சீரழித்த சினிமா – 8
வேட்டையாடு விளையாடு
சைக்கோத்தனத்தை மசாலாதனமாக்கிப் பின்னோக்கிப் பாய்ந்த திரை!
இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில்,
தமிழ்ச் சமூகத்தின் கொஞ்ச நஞ்சமிருந்த நிம்மதியும், தூக்கமும் சைக்கோ என்ற ஒற்றை வார்த்தைக்கு
முன்னால் மொத்தமாகப் பலியிடப்பட்டன.
தமிழ் சினிமா அதுவரை காட்டிய லோக்கல் ரவுடிகளையும்,
அரசியல்வாதிகளையும் ஓரமாக உட்கார வைத்துவிட்டு, மருத்துவப் படிப்பு படித்த இரண்டு இளைஞர்கள்
அமெரிக்கா வரை சென்று தொடர் கொலைகள் செய்யலாம்; அவர்களைப் பிடிக்க ஒரு தமிழ்நாட்டு
போலீஸ் துப்பாக்கியோடு உலகம் சுற்றலாம் என்ற ஒரு புதுவிதமான உலகளாவிய அத்துமீறல் பார்முலாவைத்
தமிழ்நாட்டின் பொதுப்புத்தியில் ஏற்றிய பெருமை வேட்டையாடு விளையாடு திரைப்படத்திற்கு
உண்டு.
உலக நாயகனின் மிடுக்கான காக்கிச் சட்டை பிம்பமும்,
பொளந்து கட்டும் தீம் இசையும், நியூயார்க் நகரப் பின்னணியும் சேர்ந்து, தமிழர்களின்
சிந்திக்கும் திறனை எப்படி ஒரு குரூரமான எல்லைக்குள் சுருக்கியது என்பதை ஆழமாகக் கீறிப்
பார்ப்போம்.
இத்திரைப்படம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குக்
கற்றுக்கொடுத்த ஆகச்சிறந்த காவல்துறை ஜனநாயகம் என்ன தெரியுமா? நீங்கள் ஒரு திறமையான
போலீஸ் அதிகாரியாக இருந்தால் போதும், உங்களுக்குச் சர்வதேசச் சட்டங்களோ, எப்.ஐஆரோ,
நீதிமன்ற வாரண்ட்டோ தேவையில்லை. அமெரிக்காவுக்கே சென்றாலும், அங்குள்ள உள்ளூர் போலீஸை
விட உங்களுக்குத்தான் இன்ஸ்டிங்க்ட் அதிகமாக இருக்கும். எவனை வேண்டுமானாலும் சந்தேகத்தின்
பேரில் சுட்டுக் கொல்லலாம்.
படத்தில் வரும் காவல்துறை நாயகன், ஒரு நாகரிகமான
போலீஸாகக் காட்டப்பட்டாலும், அவர் சட்டத்தைக் கையில் எடுக்கும் விதம் அப்பட்டமான அராஜகம்.
வில்லன் சைக்கோ என்பதால், அவனைக் கொல்லும்
போலீஸும் கொஞ்சம் சைக்கோத்தனமாக மாறலாம் என்ற ஆபத்தான சிந்தனையை இத்திரைப்படம் மிக
நளினமாக நியாயப்படுத்தியது.
விளைவு?
நிஜ வாழ்க்கையிலும் குற்றவாளிகளுக்கு மனித
உரிமை எதுக்கு சார்? ஸ்பாட்லேயே போட்டுத் தள்ளுங்க, என்று சட்டத்தின் ஆட்சியைக் கேலி
செய்யும் ஒரு வன்முறைப் பொதுப்புத்தியைத் தமிழர்களிடம் இது ஆழமாக விதைத்தது.
இத்திரைப்படத்தின் ஆகப்பெரும் சாபம், அது வன்முறையைக்
காட்டிய விதம். அதுவரை தமிழ் சினிமாவில் வன்முறை என்பது கச்சாத்தனமான அரிவாள் வெட்டுகளாக
இருந்தன. அதை மிகவும் கிளாஸ் ஆக, ஸ்டைலிஷ் ஆக, மருத்துவக் கருவிகளைக் கொண்டு துண்டு
துண்டாக வெட்டும் குரூரமாக மாற்றி வேட்டையாடி விளையாடியது இத்திரைப்படம்.
கொலையையும், சித்திரவதையையும் ஒரு கலை வடிவம்
போலக் காட்சிப்படுத்தி, பார்ப்பவனுக்கு ஒருவித வக்கிரமான சுவாரசியத்தைத் தந்ததுதான்
இந்தச் சினிமாவின் ஆகச்சிறந்த கமர்ஷியல் தந்திரம்.
