுரைகளில் நான் என்ற வார்த்தைதான் ஓங்கி ஒலித்ததாம். கடைசி காலத்தில் சரளாதேவி இந்த
அறிவுஜீவி ஆணவத்தை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஆன்மிகப் பாதைக்கு மாறி, காந்தியைப்
புரிந்துகொண்டாராம்.
நல்லவேளை!
மெய்யறிவின் ஒளி கிடைத்து, காந்தி குடும்பத்திலேயே தன் மகனுக்குப் பெண்ணும் எடுத்து,
சுபமங்களமாக கதையை முடித்திருக்கிறார்கள்.
எவ்வளவு
பெரிய அறிவாளியாக இருந்தாலும் சரி, சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் சரி ரிஜெக்சன் வந்தால்
முதலில் வருவது கோபமும் வன்மமும்தான். அதுக்கு அறிவு விதிவிலக்கல்ல. அங்க வேலை செய்வது
லிம்பிக் சிஸ்டம், மூளை இல்லை!
சுருக்கமாகச்
சொன்னால், "அறிவின் இருளுக்கு மாற்று அறியாமை அல்ல, மெய்யறிவு" என்பதெல்லாம்
சரிதான். ஆனால், இந்த ஆத்மார்த்த காதல்களும், அது பிரேக் அப் ஆனதும் வரும் வன்மங்களும்,
அப்புறம் வயசானதும் வரும் தத்துவ ஞானங்களும் காலம் காலமாய் உலகத்துல நடக்குற அதே கொசுத்தொல்லைதான்!
அதற்கு
ஏன் உபநிடதத்தை எல்லாம் இழுத்து, பாவம், அந்த இருட்டைக் குத்திக் கிழிக்க வேண்டும்?
ஒருவர் தனது ஈகோவைப் புரிந்து கொண்டால் விசயம் முடிந்தது. இதற்கு ஆன்மீகம்தான் வேண்டும்,
குரு சிஷ்ய பாவம் அவசியம் என்றெல்லாம் ஏன் அநாவசிய ஆணிகளை அடிக்க வேண்டும்?
*****

No comments:
Post a Comment