இதைப் பார்த்துவிட்டுத் திரையரங்கை விட்டு
வெளியே வந்த சராசரித் தமிழர்கள், தன் சக மனிதர்களை நேசிப்பதை விடுத்து, நமக்குத் தெரியாத
ஒரு சைக்கோ நம்ம பக்கத்துலேயே சுத்திட்டு இருப்பானோ? என்ற தேவையற்ற அவநம்பிக்கையையும்,
மனப்பயத்தையும் தன் மூளையில் ஏற்றிக்கொண்டார்கள்.
படத்தில் வரும் வில்லன்கள் இருவருமே மனநலம்
பாதிக்கப்பட்ட கொடூரக் கொலைகாரர்கள். அவர்களது பெயர்கள் அக்மார்க் தமிழில் அமுதன் மற்றும்
இளமாறன் எனப் பெயரிடப்பட்டிருந்தது, தமிழர்களைச் சைக்கோவாகச் சித்தரிக்க நினைத்த குறியீடோ
என்னவோ?
இத்திரைப்படம் மருத்துவத் துறையையும், மனநலப்
பிரச்சினைகளையும் கையாண்ட விதம் மிகவும் முதிர்ச்சியற்றது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்
என்றாலே அவர்கள் கொடூரமானவர்கள், அவர்களைச் சுட்டுக் கொல்வதுதான் சமூகத்திற்கு நல்லது,
என்ற ஒரு தவறான புரிதலையம் இது பொதுப்புத்தியில் விதைத்தது.
அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும்
அணுக வேண்டிய ஓர் உளவியல் சிக்கலை, வெறும் மசாலா படத்திற்கான வில்லத்தனக் கருவியாக
மாற்றி, சமூகத்தில் மனநலம் பற்றிய தவறான பிம்பத்தை இன்னும் பலப்படுத்தியதுதான் இத்திரைப்படம்
செய்த ஆகச்சிறந்த சீரழிவு.
படத்தின் மிக மோசமான, கசப்பான பகுதி என்னவென்றால்,
அமுதன் மற்றும் இளமாறன் ஆகிய இருவருக்குள் இருக்கும் ஓரினச்சேர்க்கை அல்லது மாற்றுப்
பாலின ஈர்ப்பை ஏதோ ஒரு பெரும் குற்றச்செயல் போலவும், அதுதான் அவர்களைச் சைக்கோக்களாக
மாற்றியது போலவும் சித்தரித்ததுதான். இயற்கைக்கு மாறானவர்கள் என்ற போலி முத்திரையைக்
குத்தி, அவர்களின் பாலியல் அடையாளத்தையே வன்முறையின் ஊற்றுக்கண்ணாகக் காட்டியது இத்திரைப்படம்.
ஒரு முற்போக்குச் சமூகம் பாலின சமத்துவத்தைப்
பேசிக் கொண்டிருக்கும் வேளையில், கமர்சியல் சினிமா தன் கிளைமாக்ஸ் விறுவிறுப்பிற்காகத்
தன்பாலின ஈர்ப்பாளர் மற்றும் மாற்றுப் பாலினத்தவர் மீதான பொதுச் சமூகத்தின் வெறுப்பை
மிகக் கச்சிதமாக மூலதனமாக்கிக் கொண்டது வேட்டையாடு விளையாடு.
தன்னை முற்போக்குக் கலைஞனாகக் காட்டிக் கொள்ளும்
உலக நாயகன் இப்படத்தின் நாயகனாக நடிக்க ஒத்துக் கொண்டு, கமர்ஷியல் காக்டெயிலைத் தமிழ்
மக்களின் வாயில் ஊற்றி, ஒரு வித சைக்கோ போதையில் தள்ளியதுதான் விசித்திரம்.
வேட்டையாடு விளையாடு பாக்ஸ் ஆபீஸில் வரலாறு
காணாத வசூல் சாதனை படைத்தது. படையப்பாவின் வசூலை முந்திக் காட்டியது. உலக நாயகனின்
திரையுலகப் பாதையில் மற்றுமொரு மைல்கல் என்று கொண்டாடப்பட்டது. ஆனால், சமூக ரீதியாக
அது தமிழனை எங்கு கொண்டு போய் நிறுத்தியது?
வன்முறையை ஸ்டைலாகப் பார்ப்பதைக் கெத்து என்றும்,
சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை இன்ஸ்டிங்க்ட் என்றும், பிற மனிதர்களின் அடையாளங்களைச்
சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதை ஓர் ஆளுமை என்றும் மாற்றியதுதான் இந்த வேட்டையாடு விளையாடு
தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையில் நிகழ்த்திய ஆகச்சிறந்த சைக்கோதனமான சீரழிவு!
*****

No comments:
Post a Comment